[X] Close

டி.ராஜேந்தர் எனும் சுயம்பு... டிஆர் வாழ்க!


trajendhar-birthday

டி.ராஜேந்தர்

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 10:46 am
  • அ+ அ-

சினிமாவில் சுயம்புவாக வந்தவர்களும் குறைவு. தனக்கென தனி பாணியை உருவாக்கியவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி சுயம்புவாகவும் தனி பாணியாகவும் இருந்து பட்டையைக் கிளப்பியவர்... கிளப்பிக்கொண்டிருப்பவர் டி.ராஜேந்தர்.

மயிலாடுதுறைப் பக்கம் கேமிராவைக் கொண்டு வந்து, அந்த ஊரை ஷுட்டிங் ஸ்பாட்டாக்கியது எவரும் செய்யாதது. ஸ்டேஷன்மாஸ்டராகவும் எஞ்சின் டிரைவராகவும் நாயகன் நடிக்கும் படங்களில் கூட, ரயிலை அவ்வளவு காட்டியிருக்கமாட்டார்கள்.

மழைக்குக் கூட காலேஜ் பக்கம் ஒதுங்காதவர்கள் கூட, காலேஜ்னா எப்படி இருக்கும் தெரியுமா? எனக்குத் தெரியும் என்று விவரித்தார்கள். இவையெல்லாம் மயிலாடுதுறையை சொந்த ஊராகக் கொண்டு, கோடம்பாக்கத்துக்குள் வந்த டி.ராஜேந்தரின் ஒருதலைராகம் எனும் முதல்படத்தின் வித்தியாச, சாதனைப் பட்டியல்கள்!

காதலையும் சொல்லாத காதலையும் சொன்ன படங்கள் பல உண்டு என்றாலும் ஒருதலை ராகத்தின் சொல்லாத சோகம், ரசிக நெஞ்சங்களைக் கனக்கச் செய்தது. ‘யோவ் சங்கரு உன் லவ்வைச் சொல்லுய்யா’ என்றும் ‘என்ன சுபத்ரா... உனக்கு இன்னுமா புரியல’ என்றும் நாயகனையும் நாயகியையும் திட்டிக்கொண்டே, அழுதுகொண்டே, சேருங்களேண்டா என்கிற எதிர்பார்ப்புடனேயே பார்க்கச் செய்தார் டி.ஆர். அவர் அதில் அடைந்தது சாதாரண வெற்றி அல்ல. டிரெண்ட் செட்டராக காதலையும் கோடம்பாக்கத்துக்குள் நுழைய விட்டார். கூடவே, கல்லூரியும் சினிமாவில் கதைக்களமானது!

டி.ராஜேந்தர்னா காலேஜ் இருக்கும். மெல்லிய வலியோட காதல் இருக்கும். எல்லாத்துக்கும் மேல சூப்பர்சூப்பர் பாடல்கள் நிச்சயம் இருக்கும் என்று ரசிகர்கள், அடுத்தடுத்த படங்களின் மூலமாக உறுதியாகச் சொன்னார்கள்.

இவரின் ரயில் பயணங்களில் படம், காட்சிக்குக் காட்சி கைத்தட்ட வைத்தது ரசிகர்களை! நினைத்துப் பார்க்கமுடியாத விஷயங்களையெல்லாம் செய்திருப்பார் டி.ராஜேந்தர். படத்தில் நாயகனின் பெயர் வசந்த். ஆகவே, வசந்தம் பாடி வர... என்றொரு பாடல். வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்... என்று ஒரு பாடல். வசந்த ஊஞ்சலிலே என்றொரு பாடல். நாயகியின் கேரக்டர் பெயர் சாந்தி. இவர் எழுதிய அமைதிக்குப் பெயர்தான் சாந்தி பாடல் செம ஹிட்டடித்தது. அந்தக் காலத்தில் சாந்திக்களைக் காதலித்து தோல்வியுற்றவர்களுக்கு இந்தப் பாடல்தான் மாமருந்து.

தமிழ் சினிமாவில் பாலசந்தர்தான் படத்தின் பல காட்சிகளை சிம்பாலிக்காகக் காட்டுவதில் ஈடுபாடு கொண்டு, அதனை ரசனையுடன் வைத்திருப்பார். டி.ராஜேந்தரும் அந்த டைரக்‌ஷன் டச்சிங்கை பல படங்களில், பல இடங்களில் வைத்துக்கொண்டே இருந்தார். அதற்கெல்லாம் கைத்தட்டல்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன. ‘நீ வுடுறது ரியலா, இல்ல ரீலா.. என்று கேட்கும் போது, டூவிலரின் ஒரு சக்கரம் சுற்றும். வெளிநாட்டுக்குப் போயிருக்காரு என்று சொல்லும் போது கேமிரா திரும்பி, சுவரில் உள்ள விமானப் போஸ்டரையோ பறந்துகொண்டிருக்கிற பறவையையோ காட்டும். அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, அவருக்குப் பின்னாடி இருக்கிற வேற ஒரு முகம்... என்று சொல்லும்போது, சம்பந்தப்பட்ட கேரக்டர், சொல்லிக்கொண்டே, ஒரு பொம்மையைத் திருப்பும். அங்கே பொம்மைக்குப் பின்னே வேறொரு முகம் இருக்கும். காதலனுக்கு கல்யாணப் பத்திரிகைக் கொடுக்கும் போது, என் வசந்த் என்று எழுதுவார். என் - வசந்த் நடுவே புள்ளி வைக்க மிஸ் பண்ணிட்டீங்க என்பார் நாயகன். காதலிக்குக் கண்ணீர் வரும். அந்தக் கண்ணீரே அங்கே புள்ளியாகியிருக்கும். சினிமா மொழியை, திரை பாஷையை, மிக லாகவமாகக் கையாண்டு, வார்த்தைகளாலும் பாடல்களாலும் கேமிராக் கோணங்களாலும் அசத்திக்கொண்டே இருப்பார் டி.ஆர்.

