[X] Close

பராசக்தி சம்பளம் எவ்ளோ தெரியுமா? (நடிகர்திலகம் 90)


sivaji-90

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 11:52 am
  • அ+ அ-

நடிகர் திலகம் 90வது பிறந்தநாள் ஸ்பெஷல் (அக்டோபர் 1)

தொகுப்பு : மானா பாஸ்கரன்

71. சிவாஜி கணேசனுக்கு சொந்தமான   திரைப்பட நிறுவனமான - ‘சிவாஜி  ஃபிலிம்ஸ்’ கம்பெனிக்கு என்று தனியாக அலுவலகம் கிடையாது. சிவாஜி தனது வீடான  அன்னை இல்லத்திலேயே  சிவாஜி ஃபிலிம்ஸ் அலுவலகத்தையும் வைத்திருந்தார்!

72. சி.ஐ.டி சகுந்தலாவை... கவர்ச்சிகரமாக நடனமாடும் நடிகையாகவே தமிழ் ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்  நடன நடிகையாக மாறுவதற்கு முன்பாக, ஆரம்ப காலங்களில் சிவாஜி கணேசனின்  ‘சிவாஜி நாடக மன்ற’த்தில் சேர்ந்து நடித்து வந்தார். இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்த சிவாஜி,  தனது நாடக மன்றம் அரங்கேற்றிய ‘ஜஹாங்கீர்’ நாடகத்தில் சகுந்தலாவுக்கு ‘நூர்ஜஹான்’ வேடமளித்து வெளி உலகுக்கு அவரது திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டினார், சிவாஜியை  எங்கு பார்த்தாலும்  ‘அண்ணன்’ என்றே வாயார அழைப்பார்  சகுந்தலா! 

73.  முதல் நாள் இரவு வரையில் ‘பணம்’ படத்தில் சிவாஜியும் பத்மினியும் நடித்துக்கொண்டிருந்தனர். மறுநாள்  காலையில் சுவாமிமலையில் சிவாஜிக்கும் கமலாவுக்கும் திருமணம் நடந்தது. அதே போல் - முதல் நாள் இரவு வரையில் ‘செந்தாமரை’ படத்தில் நடித்தார்கள் சிவாஜியும் பத்மினியும். மறுநாள் காலையில் குருவாயூரில்  பத்மினியின்  திருமணம் நடந்தது!

74. ’பராசக்தி’ படத்தில் சிவாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் 250 ரூபாய்!

75. ‘பராசக்தி’ படத்தில் பண்டரிபாய், ‘பணம்’ படத்தில் பத்மினி, ’அமரதீபம்’ படத்தில் சாவித்திரி,  ‘உலகம் பலவிதம்’ படத்தில் எம்.என்.ராஜம், ‘கள்வனின் காதலி’ படத்தில் பானுமதி, ‘நான் சொல்லும் ரகசியம்’ படத்தில் அஞ்சலி தேவி, ‘பாகப்பிரிவினை’ படத்தில் சரோஜாதேவி, ‘படிக்காத மேதை’ படத்தில் சவுகார்  ஜானகி,  ‘பாவமன்னிப்பு’ படத்தில் தேவிகா,  ‘சித்தூர் ராணி பத்மினி’ படத்தில் வைஜெயந்தி மாலா,  ‘குங்குமம்’  படத்தில் விஜயகுமாரி, ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் ஜெயலலிதா, ‘செல்வம்’ படத்தில் கே.ஆர்.விஜயா,  ‘தங்கை’  படத்தில் காஞ்சனா,  ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வாணிஸ்ரீ, ‘எங்கள் தங்க ராஜா’ படத்தில் மஞ்சுளா,  ‘பாட்டும் பரதமும்’ படத்தில் ஸ்ரீபிரியா... ஆகியோர் முதன்முதலாக சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர்!

76. தயாரிப்பாளர், நடிகர் கே.பாலாஜிக்கு சிவாஜியின் மீது அளவுகடந்த மரியாதை, அன்பு. கே.பாலாஜி எடுத்த `தங்கை’ படத்தில்தான் சிவாஜியும் பாலாஜியும் இணைந்தனர். இப்படத்தில் சிவாஜிக்கு ஜோடி - கே.ஆர். விஜயா!

