[X] Close

மகாத்மா 150 - ‘சுடுறவன் சுடட்டும்!’


mahathma150

மகாத்மா காந்திஜி

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 09:41 am
  • அ+ அ-

- இளசை சுந்தரம்                                     

மகாத்மா காந்தியைப் பற்றிய  அற்புதமான தகவல்களை தொகுத்து ‘காந்தி 200’ என்கிற நூலாக்கம் செய்திருக்கிறார் பிரபல  பேச்சாளர், அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குநர், மனிதநேய சிந்தனையாளர் - முனைவர் இளசை சுந்தரம்.

கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தத் தொகுப்பில் இருந்து மகாத்மா  காந்தியின் பிறந்த நாளான இன்று...   காந்திக்கும் தமிழகத்துக்கும் தொடர்புடைய சம்பவங்களை  ‘காமதேனு’ இணையதள வாசகர்களுக்கு தொகுத்துத் தருகிறோம். 

இந்தியாவின் சொத்து

காந்திஜி முன்முதலாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள சிராவயல் காந்தி ஆசிரமத்துக்கு வருகை புரிந்தார்.

ஆசிரமப் பணிகள் மிகச் சிறப்பாக நடந்து வருவதைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்த காந்திஜி, அதைப் பொறுப்பேற்று நடத்தும் ப.ஜீவானந்தத்தை அழைத்தார்.

“பொதுவுடைமை இயக்கத் தலைவர்" என்று பின்னாளில் புகழ்பெற்ற அதே ப.ஜீவானந்தம்தான் அவர். அவரிடம் காந்திஜி, “ஆசிரமத்தை மிகவும் நன்றாக நடத்துகிறீர்கள். இந்தச் செலவுக்கு அதிகப் பணம் தேவை. உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா?” என்று கேட்டார்.

அதற்கு ப.ஜீவானந்தம், “சொத்தா? ஓ... இருக்கிறதே. இந்தியாவே என் சொத்துதான்" என்று சொல்லிவிட்டு மெல்லப் புன்னகைத்தார்.

உடனே காந்திஜி, “இல்லை இல்லை நீங்கள்தான் இந்தியாவின் சொத்து" என்றார். அதைக் கேட்டு ஆசிரமவாசிகள் அனைவருமே மகிழ்ந்தனர்.

காந்திஜியின் நினைவாற்றல்

“தமிழ்த்தென்றல்" திரு.வி.க. ஒரு சமயம் காந்திஜியை சந்திக்க அவரது சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றிருந்தார்.

தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அப்போது காந்திஜி, “ஆஹா! உங்களை எனக்கு நன்றாகத் தெரியுமே, நான் சென்னைக்கு முதன்முறையாக வந்தபோது எனது ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்தவர் ஆயிற்றே நீங்கள். மேலும் என் பேச்சில் ஒரு சொற்றொடரை நீங்கள் விட்டு விட்டீர்கள். அதை நான் சுட்டிக் காட்டினேனே" என்றார்.

“எப்போதோ நடந்த ஒரு சிறு தவறு. அதை இன்னும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாரே" என்று காந்திஜியின் நினைவாற்றலை எண்ணி வியந்தார் திரு.வி.க.

 சுடுறவன் சுடட்டும்!

1934-ம் ஆண்டு காந்திஜி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திறந்த காரில் நின்றபடியே அவர் திரளான மக்களுக்குத் தரிசனம் கொடுத்து வந்தார்.

அவருடன் சேர்ந்து பயணம் செய்த அவினாசிலிங்கம் செட்டியார் காந்திஜியிடம், “பாபுஜி! மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேசமயம் மக்களோடு மக்களாக யாராவது எதிரியும் இருக்கக் கூடும் அல்லவா? உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்...?” என்று கவலையோடு கேட்டார்.

அதற்குக் காந்திஜி, “பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவன் உயிரைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அதற்குப் பயந்து கொண்டு எப்போதும் பாதுகாவலோடு செல்பவன் பொது வாழ்க்கையில் ஈடுபடத் தகுதியற்றவன். இந்தத் திறந்த கார் போல எனது நெஞ்சையும் திறந்தே வைத்திருக்கிறேன். இங்கே வேல் பாய்ச்சுகிறவன் பாய்ச்சட்டும். துப்பாக்கியால் சுடுகிறவன் சுடட்டும். எனக்கு அதுபற்றிக் கவலையில்லை" என்றார். அதைக்கேட்ட அவினாசிலிங்கம் செட்டியாரின் உடல் புல்லரித்துப் போயிற்று.

- தொடரும்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close