டைரக்‌ஷன் மட்டும் போட்ட காலமும் பிறகு திரைக்கதை டைரக்‌ஷன் என்றும் கதை, திரைக்கதை டைரக்‌ஷன் என்றும் கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் என்றும் போட்ட காலம் வந்த போது, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, டைரக்‌ஷன் என்று மிகப்பெரிய பட்டியலோடு பட்டையைக் கிளப்பினார் ராஜேந்தர். அந்தக் காலத்தில் விளையாட்டாக, ‘விட்டா, படத்துக்கு இவரே போஸ்டர் ஒட்டிருவாரு போல’ என்பார்கள்.

ஒருதலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், மைதிலி என்னைக் காதலி, உறவைக் காத்த கிளி, மோனிஷா என் மோனலிசா... என ரைமிங் டைட்டில் பிடிப்பதிலும் ரைமிங் வசனம் எழுதுவதிலும் சூரர். உயிருள்ளவரை உஷா படத்தில், செயின் ஜெயபால் என்ற கேரக்டர் மூலமாகத்தான் நடிக்க ஆரம்பித்தார். ‘எம்பேரு செயினு ஜெயபாலு. உன்னை வுடுறேண்டா ஃபுட்பாலு’ என்றெல்லாம் பஞ்ச் டயலாக்கையும் பஞ்ச் டயலாக் பாடலையும் வைத்து, சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருப்பார்.

டி.ராஜேந்தர் படங்கள், எண்பதுகளில் காதலித்தவர்களுக்கு எனர்ஜி பூஸ்டர். ஐம்பது பைசாவுக்கு பாட்டுப்புஸ்தகத்தை வாங்கிக் கொண்டு, நானும் உந்தன் உறவை, நாடி வந்த பறவை, தேடி வந்த வேளை, வேடன் செய்த வேலை...’ என்று பாடிப்பாடி, தங்கள் காதலையும் வலியையும் தேற்றிக்கொண்டவர்கள் உண்டு.

கிளிஞ்சல்கள், பூக்களைப் பறிக்காதீர்கள் படங்கள், இவர் பாட்டும் இசையும் மட்டுமே தந்த படங்கள். படத்தின் நிறம், மணம், குணமே டி.ஆர். ஸ்டைலுக்கு மாறி, பட்டிதொட்டியெங்கும் ராஜபாட்டை நடத்தும்.

ஒரு படத்தில் எட்டு முதல் பத்துப்பாடல்கள் வைப்பார். பாடலுக்கு பிரமாண்டமான செட்டுகள் போட்டு பிரமிக்கச் செய்வார். அழ வைப்பார். காமெடியும் இருக்கும் செண்டிமெண்ட்டில் போட்டு நம்மை தாளித்துவிடுவார். டி.ராஜேந்தர் படம் பாத்துருக்கியா  என்று எண்பதுகளின் டீன் ஏஜ்காரர்களைக் கேட்டல் கோபமாகிவிடுவார்கள். ‘எத்தினி தடவை பாத்தேன்னு கேளு’ என்று கேள்வி திருத்துவார்கள். அப்படிப் பலமுறை பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்து, கைத்தட்டித் கைத்தட்டி, கண்ணீர் விட்டு படங்களுடன் மெர்ஜானார்கள் ரசிகர்கள்!

டி.ராஜேந்தரை அஷ்டாவதானி என்பார்கள். தனி ஸ்டைலில் முத்திரை பதித்தவர் என்பார்கள். தனிப்பாதையையே உருவாக்கியவர் என்று சொல்லுவார்கள். நெருங்கிப் பழகியவர்கள்... ‘நடிகர் சிவகுமார் மாதிரி, ரொம்ப ஒழுக்கமாவும் உண்மையாவும் நேர்மையாவும் இருக்கறவர் டி.ராஜேந்தர்’ என்பார்கள்.

இன்று அக்டோபர் 3ம் தேதி டிஆருக்குப் பிறந்தநாள். வாயார, மனதார வாழ்த்துவோம் டிஆரை! டிஆர் சார்... வாழ்க வாழ்க!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close