[X] Close

நிஜத்தில் நடிக்கத்தெரியாது சிவாஜிக்கு!


sivaji-birthday

நடிகர்திலகம் சிவாஜிகணேசன்

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 11:03 am
  • அ+ அ-

- கே.சந்திரசேகரன் - தலைவர், சிவாஜி சமூக நலப் பேரவை

அக்டோபர் 1 - சிவாஜிகணேசன் பிறந்தநாள் இன்று.

* அரசியலைப் பொருத்தவரை, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தனக்கு என்று ஒரு உயர்ந்த பதவி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எப்போதுமே விரும்பியது இல்லை.  திரைப்படமே பார்க்க விரும்பாத, நடிகர்களையே வெறுத்த தந்தை பெரியாரால்,  சிவாஜி பட்டத்தைப் பெற்ற நடிகர் திலகம் அவருடைய அன்புக்குப் பாத்திரமாகவும் ஆனார்.  

* பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக வலம் வந்த சிவாஜி அவர்களின் வளர்ச்சி பொறுக்காத சிலரால் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தபோதும்கூட, அண்ணாவால், ’’தம்பி எங்கிருந்தாலும் வாழ்க...’’ என்று பாராட்டப்பட்டவர்தான் சிவாஜி!.

* சிவாஜி கணேசன்  நினைத்திருந்தால் பேரறிஞர் அண்ணாவுடன் அனுசரித்து நின்று, பல பதவிகளை அடைந்திருக்க முடியும்.  ஆனால், கொள்கைரீதியாக பெருந்தலைவர் காமராஜர் பின்னால் அணிவகுத்துச் சென்றார்.  திரைப்பட நடிகர்களை, கூத்தாடிகள் என்று கூறி ஒதுக்கி வந்த காமராஜரைப் பின்தொடர்ந்து சென்று  தன் தலைவராக ஏற்றுக்கொண்டு, இறுதி வரை அவர் புகழ்பாடினார் சிவாஜி.

* 30  ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய உழைப்பை எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அளித்த சிவாஜி, பலரை பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தார்.  நடிகர்திலகத்தால் பதவிகளை அடைந்த பலரும் அதனை வெளியில் சொல்லாமல் தங்களது நன்றியை நிரூபித்தார்கள்.  

* நடிகர்திலகம் சிவாஜி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணமும், தனக்கு பதவி அளிக்கவில்லை என்பதற்காக அல்ல.  தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் ஆட்சி, அவர் மறைவிற்குப் பிறகு, அவருடைய மனைவி ஜானகி தலைமையில் தொடர அனுமதிக்கப்படவேண்டும் என்பதற்காக, கொள்கைரீதியாக ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலேயே காங்கிரசில் இருந்து விலகினார்.

வரலாற்றில், எனக்குத் தெரிந்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் யாரும் தன் சொந்தப் பணத்தை செலவு செய்ததே இல்லை.  ஆனால், நடிகர்திலகம் சிவாஜியோ, தான் தொடங்கிய கட்சிக்கும், அந்தக் கட்சியின் தேர்தல் செலவுகளுக்கும், தன் சொந்தப் பணத்தையே செலவு செய்தார்.  

* வேண்டுமென்றே நடிகர்திலகத்தின் புகழை, அவருடைய புகழை  (பாஸிட்டிவ் ஆன) நேர்மறையான அற்புதமான பக்கங்களை மறைத்து,  நெகட்டிவ் ஆன (எதிர்மறை) செய்திகளாகவே அவர் வாழ்ந்த காலத்தில் பரப்பிக்கொண்டிருந்தவர்கள், அவர் மறைந்த பிறகும் அதைப் போலவே தொடர்வது வேதனைக்குரிய ஒன்று.  

* நடிகர் திலகத்தின் மறைவிற்குப் பிறகு, 2006-ம் ஆண்டு  தி.மு.கவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துத்தான் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகும், ஆட்சிக்கு வந்தவுடனேயே சிலையை நிறுவிய கலைஞரின் ஆட்சி முழு ஐந்து ஆண்டு காலமும் ஆட்சிப் பொறுப்பில் நீடித்து நிறைவு செய்தது.   

