[X] Close

நீராவி இன்ஜினில் மீண்டும் மலை ரயில்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு


nilgiri-train-special

உதகையில் இருந்து நீராவி இன்ஜினுடன் நேற்று இயக்கப்பட்ட சிறப்பு ரயில். படம்:ஆர்.டி.சிவசங்கர்

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 09:15 am
  • அ+ அ-

நூற்றாண்டை கடந்தும் நீராவி இன்ஜினுடன் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது நீலகிரி மலை ரயில்.

நீலகிரி மாவட்டத்தின் அடையாளங்கள் சுற்றுலா மற்றும் தேயிலை. சுற்றுலாவில் முக்கிய இடம்பிடிப்பது நீலகிரி மலை ரயில். நாட்டிலேயே பல் கரம் கொண்ட ஒரே ரயில் பாதை, கடந்த 1898-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நிறுவப்பட் டது. இப்பாதை, 1908-ம் ஆண்டு உதகை வரை நீட்டிக்கப்பட்டது. நூற் றாண்டை கடந்த மலை ரயிலுக்கு, 2005-ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ பாரம் பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலம், வெளி நாடுகளில் இருந் தும் சுற்றுலா வரும் பயணிகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் பயணிப்பதை பொழுது போக்காக கொண்டுள்ளனர்.

இந்த மலை பாதையில் 8 நீராவி இன்ஜின்கள் இயக்கப்பட்டு வந்தன. ஐந்து பெட்டிகள் மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் இயங்கி வந்தன. பின்னர் சரக்குப் போக்குவரத்து லாரிகளில் மாறியதால், ரயிலில் குறைந்தது. இந்நிலையில், தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் உந்து சக்தி குறைந்து நீராவி இன்ஜின்கள் அடிக்கடி பழுதாகி வந்தன.

இன்ஜின் கோளாறால் அடர்ந்த வனப்பகுதியில் மலை ரயில் நின்றதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால், புதிய இன்ஜின்களை உற் பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு, திருச்சி பொன்மலை பணிமனையில் 4 இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. இவை, கடந்த 2011-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தன. பர்னஸ் ஆயில் மூலமாக இயங்கும் வகையில் நீராவி இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டன. மீதமிருந்த நான்கு நீராவி இன்ஜின்கள் காட்சிபொருளாக மாற்றப்பட்டன.

நூற்றாண்டை எட்டிய நிலை யிலும் நீராவி இன்ஜின்கள் இயங்கக்கூடிய நிலையில் உள்ளதால், அவற்றை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் பயன்படுத்த வேண்டுமென, ரயில் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

நூற்றாண்டை எட்டிய நீராவி மலை ரயில் இன்ஜின் புனரமைக்கப் பட்டு, மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. X37384 என்ற எண் கொண்ட நீராவி இன்ஜின், 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு, 1918-ம் ஆண்டு நீலகிரி மலை ரயில் பாதையில் இயக்கப்பட்டது. இந்த நீராவி இன்ஜின், சில ஆண்டுகள் பயணத்தை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில், தனது நூற்றாண்டில் நேற்று மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், உதகை - கேத்தி இடையே சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க 40 முதல் வகுப்பு, 40 இரண்டாம் வகுப்பு என 80 இருக்கைகள் கொண்ட இரு பெட்டிகள், நிலக்கரி மூலமாக இயக்கப்படும் நீராவி இன்ஜினுடன் பொருத்தி இயக்கப்பட்டது.

நேற்று காலை காலை 10.45 மணிக்கு உதகையில் புறப்பட்டு 11.15 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கிருந்து மீண்டும் 11.45 மணிக்கு புறப்பட்டு, 12.15 மணிக்கு உதகை ரயில் நிலையம் வந்தடைந்தது.

இந்த நீராவி இன்ஜின் மீண்டும் இயங்க காரணமான நீலகிரி பாரம்பரிய நீராவி ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜ், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீராவி இன்ஜின்கள் கொண்ட மலை ரயிலில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். எனவே, நீராவி இன்ஜின்களை தொடர்ந்து இயக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், நீராவி இன்ஜின் உதகை ரயில் நிலையம் வந்தபோது, ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களுக்கு மலர்களை கொடுத்து வரவேற்றார்.

சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்த உதகை எம்.எல்.ஏ. ஆர்.கணேஷ், நீராவி இன்ஜின் மூலமாக இயக்கப்படும் சிறப்பு ரயில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நூற்றாண்டில் மீண்டும் பயணத்தை தொடங்கிய நீராவி இன்ஜினை மேட்டுப்பாளையம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மெக்கானிக்கல் பொறியாளர் முத்துகுமார் தெரிவித்தார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close