[X] Close

மதுரை அருகே கண்மாய்கள் நிரம்பின: மறுகால் பாயும் தண்ணீரில் மீன் பிடிக்கும் மக்கள் - கிராமங்களில் கரைபுரளும் உற்சாகம் 


peoples-happy-at-madurai

மறுகால் பாயும் பாளையம்பட்டி கண்மாயில் மீன் பிடிக்கும் கிராம மக்கள்.

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 09:50 am
  • அ+ அ-

மதுரை அருகே கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் அதில் மீன் பிடித்தும், குளித்தும் கிராம மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு கால்வாயில் தற்போது தண்ணீர் பாசனத்திற்குப் போக மதுரை மாவட்ட கண்மாய்களில் திறந்துவிடப்படுகிறது. எதிர்பாராத வகையில் நல்ல மழையும் பெய்வதால் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடுகின்றன. இதனால், கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயம் அமோகமாக நடக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையால் மதுரை-நத்தம் சாலை பகுதி கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதில், ஊமச்சிகுளம் அருகேயுள்ள பாளையம்பட்டிக் கண்மாயும் நிரம்பி நேற்று முன்தினம் இரவு முதல் மறுகால் பாய்கிறது. இதனால், பாளையம்பட்டி, காவனூர், சத்திரப்பட்டி, காஞ்சரம்பேட்டை, சின்னப்பட்டி, ஊமச்சிகுளம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் மறுகால் பாய்ந்தோடும் தண்ணீரில் குளித்தும், மீன் பிடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

மந்திகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜ்குமார் கூறுகையில், ‘’10 ஆண்டுகளுக்கு முன் கண் மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வது சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தன. பாளையம்பட்டி கண்மாயில் சுத்தமாக தண்ணீர் இல்லை. தற்போது இந்த கண்மாய் நிரம்பி கடல் போல் தண்ணீர் காணப்படுவதையும், அதில், சிறுவர்கள், இளைஞர்கள் குளிப் பதும், கும்மாளமிடுவதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மறுகால் பாயும் கண்மாய் பகுதிகளில், ஊரே கூடி மீன் பிடிக்கும். கடந்த பல ஆண்டுகளாக அப்படியொரு வாய்ப்புக் கிடைக்காத நிலையில், தற்போது மறுகால் பாயும் கண்மாயில் அதிகாலையில் எழுந்து சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதுமாக நாங்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கெண்டை, கண்ணாடிக் கெண்டை, கட்லா போன்ற மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன ’’ என்றார்.

சங்கிலிமுருகன் என்பவர் கூறுகையில், ‘‘கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வது என்பது நல்ல அறிகுறியாகவே கிராமப்புறங்களில் பார்ப்பார்கள். அதிலும் குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு நிரம்பியிருப்பது, விவசாயிகளுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close