[X] Close

'அதிகமா சாப்பிடுறவனும் திருடன்தான்! : மகாத்மா 150


mahathma150

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 14:06 pm
  • அ+ அ-

 - இளசை சுந்தரம்

 திருப்பித் தந்த புத்தகம்

1927-ம் வருடம் தமிழகம் வந்த காந்தியடிகள் விருதுநகரில் மூன்று நாள் தங்கியிருந்தார். அப்போது அவருடன் தேசபக்தர் கே.பி. சங்கரலிங்க நாடார் நெருங்கிப் பழகினார். ஊருக்குப் புறப்படும் அன்று, ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருவதாக காந்தியடிகள் வாங்கிச் சென்றார்.

அதைப்பற்றி சங்கரலிங்க நாடார் மறந்தும் விட்டார். நான்குமாதம் கழித்து வர்தாவிலிருந்து அந்தப் புத்தகம் திரும்பி வந்தது. கூடவே ஒரு சிறிய கடிதம்.

"அன்புள்ள சங்கரலிங்கம், தங்கள் புத்தகத்தை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளேன். இந்தப் புத்தகத்தை யார் எடுத்துக்கொண்டு போனாலும் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுத்துவிடவும்"

என்று முன்பக்கத்தில் தாங்கள் எழுதியுள்ள குறிப்பைக் கவனித்தேன்.

இப்படிக்கு

எம்.கே.காந்தி.

மண்ணை ஒற்றிக்கொண்ட காந்தி!

1915-ம் ஆண்டில் காந்தி இரண்டாவது முறையாக சென்னை வந்தார். அவர் மனைவி கஸ்தூரிபாவும் உடன் வந்திருந்தார். சென்னையில் தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய நாளிதழ்களைத் தொடங்கிய பத்திரிகையாசிரியர் கணபதி சுப்பிரமணிய அய்யர் உடல் நலம் குன்றி இருந்தார். தேச பக்தர், பத்திரிகை ஆசிரியர் கணபதி சுப்பிரமணியம் அய்யரைப் பார்த்து அவரின் நலன் விசாரித்தார். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபையில் அரிச்சந்திரா நாடகம் பார்த்தார்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடியவர் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை. போராட்டங்களில் கலந்துகொண்டதால் சிறை தண்டனை பெற்ற அவர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது காந்திஜி அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தாய் நாட்டுக்காக உயிரை விடத் தயாராக இருப்பதாகவும் சிறைவாசம் கண்டு அஞ்சவில்லை என்றும் அவர் துணிவுடன் கூறினார். அவரின் உறுதி... சிறு வயதிலேயே அவருக்குள் இருந்த போராட்ட குணம் காந்திஜியை வியப்பில் ஆழ்த்தியது. இளம் வயதிலேயே காந்திஜியின் வசீகர வார்த்தையில் மயங்கி, ஆட்கொள்ளப்பட்ட அவரின் உயிர் சிறுவயதிலேயே போய்விட்டது. அவரின் தியாகத்தை நினைவில் நிறுத்திய காந்தி... தமிழகத்திற்கு வருகை தந்தபோது தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு மாட்டுவண்டியில் பயணம் செய்தார். மாட்டுவண்டியிலிருந்து இறங்கிய காந்திஜி கண்கலங்கினார். கீழே குனிந்து இருகைகளாலும் அந்த மண்ணை அள்ளி எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். அவரது உறவினர்களை சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்தார்.

தில்லையாடி சென்று வந்த காந்திக்கு சீர்காழி, மாயவரம், பூம்புகார், பொறையார் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி தரங்கம்பாடி கடற்கரையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

காந்தியின் பண்பு போற்றத்தக்கது.

