[X] Close

கோவை ரயில் நிலையத்தில் ‘பார்க்கிங்’ கட்டணக் கொள்ளை: ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை


kovai-railway-station-news

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 16:05 pm
  • அ+ அ-

 

க.சக்திவேல்

கோவை ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களுக்கு காருக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கோவை ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் தங்கள் வாகனத்தை நிறுத்த வசதியாக ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அதேபோல, பின்புற நுழைவுவாயில் அருகேயும் வாகன நிறுத்துமிட வசதி உள்ளது. ஆனால், அங்கு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த மட்டுமே ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

அங்கு, கார், ஜீப்புக்கு முதல் 4 மணி நேரத்துக்கு ரூ.25-ம், 12 மணி நேரத்துக்கு ரூ.60-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேன், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தினால் முதல் 4 மணி நேரத்துக்கு ரூ.120-ம், 12 மணி நேரத்துக்கு ரூ.240-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 மணி நேரத்துக்கு மேல் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. ஆனால், இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றுள்ள இடத்தில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்த அனுமதித்துவிட்டு, காருக்கான பார்க்கிங் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். பலருக்கு கட்டண ரசீதே அளிக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

கூடுதல் கட்டணம் வசூல்

இதுதொடர்பாக கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த பயணி சாந்தகுமார் கூறியதாவது: கடந்த செப்டம்பர் 28-ம் தேதி எனது இருசக்கர வாகனம், மகளின் இருசக்கர வாகனத்தை ரயில் நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் அருகே உள்ள கட்டண பார்க்கிங்கில் நிறுத்தினோம்.

எவ்வளவு நாட்கள் என்றனர். 4 நாட்கள் என்றோம். இரண்டு வாகனத்துக்கும் சேர்த்து கட்டணமாக ரூ.250 பெற்றுக்கொண்டனர். அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் அப்போது எந்த கேள்வியும் கேட்கவில்லை. பின்னர், கடந்த 2-ம் தேதி காலை வாகனத்தை எடுக்க முற்பட்டபோது, ரசீதை வாங்கிப் பார்த்த பார்க்கிங் ஊழியர், ‘5 நாட்கள் ஆகிவிட்டது. எனவே, கூடுதலாக ரூ.140 அளிக்க வேண்டும்’ என்றார்.

எதுக்கு இவ்வளவு பணம் தர வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் கட்டணம் என கேள்வி எழுப்பினேன். அதற்கு அந்த ஊழியர், ‘இங்க டூவிலர் நிறுத்தினாலும் கார் பில்தான் போடுவோம்' என்றார்.

சரி, ரூ.140-க்கு ரசீதாவது கொடுங்கள் என்றேன். அதை தர மறுத்த ஊழியர், ‘நாங்கள் ரயில்வேக்கு தினந்தோறும் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

ரசீது இல்லாமல் கட்டணம் வசூலித்தால்தான் அந்த தொகையை நாங்கள் தர முடியும். எனவே, ரூ.140-க்கு ரசீது தர முடியாது’ என்று கராராக கூறினார். பின்னர், ரசீது தந்தால்தான் பணம் தருவேன் என்று நான் பிடிவாதமாக இருந்ததால், ரசீதை அளித்தனர். ஆனால், பெரும்பாலானோரிடம் பெறப்படும் கூடுதல் கட்டணத்துக்கு அவர்கள் ரசீது அளிப்பதில்லை. மேலும், இருசக்கர வாகனத்துக்கு, காருக்கான பில்லை அளித்துவருகின்றனர். இந்த முறைகேட்டை தடுக்க ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் எவ்வளவு?

இந்த புகார் குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பார்க்கிங்கில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நாங்கள் அனுமதி அளிக்கவில்லை.

எனினும், அவசரமாக வரும் பயணிகளின் வாகனத்தை நிறுத்த ஒப்பந்ததாரர் தரப்பில் அனுமதி அளித்து வருகின்றனர். அப்படி அனுமதி அளித்தாலும் காருக்கான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. விதிகளின்படி, இருசக்கர வாகனத்துக்கு முதல் 4 மணி நேரத்துக்கு ரூ.10, 12 மணி நேரம் வரை ரூ.15, 24 மணி நேரத்துக்கு ரூ.20 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதற்குரிய ரசீதை அளிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பில்லிங் இயந்திரத்திலும் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யப்படும். இதுபோன்ற புகார்களை பயணிகள் 138 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close