[X] Close

சொப்பன சுந்தரி புரோமோவே இப்படின்னா?!


soppana-sundari-promo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Oct, 2018 15:20 pm
  • அ+ அ-

பெயர்தான் சின்னத்திரை ஆனால் வெள்ளித்திரைக்கு சமமாக மக்கள் அபிமானத்தை பெற்றுவிட்டன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கமலின் பிக்பாஸ் வரிசையில், அந்த குடும்ப மாலை டிவியின் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி வரிசையில் இனி வரப்போகும் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியையும் இணைத்துக் கொள்ளலாம். சினிமாவுக்கு டீஸர், ட்ரெய்லர் போல் இந்த நிகழ்ச்சிக்கு புரோமோ களைகட்டத் தொடங்கிவிட்டது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சர்கார் பட இசை வெளியீட்டு விழா இடையே ஒரு நிகழ்ச்சிக்கான புரோமா அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது. அது மாடல் அழகியைத் தேர்ந்தெடுக்கும் ரியாலிட்டி ஷோவாம்.

அந்த நிகழ்ச்சியின் புரோமோ என்னவோ ஒரு சில விநாடிகள்தான் ஓடின ஆனால் அதற்குள்ளதாகவே ஃபேஸ்புக்கில் நெட்டிசன்கள் சிலர் அந்த சேனலுக்கு சப்ஸ்க்ரைப் பண்ண வேண்டும் என்று ஜொல்லுப் பதிவிட்டனர்.

புரோமோவில் பெண்கள் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொள்கின்றனர். ஆங்கில கெட்டவார்த்தைகள் சரளமாகப் புரளுகிறது. அரை நிமிட சொப்பன சுந்தரி புரோமோவே இப்படின்னா?! என்ற கேள்வி எழுகிறது.

சினிமாப் படங்களுக்காவது ஏ, யுஏ என்ற தரச் சான்றிதழ்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டின் வரவேற்பறைக்கே குடும்ப மொத்தமும் காணும்படி வரும் இத்தகைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஒரு வேகத்தடை வேண்டும்.

Broadcasting Content Complaints Council என்றொரு அமைப்பு இருக்கிறது. இது மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் கீழ் தான் இயங்குகிறது. ஆனால், சென்சார் வாரியம் போல் இதுவும் நமக்கு பல கேள்விகளை எழுப்புகிறது.

மெகா ஸ்டார் படங்களில் எதை வேண்டுமானால் எளிதாக அனுமதித்து ஏ சான்று பெற தகுதியான படத்துக்குக்கூட யுஏ கொடுக்கும் சென்சார் வாரியம்தான் மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படங்களில் இயல்பான வசை சொற்களுக்குக்கூட வெட்டு போடுகிறது. அங்கே ஓர் அரசியல் இருப்பதுபோலத்தான் இங்கேயும் இருக்கிறதோ என்னவோ. அதற்கு ஒரு தனி ஆய்வுக் கட்டுரைதான் எழுத வேண்டும்.
ஆனால், அண்மைக்காலமாக தொலைக்காட்சிகளில் பார்க்கும் ரியாலிட்டி ஷோ எல்லாம் பதற்றத்தைத் தருகிறது. சில தமிழ் சேனல்களுக்குத்தான் சைல்டு லாக் போட்டுவிட்டு வேலைக்கு வர வேண்டுமோ என்ற அச்சத்தைக் கடத்துகிறது.

வேலைக்காரன் படத்தில் ஒரு வசனம் வரும். குழந்தைகள் தாங்கள் சாப்பிட விரும்பும் பண்டங்களை ருசிக்காக வாங்குவதில்லை அது பளபளவென காட்டப்படும் விதத்தால் ஈர்க்கப்பட்டு வாங்குகின்றன என ஒரு கதாபாத்திரம் பேசும். இது காட்சியின் வலிமைக்கான சாட்சி. குழந்தைகள் என்ன... குளியல் சோப், பேஸ்ட், பாத்ரூம் கழுவ ஒரு நிறம், டாய்லெட் கழுவ வேறொரு நிறம் எனப் பெரியவர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள்.

அதே காட்சியில் கெட்டவார்த்தைகளை சகஜமாக பேசுவதைக் காட்டினால் குழந்தையின் மனதில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே சினிமாக்களில் வன்முறை தெறிக்க ரத்தம் சொட்ட கொலைகளைக் காட்டி காட்டிதான் தற்போது செய்தித் தொலைக்காட்சிகளில் ஒரு கொலை காட்சியை சிசிடிவி பதிவு என்று காட்டினாலும்கூட எந்த சலனமும் இன்றி பார்க்கும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.

மேடையில் சமமாக நின்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியை ஜாடையாக, சிலேடையாக இரட்டை அர்த்த விமர்சனங்களால் துளைக்கும்போது கோபம் வருகிறது. 

டிஆர்பிக்காக எத்தனை ரியாலிட்டி ஷோ வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். ஆனால், குறைந்தபட்ச கண்ணியத்தையாவது கடைபிடிக்க வேண்டாமா.

இந்த நிகழ்ச்சி குறித்து உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால் புகார் தெரிவிக்கவும் என Broadcasting Content Complaints Council இணைய முகவரி திரையில் ஓடவிடப்படுகிறது. ஆனால் அதற்கும் புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு. புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் என்ற எச்சரிக்கையைப் போல் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறது.

படங்களுக்கு ஏ அல்லது யு/ஏ சான்றிதழ் கொடுத்தாலும், தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒளிபரப்பப்படும்போது சம்பந்தப்பட்டக் காட்சிகளை நீக்கி, மறுபடியும் சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றால் மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியும். காரணம், குழந்தைகளும் அதைப் பார்க்க நேரிடலாம் என்பதால் இப்படியொரு சட்டம் இருக்கிறது.

படங்களுக்கு மட்டும் இவ்வளவு விதிமுறைகளை வைத்துவிட்டு, ரியாலிட்டி ஷோ அல்லது சீரியல்களில் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என இஷ்டத்துக்கு சுதந்திரம் கொடுப்பது சமூகத்தைச் சீரழித்துவிடும் என்று கருதுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

சில கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தால்தான் தரம் உறுதிசெய்யப்படும். மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close