[X] Close

கட்டப்பாவுக்கு ஹேப்பி பர்த் டே! - வாழ்த்துகள் சத்யராஜ் சார்!


sathyaraj-birthday

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 13:05 pm
  • அ+ அ-

தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்தவர்கள் என்றொரு பட்டியல் உண்டு. எம்ஜிஆரைப் பிடிக்காதவர்களும் உண்டு. சிவாஜியை ரசிக்காதவர்களும் இருக்கிறார்கள். கமல் பிடிக்கும் ரஜினி பிடிக்காது என்றும் ரஜினி பிடிக்கும் கமல் பிடிக்காது என்றும் சொல்லுபவர்கள் உண்டு. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, அஜித், விஜய்... என யாரைப் பிடித்திருந்தாலும் எல்லோருக்கும் பிடித்தமானவர்கள் என்றொரு பட்டியலைப் போட்டால், அதில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துவிடுபவர்... சத்யராஜ்.

கமல் இருவேடங்களில் நடித்து, சக்கைப்போடு போட்ட படம் சட்டம் என் கையில். இயக்குநர் டி.என்.பாலு இயக்கிய இந்தப் படம்தான் சத்யராஜின் முதல் படம். அப்படி வந்துவிட்டு இப்படிப் போய்விடுவார். அதன் பிறகு வந்த ஏணிப்படிகள் படத்தின் மூலமாக, வளர்ச்சிக்கான இன்னும் இரண்டு படிகள் முன்னுக்கு வந்தார்.

82ம் ஆண்டு மூன்று முகம், பகடை பனிரெண்டு, பாயும்பலி என மூன்று படங்கள் வந்தன. மூன்றிலும் தெரிவார். ஆனால் பளீரென்கிற கேரக்டர்கள் இல்லை. 82ம் ஆண்டு, தன் கோவை நண்பர் மணிவண்ணன், தன்னுடைய நூறாவது நாள் படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தார். படத்தின் ஹீரோனிக் வில்லன் மோகனை விட, விஜயகாந்தை விட, மொட்டைத்தலையும் சிகப்புக்கலர் கோட்டும் கருப்புக்கண்ணாடியும் போட்டுக்கொண்டு மிரட்டியெடுத்திருப்பார் சத்யராஜ். ‘யோவ்... மோகன் தெரியும், விஜயகாந்த் தெரியும், யாருப்பா அது மொட்டைத்தலையோட?’ என்று ரசிகர்கள் விசாரித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.

மணிவண்ணனின் அடுத்த படமான 24 மணி நேரத்தில் மெயின் வில்லனே சத்யராஜ்தான். இந்த முறை பஞ்ச் ப்ளஸ் ரிப்பீடட் வசனமும் கொடுக்கப்பட்டது. அதுதான் ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே...’ என்பது! மிகப்பெரிய ஹிட்டடித்த வசனம் இது.

அடுத்தடுத்த படங்கள், கேரக்டர்கள், தனி பாணி வசன உச்சரிப்புகள் என தனித்துவ நடிப்பால், மக்களின் மனங்களை கொஞ்சம்கொஞ்சமாக வளைத்துப் போட்டார்.

எனக்குள் ஒருவன், மங்கம்மா சபதம், நான் மகான் அல்ல என்று வரிசையாக படங்கள். இயக்குநர் மணிவண்ணனின் விடிஞ்சா கல்யாணம் படத்தில் அற்புதமான கேர்க்டர். கமலின் தயாரிப்பில் வந்த விக்ரம் படத்தில் சுகிர்தராஜ் எனும் படத்தில் நடிக்கும் போதெல்லாம் நாயகன் ப்ரமோஷன் வந்துவிட்டது.

இதன் பிறகு, கமல் தயாரிப்பில், சத்யராஜ் நடிப்பில், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படம்தான்  அவரை நாயக அந்தஸ்துக்குள் உயர்த்தி நிற்கவைத்தது.

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் மரியாதையில் ஒரேயொரு காட்சியில் வந்து அப்ளாஸ் வாங்கினார். வேதம்புதிது படத்திலும் கடலோரக்கவிதைகள் படத்திலும் மிகப்பெரிய மரியாதையும் வெற்றியும் கிடைத்தது.

காக்கிசட்டை தகடு தகடு ஹிட்டானது. மிஸ்டர் பாரத், ரஜினிக்கு நிகரான அப்பா வேஷம், அபாரம் என்று போற்றப்பட்டது. ‘என்னம்மா கண்ணு செளக்கியமா?’ என்று சொன்னதுதான் இன்று வரை உள்ள செம பஞ்ச் என்று இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

மணிரத்னத்தின் பகல்நிலவு, பாசிலின் பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ஆர்.சுந்தர்ராஜனின் திருமதி பழனிச்சாமி, பி.வாசுவின் வேலை கிடைச்சிருச்சு, மணிவண்ணனின் சின்னதம்பி பெரியதம்பி, முதல்வசந்தம், அமைதிப்படை என்று எல்லாமே சத்யராஜின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு உரமிட்டன. பலம் கொடுத்தன.

’என்னதான் இருந்தாலும் மணிவண்ணன்தான், எனக்கு டயலாக் டெலிவரியை பாலீஷ் பண்ணினார். என் இனிய நண்பர் அவர். நானும் லொள்ளுப்பார்ட்டி. அவரும் லொள்ளுப்பார்ட்டி. கேலிக்கும் கிண்டலுக்கும் வெற்றிக்கும் கேக்கணுமா என்ன?’ என்று சத்யராஜ், நெக்குருகிச் சொல்கிறார்.

பி.வாசுவின் நடிகனிலும் பிரம்மா, வாத்தியார் வீட்டுப்பிள்ளையிலும் பிரதாப் போத்தனின் ஜீவாவிலும் தன் தனி ஸ்டைல் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார் சத்யராஜ். 

அந்த அமைதிப்படை, அமாவாசை, நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, அல்வா, ஓட்டு வித்தியாசம் ஏற ஏற, கால் மேல் கைப்போட்டுக்கொள்வதும், சிகரெட்டை மறைக்காமல் இழுப்பதும், மணிவண்ணனின் ஆளுடன் உறவாடுவதும், தியேட்டரில் அலப்பறைக் கொடுத்து அல்லுசில்லாக்கியது.

சத்யராஜின் இன்னொரு ஸ்பெஷல்... கவுண்டமணி. மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி செம காம்பினேஷன். மூவர் கூட்டணி, தியேட்டரில் தெறிக்கவிட்டதையெல்லாம் மறக்கவே முடியாது. அதேபோல ஷங்கரின் நண்பாவில் புரபஸர் கேரக்டர், வெரைட்டி காட்டி வெளுத்திருப்பார். 

இத்தனை லொள்ளுகள் கொண்ட சத்யராஜின் கேரக்டர்கள் எத்தனையோ இருந்தாலும் பெரியாராக நடித்து வாழ்ந்துகாட்டியிருப்பார். மிகப்பெரிய கவுரவம் சத்யராஜுக்குக் கிடைத்தது.

அதுமட்டுமா... பாகுபலி கட்டப்பா, இன்னும் ஐம்பது வருடங்களுக்கு அவரைக் கொண்டு சேர்த்துவிட்டார்.

கட்டப்பா சத்யராஜ்க்கு இன்று அக்டோபர் 3ம் தேதி பிறந்தநாள். கட்டப்பா வாழ்க... அமாவாசை வாழ்க! சத்யராஜ் வாழ்க!   

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close