[X] Close

மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுத் தர தள்ளாடும் வயதிலும் தளராமல் சமூக சேவை: தினமும் தொடரும் நடைபயணம்


ganesan-article

அரியலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் லட்சுமிபிரியா விடம் கோரிக்கை மனு அளிக்கும் சோழன்குடிக்காடு எஸ்.கணேசன் (கோப்புப் படம்) | (உள்படம்) சோழன் குடிக்காடு எஸ்.கணேசன்

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 16:36 pm
  • அ+ அ-

 

பெ.பாரதி

அரசு மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை பெற்றுத் தர, தள்ளாடும் வயதிலும் தளராமல் மனு கொடுத்து வருகிறார் சோழன்குடிக்காடு எஸ்.கணேசன்(80).

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சோழன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லமுத்து என்பவரின் மகனான இவரை அமீனா கணேசன் என்றால்தான் பலருக்கும் தெரியும். அரியலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட நீதிமன்றங்களில் அமீனாவாக பணியாற்றிய இவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.

பணியிலிருந்த போதே மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக தானே முன்வந்து கொடுத்து தீர்வுகாணும் சேவையைச் செய்துவந்தார் கணேசன். இவரால் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் ஏராளம். மக்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையிலான கோரிக்கைகளை இன்றளவும் அரசு அலுவலகங்களில் மனுவாக அளித்துவருகிறார் இவர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் விவசாயிகள், மின்நுகர்வோர், ரேஷன் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் கணேசன், அந்தந்த கிராம மக்களின் அடிப் படைத் தேவைகளுக்காக மனுக் களை வழங்குவதை இன்றளவும் செய்துவருகிறார்.

தனது கிராமத்திலிருந்து பேருந்தில் அரியலூருக்கு தினமும் வரும் கணேசன், மக்களுக்கான கோரிக்கை மனுக்களை அளிப் பதற்காக அனைத்துத் துறை அலுவலகங்களுக்கும் நடந்தே செல்வதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறார். ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டு தன் குடும்பத்தா ருடன் வீட்டில் ஓய்வெடுப்பதை விரும்பாமல், மக்களின் அடிப் படை பிரச்சினைகளுக்காக தனது சொந்த செலவில், சமூக பொறுப்பு ணர்வுடன் பிறருக்கு முன்னு தாரணமாக, தள்ளாத வயதிலும் நடைபயணம் மேற்கொள்ளும் இவரைப் பாராட்டாதவர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

தனது, தன்னார்வ சமூகசேவை குறித்து எஸ்.கணேசன் கூறியது:

நீதிமன்ற ஊழியராக பணியாற் றியபோது தொடங்கிய இந்தச் சேவை, நடைபயணத்தை இன்ற ளவும் மனநிறைவுடன் செய்து வருகி றேன். கண்ணால் காணக்கூடிய குறைகள், பொதுமக்கள் என்னிடம் கூறும் குறைகள் என அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தன்னார் வத்துடன் எனது செலவில் மனுக்களைத் தயார் செய்து பல துறை அதிகாரிகளிடமும் வழங்கி வருகிறேன்.

இதுவரை 2000-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து, அவற்றில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.

ரயில்வே துறையில் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயன்று, அது தீர்வு காணப்படும் போது மக்கள் என்னைப் பாராட்டுகின்றனர். மக்கள் பாராட்டுவதைக் காட்டிலும் நாமும் பலருக்கு பயனுள்ள ஒரு ஜீவனாக இருக்கிறோம் என்ற உணர்வு, அதுதரும் மன நிறைவு வயதான காலத்திலும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

என் காரியங்கள் யாவிலும் கைகொடுக்கிறார் என் மனைவி லட்சுமி. எனது சேவைக்கு ஓய்வூ திய தொகை போதாது என்னும் நிலையில் அவ்வப்போது பணம் கொடுத்து உதவுகிறார் அவர்.

இந்தக் காலத்தில் வருமானம் இல்லாத ஒரு செயலுக்கு ஆதரவு தருவதிலும், சில சமயங்களில் களைப்படையும் போதும், குறை கூறாமல் என்னை உற்சாகம் அளித் துவருவதில் என் மனைவிக்கு பெரும்பங்கு உண்டு.

என் சேவையைப் பார்த்து அது தரும் மன நிறைவால் ஈர்க்கப்பட்ட என் மகன் சோழன் க.குமார், சென்னையில் கல்வி அறக்கட்டளை (சிவஞானம் அம்மாள் கல்வி அறக்கட்டளை) ஒன்றை நிறுவி, கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார் என்று கூறிய கணேசன், "என்னால் முடிந்தவரை இதுபோன்ற சமூக பொறுப்புணர்வுடன் கூடிய சேவையை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை" என்றார் சிறிதும் சோர்விலாத இளைஞரைப் போல மாறாத புன்னகையுடன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close