அது மட்டுமல்ல. 1987 - எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிறகு. எந்த அரசும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது இல்லை.  ஆனால், 2015 -ஆகஸ்டில் சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிவாஜிக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.  அதன் பிறகுதான். 2016 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து  2-வது முறையாக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து வரலாறு படைத்தார். எனவே அரசியல்ரீதியாக சிவாஜி அவர்களை எதிர்மறை விமர்சனங்களால் தாக்குபவர்கள் வரலாற்றை தெரிந்துகொள்வது நல்லது!

மேலும். ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்தைத்   தலைமையேற்று நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி.  அப்போது. "தங்கச் சிலையாக ஜொலிக்கும் இந்தப் பெண்ணுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது" என்று  வாழ்த்திய சிவாஜியின் வாக்குப்படியே திரையுலகிலும். அரசியலிலும் ஜெயலலிதா ஜொலித்தார் - இதுதான் வரலாறு.

* 2006 -ல் கலைஞருக்கு முன்னதாக சிவாஜிக்கு சிலை அமைத்தவர் புதுவை முதல்வராக இருந்த ரங்கசாமி.  அதன்பிறகு நடைபெற்ற 2011  புதுவை சட்டமன்றத் தேர்தலில், தனிக்கட்சி ஆரம்பித்த மூன்றே மாதங்களில். தனித்து ஆட்சியைப் பிடித்து ஐந்து ஆண்டுகாலம் புதுவை முதல்வராக பணியாற்றினார் ரங்கசாமி என்பதும் வரலாறு.

நடிகர் திலகம் சிவாஜிதான் என்னை அரசியலில் ஆளாக்கியவர் என்று கூறிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்; தமிழக காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனார்.  

* சிவாஜி - பிரபு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக, மத்திய அமைச்சராகக் கலந்துகொண்ட வெங்கய்யா  நாயுடு,  அதற்கு அடுத்த ஆண்டே, துணை ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார்.

* சிவாஜி சிலையையோ, படத்தையோ திறந்தவர்கள், நடிகர் திலகத்தைப் போற்றியவர்கள்  யாரும் கெட்டதில்லை.  அவருடைய சிலையை அகற்ற நினைத்தவர்களுக்குத்தான் கேடு விளைந்தது என்பதுதான் வரலாறு.  

* திரையில் நடிகர்திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு, அரசியல் மேடைகளில் நடிக்கத் தெரியவில்லை. என்பதுதான் உண்மை!

“உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது” என்று திரையில் பாடிய சிவாஜி அதன்படியே பொதுவாழ்விலும் தன் மனசாட்சிப்படி, நேர்மையாகவே நடந்துகொண்டார். 

* கலையும், கலாச்சாரமும்தான் ஒரு நாட்டை, ஒரு மாநிலத்தை அடையாளப்படுத்தும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில், கலைப்  பொக்கிஷமhக, தமிழகத்தின் கலை அடையாளமாகத் திகழ்ந்த நடிகர் திலகத்திற்கு அவமரியாதை நேர்ந்தது துரதிர்ஷ்டம்.  நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்பட்டது.  

சரி,  மணிமண்டபத்தில்தானே வைக்கிறார்கள் என்று ஆறுதல் அடையலாம் என்றால், சிங்கமென நின்றிருந்த சிலையைக் கூண்டில்  அடைத்த மாதிரி, பெயரளவிற்கு ஒரு மணிமண்டபத்தை அமைத்துவிட்டு, அமைதியாகிவிட்டார்கள்.

 ரசிகனின் இந்த மனவேதனைக்கு, தமிழனின் மனக்குமுறலுக்கு ஆட்சியாளர்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.

உடலால் மறைந்தாலும், நடிகர்திலகத்தின் புகழ், தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close