 காந்தியும் பாரதியும்

மகாத்மா காந்தியின் ஐந்தாவது சென்னை விஜயம் 1919-ம் ஆண்டு நடந்தது. அப்போது அவர் சென்னையில் காங்கிரஸ் தலைவர் சேலம் விஜயராகவாச்சாரியார் இல்லத்தில் தங்கி இருந்தார். பாரதியார் காந்திஜியின் சுதந்திர இயக்கங்களைப் பெரிதும் பாராட்டினார். பாரதியார் அடிக்கடி திருவல்லிக்கேணி கடற்கரையிலே சொற்பொழிவு நிகழ்த்துவார். உணர்ச்சிகரமான பாடல்கள் கருத்துகள் நிறைந்த பாரதியாரின் சொற்பொழிவுக்கு நிறைய இளைஞர்கள் வருவார்கள்.

காந்தி சென்னை வந்த சமயம் பாரதி கடையத்திலிருந்து சென்னை வந்து இருந்தார். பாரதியாருக்குக் கடற்கரையிலே கூட்டம் இருந்தது. அதற்குத் தலைமை தாங்க காந்திஜியை கேட்க வேண்டும் என நினைத்தார்.

நினைத்தவுடன் அந்தச் செயலைச் செய்து முடிக்கும் வழக்கமுடைய பாரதியார் உடனே காந்திஜி தங்கி இருந்த இடத்துக்கு வந்தார். யாருடைய அனுமதியும் பெறாமல் நேரே காந்திஜி தங்கி இருந்த அறைக்கு வந்தார். ராஜாஜி, காங்கிரஸ் கட்சி சத்தியமூர்த்தி உட்பட பலர் அறையில் இருந்தனர்.

பாரதியார் காந்திஜியின் அருகில் இருந்த மெத்தையில் அமர்ந்தார்,

“மிஸ்டர் காந்தி, நான் இன்று மாலை கடற்கரையில் பேசப் போகிறேன். தாங்கள் அதற்குத் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டார்.

காந்தி தனக்கு இன்று வேறு பணிகள் இருப்பதாகவும், கூட்டத்தை நாளை வைத்துக் கொள்ள முடியுமா?” எனக் கேட்டார்.

“கூட்டத்தை தள்ளிவைக்க இயலாது" எனக் கூறிய பாரதியார் எழுந்துநின்று "தாங்கள் தொடங்க இருக்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு எனது வாழ்த்துகள்" எனச் சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தார்.

"இவரை நாம் நன்கு பாதுகாக்க வேண்டும்" என்று காந்திஜி அருகில் இருந்தவர்களிடம் கூறினார்.

பாரதியாருக்கு நினைவு மண்டபம் கட்ட தாராளமான உதவி செய்யும்படி காந்தியார் தம் கையெழுத்தைத் தமிழில் போட்டு வேண்டுகோள் விடுத்தது அவர் பாரதியார் மேல் கொண்டு இருந்த பேரன்புக்குச் சான்று.

காந்திஜியின் உணவுக்கொள்கை!

1925-ம் ஆண்டு தமிழகம் வந்திருந்த காந்திஜி திருச்செங்கோடுக்கு 11 கி.மீ. தொலைவில் உள்ள புதுப்பாளையம் என்ற கிராமத்திற்கு வருகை புரிந்தார். அப்போது காந்தியப் பற்றாளர் விடுதலைப் போராட்ட உணர்வாளர் ரத்தின சபாபதி கவுண்டர் தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.

அவரைப் பார்க்க அந்தக் கிராமமே திரண்டு வந்திருந்தது. அப்போது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்திலிருந்து இளநீரை வெட்டி அவருக்கு அன்போடு கொடுத்தனர். இளநீரைப் பருகிய காந்திஜி, சுவை நன்றாக இருக்கிறது எனக் கூறினார்.

உடனே வேறு ஒரு இளநீரை வெட்டி காந்திஜிக்கு கொடுத்தார்கள். தாகமாக இருந்ததாலும் அதன் சுவையாலும் அந்த இளநீரை வாங்கிக் குடித்தார் காந்திஜி.

