[X] Close

நான் சம்பாதிக்கிறது எல்லாமே காந்திக்குத்தான்!- வியப்பூட்டும் கோவை தங்கவேலு


thangavelu-gandhi

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 12:35 pm
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

அக்கம்பக்கத்தினர் விநோதமாகப் பார்த்தாலும், பேசினாலும் அதையெல்லாம் சட்டைசெய்யாமல் கடந்த 50 ஆண்டுகளாக காந்தியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் தங்கவேலு. கதர் சஃபாரி ஸூட். கழுத்தில் காந்தி உருவம் பொறித்த வெள்ளிப் பதக்கம், சட்டையின் மேல் பட்டனில் காந்தி படம் பொறித்த காங்கிரஸ் பேட்ஜ், அதற்கு இடதுபுறம் நேரு, திருவள்ளுவர், காமராஜர் உருவத்துடன் கூடிய நாணயங்கள் ஒட்டப்பட்ட லேமினேஷன் பேக்கிங். வலதுபுறம் ‘INDIA‘ என்ற வார்த்தை தங்கமாய் மின்னும் தேசியக்கொடி. இதையெல்லாம் அணியாமல் ஒருநாளும் தங்கவேலு தனது வீட்டைவிட்டு வெளியேறியது இல்லை.கோவை, சரணவம்பட்டியில் உள்ளது இவரது வீடு.

தனது வீட்டின் முகப்புச் சுவர் முழுக்க தமிழ், இந்தி, ஆங்கிலம் என வாசகங்களால் நிறைத்து வைத்திருக்கிறார். 1969-ல் காந்தி நூற்றாண்டு விழாவில், தான் கலந்து கொண்ட பாதயாத்திரை தொடங்கி தனது முழு சரித்திரத்தையே வீட்டுச் சுவற்றில் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார் தங்கவேலு. அதுமட்டுமின்றி, தேசத் தலைவர்கள் படங்களும் திருக்குறள் வரிகளும் சமத்துவ சிந்தனைகளும் அந்த வீட்டின் முகப்புச் சுவரை முழுதாய் நிறைத்திருக்கின்றன.

இத்தனையும் போதாதென்று தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் காந்தி, காமராஜர், வள்ளுவர் சிலைகளை வைத்து சின்னதாய் ஒரு கோயிலும் கட்டியிருக்கும் தங்கவேலு, இங்கே தினமும் ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தி வழிபாடும் செய்கிறார். இந்தக் கோயில் சுவரிலும் காந்திய சிந்தனைகள் உள்ளிட்ட வாசகங்கள்!

“1993-ல் இந்தக் கோயிலைக் கட்டினேன்” என்று சொன்ன அவரை நானும் சற்று விநோதமாகவே பார்த்தேன். “உங்கள மாதிரித்தான் எல்லாரும் என்னைய வேடிக்கையா பார்க்கிறாங்க. இன்னைக்கு காந்தியச் சிந்தனை, காந்தியப் பற்று எல்லாம் எல்லோருக்கும் வேடிக்கை விநோதமாத்தான் ஆகிப்போச்சு!” என்றபடியே கணீர் குரலில் தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தார் தங்கவேலு.

 “எனக்கு பூர்வீகமே இதே ஊர்தான். 250 ஏக்கருக்கு மேல நிலம் வச்சிருந்த பட்டக்காரர் பரம்பரை எங்களுது. நான் ரெண்டாம் வகுப்பைத் தாண்டலை. என்னவோ தெரியல... சின்ன வயசுலயே காந்தி மேலே எனக்கு தீராத பக்தி. 1969-ல் காந்தி நூற்றாண்டு விழா. அப்ப, நாடு முழுக்கக் காந்தியக் கொள்கைகளை முழங்கியபடி கிராமம் கிராமமா பாதயாத்திரை நடந்துச்சு. அந்த யாத்திரையில நம்ம பேரூர் பிளாக்ல நானும் இருந்தேன். ஒரு வாரம் நடந்த யாத்திரை காந்தி கோவையில் கால்பதித்த இடமான போத்தனூர் ரயில்வே ஜங்ஷன்ல முடிஞ்சுது. பேரணியில கலந்துக்கிட்டவங்க அப்ப, ‘வாழ்நாள் முழுவதும் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம்!’ன்னு உறுதி எடுத்தாங்க. அப்படி உறுதிமொழி எடுத்தவங்களுக்கு காந்தி பதக்கம் கொடுத்தாங்க. அதுதான் இது” என்றபடி, கழுத்தில் போட்டிருந்த அந்தப் பதக்கத்தை எடுத்துக் காட்டினார் தங்கவேலு.

