[X] Close

சிவாஜி ராசி!


sivaji-rasi

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 19:36 pm
  • அ+ அ-

- கே.சந்திரசேகரன் - தலைவர், சிவாஜி சமூக நலப் பேரவை

கே.சந்திரசேகரன்...  திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் பிறந்தவர்.  நினைவு தெரிந்த நாளில் இருந்தே... நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். தொழில்ரீதியாக சென்னை நகருக்கு வந்தவர்...  எந்த நடிகரின் தீவிர ரசிகராக இருந்தாரோ அவரிடமே அவரது  உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்.

நடிகர் திலகம் சிவாஜி ; தனி இயக்கம் கண்டபோதும், பின்னர் ஜனதா தளத் தமிழகத் தலைவராக இருந்தபோதும், கட்சித் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றினார் சந்திரசேகர். 

 சிவாஜி கணேசனின் அவர்கள் மறைவுக்குப் பிறகு, அவருடைய புகழ் பரப்பவும், அவருடைய பெயரால் சமூக சேவைகள் புரியவும், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி செயலாற்றி வருகிறார்.  தற்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப் பிரிவு தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

அவர் நமது காமதேனு இணையதளத்துக்காக... சிவாஜி கணேசனைப் பற்றி எழுதியுள்ள சிறப்புத்  தகவல் தொகுப்பு இது:

* சிவாஜி ராசி என்பது அவர் அறிமுகமான முதல் படத்திலேயே தொடங்கிவிட்டது.  சிவாஜி அவர்களால் தன்னை வாழவைத்த தெய்வம் என்று போற்றப்பட்டவர் பி.ஏ.பெருமாள் முதலியார்.  ஒரு விநியோகஸ்தராக இருந்த பெருமாள் முதலியார், ’பராசக்தி’ படத்துக்குப் பிறகு பெரிய பட முதலாளியாகவும் உயர்ந்தார்!

* இசை இரட்டையர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி அறிமுகமாகிய திரைப்படம் நடிகர்திலகத்தின் ’பணம்’ திரைப்படம்.  இதில் தொடங்கிய இவர்களின் இசைப் பயணம், உலகம் போற்றும் மெல்லிசை மன்னர்களாக வலம் வரச் செய்தது!

* நடிகை அஞ்சலிதேவியின் ’அஞ்சலி பிக்சர்ஸ்’ தயாரித்த முதல் தமிழ் - தெலுங்கு படங்கள் பூங்கோதை  மற்றும் பரதேசி.  இரண்டிலும் கதாநாயகன் நடிகர்திலகம்தான்.  இதன் பிறகு தென்னகத்தின் சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல், பிரபல தயாரிப்பாளராகவும் உயர்ந்தார் அஞ்சலிதேவி!

* பத்மினி பிக்சர்ஸ் அதிபரான பி.ஆர்.பந்துலுவின் முதல் தமிழ்த் தயாரிப்பு சிவாஜி நடித்த ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. இந்தப்  படத்தின் பெருவெற்றி, பந்துலு அவர்களை நாடறிந்த தயாரிப்பாளராக்கியது. பின்னாளில், ’வீரபாண்டிய கட்டபொம்மன்’, ’கப்பலோட்டிய தமிழன்’, ’கர்ணன்’ போன்ற வரலாற்று திரைக் காவியங்களைப் படைக்க உந்து சக்தியாகவும் விளங்கியது. 

* ’பராசக்தி’ படத்துக்குப் பிறகு சிதம்பரம் ஜெயராமனின் குரலும், ;தூக்குத் தூக்கி’ படத்துக்குப் பிறகு டி.எம்சௌந்தரராஜன் குரலும் பட்டிதொட்டியெங்கும் ஓலிக்க ஆரம்பித்தது.

* நாதஸ்வர இசையில் தேர்ந்த கலைஞர்களாகத் திகழ்ந்த, மதுரை எம்.பி.என்.சேதுராமன் - எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள், ’தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் நடிகர்திலகத்திற்கு வாசித்த பிறகு... அவர்களது வாழ்விலும் வசந்தம் வீசி உலகப்புகழ் பெற்றனர்.

* கதை - வசனகர்த்தாவாக மட்டுமே இருந்த  ஸ்ரீதரை, பட அதிபராக உயர்த்திய படம் வீனஸ் பிக்சர்ஸ்  தயாரித்த  ’அமரதீபம்’.  திரைப்பட இயக்குநர் பீம்சிங்கை பட முதலாளியாக்கிய திரைப்படம் புத்தா பிக்சர்சின் ’பதிபக்தி’.  இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் தொடர்ந்து ’ப ’ வரிசையில் இந்திய சினிமாவிற்கு மிகச்சிறந்த திரைப்படங்களை அளித்தார் இயக்குநர் பீம்சிங்.

* மிகச்சிறந்த கதை - வசனகர்த்தாவாகிய ஏ.பி.நாகராஜன் இயக்குநராக அறிமுகமானது நடிகர்திலகத்தின்  ‘வடிவுக்கு வளைகாப்பு’  படத்தில்தான்.  இந்தப் பட வெற்றியின் மூலம்,  நட்சத்திர இயக்குநராக, ’ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்’ என்ற தனது பட நிறுவனம் மூலம், பல சிறந்த சமூக, புராண, வரலாற்றுக் காவியங்களை தயாரித்து இயக்கினார் ஏ.பி.நாகராஜன். 

* ‘குங்குமம்’ திரைப்படம் மூலம் சாரதா நடிகர் திலகத்திற்கு ஜோடியாக திரையுலகிற்கு அறிமுகமாகி, ’ஊர்வசி’ சாரதாவாக உயர்ந்தார்.

* நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் தயாரித்ததன் மூலம் நடிகர் பாலாஜி மிகப்பெரிய தயாரிப்பாளராக வலம் வந்தார்.  

* ஜெயலலிதா, லட்சுமி, ஸ்ரீப்ரியா, சுமித்ரா என்று நடிகர் திலகம் தலைமையேற்று நடத்திவைத்த நாட்டிய அரங்கேற்றங்கள் ஏராளம்.  அவர்கள் அனைவருமே  பின்னாட்களில் திரையுலகில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.  

* திருமணங்களுக்கு தனது மனைவி கமலா அம்மாளுடன் சென்று வாழ்த்திடுவார் நடிகர்திலகம். அவ்வாறு அவரது தலைமையில் நடைபெற்ற திருமணங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றன.  உதாரணமாக இப்போது பிரபலமாக இருக்கும் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா இவர்களின் திருமணத்தை நடத்திவைத்தவர் நடிகர்திலகம்தான்.  

* திரையுலகில் சாதாரண நிலையில் இருந்த நடிகர், நடிகைகள், சிறிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்று பலதரப்பினரையும் பெரிய படமுதலாளிகளாக்கிய பெருமை நடிகர் திலகம் சிவாஜியையே சாரும். நடிகர்திலகத்தை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள் - இதுதான் வரலாறு.  

* 1952 -ம் ஆண்டு பராசக்தியில் அவர் பேசிய முதல் வசனமே “சக்சஸ்” என்பதுதான்.  அன்று தொடங்கி  அவர் மறையும்வரை அவருடைய திரையுலக வாழ்க்கை சக்சஸாகத்தான் இருந்தது! 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close