[X] Close

தமிழனாகப் பிறந்தால் சாத்தியம் காந்திஜி! மகாத்மா 150 -


mahathma-150

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 11:28 am
  • அ+ அ-

இளசை சுந்தரம்

காந்திஜி தனது தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் ஒருமுறை சென்னையில் தங்கியிருந்தார். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் காந்திஜியைப் பார்க்க வந்தார். கூடவே ரசிகமணி டி.கே.சி. அவர்களையும் அழைத்து வந்தார். காந்திஜியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இவர் மிகச்சிறந்த இலக்கிய ரசிகர், ஆராய்ச்சியாளர், கம்பன் காவியத்தை விளக்குவதில் விற்பன்னர்.

மிகவும் மகிழ்ந்த காந்திஜி, “கம்பன் காவியத்தின் பெருமை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கவிதைச் சிறப்பில் மற்ற ராமாயண நூல்களை விட மேம்பட்டதாமே. அதை முழுமையாக அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு எளிய வழிமுறைகளைச் சொல்லித் தாருங்கள்" என்றார்.

அதற்கு டி.கே.சி. சொன்ன பதில் என்ன தெரியுமா?

“காந்திஜி அவர்களே! அதற்கு ஒரே வழிதான் உள்ளது. கம்பனை நீங்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால் அடுத்த பிறவியில் நீங்கள் தமிழனாகப் பிறந்துவிட வேண்டும்.”

 தில்லையாடி வள்ளியம்மை

பாண்டிச்சேரியைச் சேர்ந்த முனுசாமி முதலியார், தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்கிற ஜானகியைத் திருமணம் செய்துகொண்டு, இருவரும் தில்லையாடியில் வாழ்ந்து வந்தனர். நெசவுத் தொழில் செய்துவந்த இவர்களுக்கு ஆங்கிலேயரின் ஆட்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் பிழைப்பு தேடி தென்னாப்பிரிக்கா சென்றனர். அங்குள்ள ஜோகன்னஸ் பர்க் நகரில் முனுசாமி சிறிது வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

ஜோகன்னஸ் பர்க் அருகே உள்ள கும்பான்டின் என்ற பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு 1898-ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு வள்ளியம்மை என்று பெயர் சூட்டினார். இவர்களின் பூர்வீகம் தில்லையாடி என்பதால் இவர் தில்லையாடி வள்ளியம்மை என அழைக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த இந்தியர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு அடக்குமுறை சட்டங்களைக் கையாண்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த காந்திஜி இந்த அடக்குமுறைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டங்களில் வள்ளியம்மையும் கலந்துகொண்டு சிறை சென்றார்.

சிறு வயதிலேயே நாட்டுப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்டிருந்த சிறுமி வள்ளியம்மை காந்தியடிகளின் இந்தத் தீவிரப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்து 3 மாதம் கடுங்காவல் தண்டனையை அரசு விதித்தது. வள்ளியம்மையும் சிறையிலே அடைக்கப்பட்டார்.

சிறையில் அளிக்கப்பட்ட உணவால் வள்ளியம்மைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே விடுதலை செய்ய அரசாங்கம் முன்வந்தது. ஆனால் இந்தியர்கள் மீது போடப்பட்ட தலைவரியை நீக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை நிறைவேறாததால் அவர் சிறையில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டார்.

இந்தப் போராட்டங்களினால் இந்தியர்கள் மீதான தலைவரியை நீக்க அந்நாட்டு அரசு முன்வந்தது. அதன்பின்னரே வள்ளியம்மை சிறையை விட்டு வெளியே வந்தார். ஆனாலும் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிறையிலிருந்து விடுதலையான 11-வது நாளில் 22.2.1914-ல் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 16.

வள்ளியம்மையின் உடல் பிராம்பாண்டில் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்றுகூடி அந்த வீரச்சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.

தில்லையாடி வள்ளியம்மை வெறும் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் தன் தீவிர நாட்டுப்பற்று மற்றும் விடுதலை வேட்கையால் மகாத்மா காந்தியையே கவர்ந்தார்.

 அண்ணலுக்காக அமைத்த கோயில்

அண்ணல் காந்தியடிகளுக்குக் கோயில் கட்டி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. காந்திக்குப் பல இடங்களில் மண்டபம் கட்டி இருக்கிறார்கள். ஆனால் கோயில் கட்டியது தமிழ்நாட்டில்தான்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகிலுள்ள 'செந்தாம்பாளையம்' என்ற கிராமத்தில்தான் இந்தக் காந்தி கோயில் இருக்கிறது.

1996-ம் ஆண்டு இந்தக் கோயில் கட்ட கால்கோள் விழா நடந்தது. 6.2.97 அன்று குடமுழுக்கு விழா நடந்தது. ரூபாய் 10 லட்சம் செலவில் இந்தக்  கோயில் கட்டப்பட்டது.

கோயிலில் இரண்டு பீடங்கள் உண்டு. ஒரு பீடத்தில் காந்தி சிலையும் இன்னொன்றில் அன்னை கஸ்தூரிபா சிலையும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலில் தினமும் மூணு கால பூஜை தவறாமல் நடக்கிறது. காலை 9 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி ஆகிய மூன்று நேரங்களில் பூஜை நடத்தப்படுகிறது. பூஜை நடத்த தனி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த அர்ச்சகர் காந்தி சிலையை அர்ச்சனை செய்யும்போது காந்தி பெயரிலுள்ள பூஜைப் பாடலைப் பாடி அர்ச்சனை நடத்துவார். கஸ்தூரிபாய் சிலைக்கு கஸ்தூரிபாய் பெயரிலுள்ள அர்ச்சனை பாட்டைப் பாடி பூஜை செய்வார்.

இந்தக் கோயிலின் பிரதான விழாவான கோயில் கொடை அக்டோபர் 2-ல் (காந்தி ஜெயந்தி அன்று) கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறும். அன்று கோயிலில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றுக்குச் சென்று 10 குடங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள்.

மறுநாள் 2-ம் தேதி காலை ஆறு மணியளவில் இருந்து எட்டு மணிக்குள் காந்தி கஸ்தூரிபாய் சிலைகளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

 பூஜைகள் முடிந்ததும் பெண்கள் பொங்கல் வைப்பார்கள். அதன்பின்னர் காந்திய சிந்தனை பற்றிய சிறப்பு சொற்பொழிவுகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

இந்தக்கோயில் உருவாகக் காரணமாக இருந்தவர் அந்த ஊரைச் சேர்ந்த வையாபுரி (67 வயது) என்பவர் ஆவார்.

- தொடரும்

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close