 தொடர்ந்து பேசிய அவர், “அன்னைக்கு எடுத்த உறுதிமொழியை இப்ப வரைக்கும் மறக்கல. 1970-ல என்னோட வீட்டையும் காட்டையும் கூட்டுறவு வங்கியில அடமானம் வெச்சிட்டு, பம்பாய்க்குப் பயணமாகிட்டேன். அங்கதானே காந்தி 17 வருசம் இருந்தாரு! அந்த மண்ணுல காந்தியாவே வாழ்ந்து பாக்கணும்னுதான் போனேன்.

துறைமுகம் பகுதியில தமிழாளுங்கட்ட மூட்டை தூக்கி, எடுபிடி வேலை செஞ்சேன். அதுல கொஞ்சமா பணம் காசைத் தேத்திக்கிட்டு சொந்தமா ஒரு கடைபோட்டேன். 

கூடவே, அங்க இருந்த மகாத்மா காந்தி அசோசியேஷன்ல சேர்ந்து செக்கரட்டரி யாகவும் ஆனேன். அப்ப அடிக்கடி மொரார்ஜி தேசாய் அங்க வருவார். அப்பெல்லாம் அவரைச் சந்திச்சுப் பேசுனதுல அவர் மீது எனக்கு பற்றுதல் வந்துச்சு” என்று பழைய நினைவுகளில் மூழ்கி வெளியே வந்தவர், “காந்தியக் கொள்கைகளை பரப்புறதுதான் என்னோட லட்சியம். அதனால கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி பிடிவாதமா இருந்தேன். ஆனா, சொந்தபந்தங்கள் விடல. 1992-ல் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் பம்பாய்க்குப் போக முடியல. இங்கேயே தங்கவேண்டியதா போச்சு” என்று ஆதங்கத்துடன் முடித்தார்.

காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கியமான நாட்களில் கோவையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி - கல்லூரிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு தேசியக் கொடிகளையும் பேட்ஜ்களையும் தந்து இனிப்புகளும் வழங்குகிறார். சத்தியசோதனை, திருக்குறள் புத்தகங்களையும் அவ்வப்போது மலிவு விலைக்கு வாங்கி மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். தேசத் தலைவர்கள் பிறந்த நாளின் போது இந்த காந்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் தருகிறார் தங்கவேலு.

தனது காந்தியப் பிரச்சாரத்துக்காக குட்டித் தேர் ஒன்றையும் வடிவமைத்திருக்கிறார் தங்கவேலு. அதை அவ்வப்போது தனது டூவீலரில் ஊர் ஊராகக் கொண்டு சென்று பிரச்சாரம் செய்கிறார். இதற்கெல்லாம் நன்கொடை கேட்டு யாரையும் நாடுவதில்லை. தனது வருமானத்துக்காக, பித்த வெடிப்பைச் சரிசெய்யும் சித்த வைத்தியக் கல் ஒன்றைச் செய்து கடைகளுக்குத் தருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்தே காந்தியப் பிரச்சாரத்துக்கும் செலவு செய்கிறார். சிலசமயம் கடன் கைமீறிப் போகும்போது மனைவியின் நகைகளை அடமானத்துக்குப் போகும். பிறகு, கூடுதலாக உழைத்து அந்த நகைகளை மீட்கிறார். இப்படியே நகர்கிறது இந்த காந்தியவாதியின் அன்றாட நாட்கள். இதெல்லாம்தான் மற்றவர்களை இவரை நோக்கி விநோதப் பார்வை பார்க்க வைக்கிறது.

ஆனாலும், “நான் சம்பாதிக்கிறது எல்லாமே காந்திக்குத்தான். காந்தியத்தை ஆன்மாவாகவே ஏத்துகிட்ட வனுக்கு ஏதுங்க தன்னலம்? இந்த வருசம் காந்தியோட 150-வது வருசம் தொடங்குது. அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி ஒரு வருசத்துக்கு அதை சிறப்பா கொண்டாடணும். அதுக்காக இன்னும் கொஞ்சம் கூடுதலா உழைக்கணும். காந்தியைக் கொண்டாட கைவசம் நிறைய திட்டம் இருக்கு” என்கிறார் 72 வயதைக் கடந்துவிட்ட இந்த நிஜ காந்தியவாதி!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close