77.  ’திருமால் பெருமை’ படத்தில் திருமங்கை ஆழ்வாராக சிவாஜி நடித்திருப்பார்.  திருவரங்கனுக்கு கோயில் கட்ட தன் செல்வத்தை எல்லாம் செலவழிப்பான் திருமங்கை மன்னன்.  தன்னிடம் இருக்கும் செல்வமெல்லாம் குறைந்துபோய்... கோயில் கட்டுவ தற்கு இன்னும் இன்னும்  பொன்னும்  பொருளும் தேவைப்பட்டது.   ஆகவே, அரங்கனுக்காக திருமங்கை மன்னன்  வழிப்பறி கொள்ளையடிக்க  ஆரம்பித்தான். இதையறிந்த திருமால் - திருமங்கை மன்னனை நல்வழிப்படுத்த  திருமணக் கோலத்தில் மாப்பிள்ளையாக உருமாறி  வருவார். 

அந்த திருமண கோஷ்டியை வழிமறித்து  அவர்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் கொள்ளையடிப்பான் திருமங்கை மன்னன். ஆனால் மாப்பிள்ளை காலில் போட்டிருந்த மெட்டியை மட்டும் கழற்றவே முடியாது. வழிப்பறி கொள்ளையனாக வந்திருக்கும் திருமங்கை மன்னனைப் பார்த்து மாப்பிள்ளையாக வந்திருக்கும் திருமால், ’’முடிந்தால் நீயே கழற்றி எடுத்துக் கொள்..’’’  என்று சொல்வார் .

தனது கைகளால் கழற்றிக் கழற்றி பார்ப்பான். முடியவே முடியாது. மாப்பிள்ளையின் கால் விரலை எடுத்து  தான் வாயில் வைத்து... தன் பல்லால் திருகி அந்த மெட்டியைக் கழற்ற முயற்சிப்பான் திருமங்கை மன்னன்

இந்தக்  காட்சியை சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலைப் பகுதியில் படமாக்கினார் ஏ.பி.நாகராஜன். அசுத்தமான வெட்டவெளிப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.   மாப்பிள்ளையாக உருமாறி வந்த திருமாலாக  நான் நடித்தேன்.  நான்  வயதில் மிகவும் இளைய நடிகர்.  அந்தக் காட்சியை டூப் போட்டு கூட எடுத்திருக்கலாம். ஆனால் சிவாஜி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை.

வெறுங்காலோடு அந்த அசுத்தமான வெட்டவெளியில் நடந்து வந்த  எனது காலை எடுத்து... தன் வாயில் வைத்துக்கொண்டு இயல்பாக கடிக்க ஆரம்பித்துவிட்டார் சிவாஜி  கணேசன் அவர்கள்.  என் காலை சிவாஜி  தொட வருகிறார் என்றதுமே  நான் பதறிப் போனேன்.

’’டேய்! இது நடிப்புடா. அப்படி நடிச்சாத்தான் இயல்பா இருக்கும்’’ என்று எனக்கு தைரியம்  சொன்னார் அந்த நடிப்பு மேதை!

- இப்படி மெய்சிலிர்த்து, உணர்வுபொங்க தனது  ’இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தில் எழுதியிருப்பவர் நடிகர் சிவகுமார்.

78.  விதவிதமான கடிகாரங்களை அணிவதில் சிவாஜிக்கு  அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை  வீட்டில்  தனது தேக்கு அலமாரியில் ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!

79. ’’சிவாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல நேரம் தவறாமையும்தான். அத்தனை பெரிய நடிகர் ஷூட்டிங்கில் எவரையும் காக்க வைத்ததில்லை. எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும், ஒரு புதுமுக நடிகரைப் போல் முழு ஒத்துழைப்பையும் தருவார். வாத்தியாரைப்போல் சொல்லித் தரவேண்டியவர் மாணவனைப்போல் கற்றுக்கொள்வார்.  அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், 'தில்லானா மோகனாம்பாள்'  படத்தில் நடித்த அனுபவத்தை என்னால்  மறக்கவே முடியாது.  அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம்!’’ - இப்படி சிவாஜியை புகழ்ந்திருப்பவர் ‘பொம்பள சிவாஜி’ மனோரமா ஆச்சிதான்!

80. நடிகர் விஜயகுமார்  தயாரிப்பாளர் ஆக முடிவு செய்து படம் தயாரிக்க முன் வந்தார்.   அப்படி முடிவு செய்தவுடன் அவர் அணுகியது சிவாஜியைத்தான்.  சிவாஜி கதாநாயகனாக நடிக்க  அப்படித்  தயாரான படம்தான்: ’நெஞ்சங்கள்'.

- தொடரும்...

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close