இரண்டு இளநீரை காந்தி குடித்து முடித்தவுடன் மேலும் ஒரு இளநீர் வெட்டி காந்திஜிக்கு கொடுத்தார்கள். அதை வாங்க மறுத்த காந்தி அளவுக்கு மேல் சேமிப்பவன் மட்டுமல்ல, சாப்பிடுபவனும் திருடன்தான் என்றார். அவருடைய உணவுக் கொள்கை கிராம மக்களுக்கு வியப்பை அளித்தது.

 காந்திஜியும் காமராஜரும்!

25.1.1934 -ல் தூத்துக்குடி, ராஜபாளையம், சிவகாசி வழியாக விருதுநகருக்கு வந்தார் காந்திஜி. பயங்கர மழை. கொட்டும் மழையிலும் பயணத்தைத் தொடர்ந்தார் காந்திஜி.

அவரை எதிர்கொண்டு அழைத்துவர பெருந்தலைவர் காமராஜர் சென்றார்.

விருதுநகரிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் காந்தியையும், அவரது குழுவினரையும் தடுத்து நிறுத்தினார். “விருதுநகரில் சுற்றுவட்டாரத்திலிருந்து பெருமளவு பொதுமக்கள் கூடி இருக்கின்றனர். தெருவில் வண்டி போகக்கூட இடமில்லை. நீங்கள் இங்கே உள்ள இந்த பங்களாவில் தங்கி இருங்கள். நான் உங்களுக்கு புதுத் துணிமணிகள் வாங்கிக்கொண்டு - பண முடிப்பை இங்கேயே கொண்டு வந்து விடுகிறோம்" என்று சென்றார்.

காந்திஜி அங்கே தங்கி மாலை பிரார்த்தனையை முடித்துக் கொண்டார். அடைமழை காரணமாக மழையில் முழுமையாக நனைந்துவிட்ட துணிகளுக்கு மாற்றாக பல சிரமங்களைத் தாங்கி புதுத் துணிமணிகளை வாங்கிக்கொண்டு வந்தார் காமராஜர். புதுத் துணிமணிகளை அணிந்துகொண்டு சுமார் இரவு எட்டு மணியளவில் பொதுமக்களை விருதுநகரில் சந்தித்து பண முடிப்பைப் பெற்றுக்கொண்டு மதுரைக்குப் பயணம் ஆனார் காந்திஜி.

விருதுநகர் பண முடிப்புப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான காமராஜரைப் பாராட்டினார் காந்திஜி.

விடுதலைப் போராட்ட வீரராக அன்று திகழ்ந்த காமராஜர்தான் பின்னாளில் - இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக, “கிங் மேக்கராக” உயர்ந்தார்.

காந்தியடிகளும் தமிழும்!

காந்தியடிகளுக்குத் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்றுதல் உண்டு. தமிழ்மொழியை கற்க விரும்பினார். ஆனால் இதற்கென நேரம் அமையவில்லையே என வருந்தியது உண்டு.

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக சத்தியாக்கிரக இயக்கம் தொடங்கியபோது அவருக்குத் துணையாக நின்றவர்கள் தமிழர்களே!

பீனிக்ஸ் என்ற ஊரில் இவர் அமைத்த ஆசிரமத்தில் தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்றனர். அவர்களுக்குத் தாய்மொழியாகிய தமிழிலேயே கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார்.

1937-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை இந்தி பிரச்சார சபையில் பாரதிய சாகித்ய பரிசாத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் தலைவர் காந்தியடிகள் ஆவார். மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள்.

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் சொற்பொழிவைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த காந்தியடிகள் தமது உரையில் சாமிநாத ஐயர் அவர்களைப் பார்க்கும்போதும், அவர் பேச்சைக் கேட்கும்போதும் அவரது காலடியின் கீழிருந்து தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டாகிறது என்று குறிப்பிட்டார்.

பின்னர் தமிழ் கற்றுக்கொள்ள நாள்தோறும் அரை மணி நேரம் ஒதுக்கினார்.

அதுதான் காந்தி!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close