[X] Close

சிவாஜி - விளம்பரம் தேடா வள்ளல்!


vallal-sivaji

தந்தையுடன் சிவாஜி, கலைஞர்

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 09:48 am
  • அ+ அ-

கே.சந்திரசேகரன் - தலைவர், சிவாஜி சமூக நலப் பேரவை

அக்டோபர் 1 - சிவாஜிகணேசன் 90வது பிறந்தநாள்

* நடிகர்திலகம் சிவாஜியைப் பொருத்தவரை நேரம் தவறாமை, தொழில்பக்தி இவற்றை தன் அடிப்படைக் கொள்கையாகவே கொண்டிருந்தார்.  தன்னுடைய ரசிகர்களையும் வீணாக தொழிலையோ, வேலையையோ விட்டுவிட்டு ரசிகர்மன்றம் அல்லது அரசியல் பணியில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்.

* நடிகர் திலகம் கையால் தொடங்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் பல இன்றளவிலும் பெயர்பெற்று விளங்குகின்றன.  இவருடைய தொடருடன் தொடங்கப்பட்ட நக்கீரன் இதழ் இன்றளவும் வெற்றிகரமான புலனாய்வுப் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருக்கிறது.  

*  எங்கெல்லாம் தமிழர்களுக்கு துயரம் நேர்ந்தாலும், அண்டை நாடுகளால் நமது இந்தியாவிற்கு சோதனை நேர்ந்தாலும்... தான் முன்னின்று உதவிக்கரம் நீட்டியுள்ளார்.  அரசியலிலிருந்து முற்றிலும் விலகியிருந்தபோதுகூட இந்தப் பணிகளைத் தொடர்ந்துகொண்டுதானிருந்தார்.  

2000 -வது ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டபோது, கர்நாடகத்தில் பதற்றம் நிலவியது.  அப்போது, வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நக்கீரன் கோபால் அவர்கள் காட்டுக்கு செல்லத் தயங்கியபோது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நக்கீரன் கோபால் அவர்களை அழைத்து,  நடிகர் ராஜ்குமாருக்கு ஏதாவது நேர்ந்தால், கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.  எனவே, உடனே சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டுவர வேண்டுகோள் விடுத்தார்.  அதன்பிறகே, நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தி, அதன்மூலம் ராஜ்குமார் மீட்கப்பட்டார்.  அதன் காரணமாக, கர்நாடகாவில் வாழ்ந்துகொண்டிருந்த லட்சக்கணக்கான தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது.

 

*  நடிகர்திலகம் சிவாஜி ஒரு நடிகர், அவர் பணம் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தார், வேறு என்ன செய்தார் என்று  சிலர் கேள்வி கேட்கலாம்.. அதற்கெல்லாம்,  தற்போது விடைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  அவர் ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு 100 ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை.  அதேபோல, தையல் இயந்திரம், நோட்டுப் புத்தகம் போன்றவைகளை விழா நடத்திக் கொடுக்கவில்லை.  

* அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார்,  மார்ஷல் நேசமணி, வீரபாண்டிய கட்டபொம்மன். திருவள்ளுவர் என்று அனைத்து பெரியோர்களுக்கும் தன் சொந்த செலவில் சிலைகளை நிறுவிய நடிகர் திலகம், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், தான் நேசித்த பெருந்தலைவர் காமராஜருக்கு சிலைகள் அமைத்து பெருமைசேர்த்தார்.

* அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் 1959-ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார் சிவாஜி.

* 1961-ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்யுள்ளார்.

* 1962-ல் இந்திய – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.

* புதுவை அரசின் பகலுணவுத் திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்தார்.

* பெருந்தலைவர் காமராஜர், பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை அறிவித்தபோது, முதல் நபராக ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் நடிகர்திலகம்.

* நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.

*பெங்களூருவில் நாடக அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.

* 1958 -ம் ஆண்டு முதல் 1961 வரை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை மேடையில் அரங்கேற்றி அதன்மூலம் வசூலான 32 லட்சத்தை, பல கல்லூரிகளுக்கும், நூலகங்களுக்கும் அளித்தார்.

* 1960-ல் பெருவெள்ளம் சென்னையைச் சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களை அவரது  அன்னை இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் வழங்கினார்.

* 1964 -ம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய்.பி.சவானிடம் ரூ.1 லட்சம் நிதியளித்த முதல் இந்திய நடிகர் சிவாஜிதான்.

* 1968 -ம் ஆண்டு ’வியட்நாம் வீடு’ நாடகம் நடத்தி, திருச்சியில் உள்ள ஜமால் - முகம்மது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ.1,30,000  அளித்தார்.

* 1968-ல் உலகத் தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது, சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதில், திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்துத் தந்தது சிங்கத் தமிழன் சிவாஜி அவர்கள்.  ஆனால் இன்று நடிகர் திலகம் சிலைக்கு அங்கு இடமில்லை, அங்கு  சிவாஜிக்கு சிலை வைக்க அரசுக்கும் மனமில்லை.

*  உலகத் தமிழ் மாநாட்டிற்கு  நிதியாக ரூபாய் 5 லட்சம் அள்ளித் தந்து அண்ணா அவர்களை அசர வைத்தவர் சிவாஜி.

* 1965- ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம்.  திருமதி கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூருவில் தனக்குப் பரிசாக கிடைத்த 100 பவுன் தங்கப் பேனாவையும். மொத்தம் 500 பவுனையும் கொடுத்து தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சிவாஜி.

* அன்றைய முதலமைச்சர்  பக்தவத்சலத்திடம் 1 லட்சம் யுத்த நிதியாக வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் ரூபாயை வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றார்;. வெள்ளிவிழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தார்.

* 1972-ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானப்படையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.

* வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம்  வசூலான 32 லட்சத்தை பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.

* 1961-ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் நிதியாக வழங்கினார்.

* தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை ( அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி) நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தார் சிவாஜி கணேசன்.

* 1999 -ம் ஆண்டு கார்கில் போர் நிதியாக அன்றைய தமிழக முதல்வர் கலைஞரிடம் 1 லட்சம் ரூபாய் அளித்தார் சிவாஜி..

* சினிமா, சமுதாயத்திற்கு மட்டுமல்ல, அரசியலிலும் பல  கட்சிகளுக்கு  கர்ணனாகத்தான் திகழ்ந்தார் நடிகர்திலகம்.  காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கட்சியை வளர்ப்பதற்காக, தன்னுடைய நாடகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்சி அலுவலகங்கள் கட்ட பெருமளவில் நிதி உதவி அளித்தவர் சிவாஜி.  

* கம்யூனிஸ்ட் கட்சிக்காக மயிலாடுதுறையில் கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவா அவர்களிடம் நிதியுதவி அளித்திருக்கிறார்.  இவ்வளவு ஏன், தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில், தி.மு.க வை வளர்த்தவர்கள் வரிசையில் நடிகர் திலகம் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.   தி.மு.கழகத்தை வளர்ப்பதற்காக, சிவாஜி நிறைய நாடகங்களை, ஒரு பைசா கூடப் பெற்றுக்கொள்ளாமல்  நடத்திக்கொடுத்து நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார் என்று கலைஞர் தனது ’நெஞ்சுக்கு நீதி’ நூலில்ய குறிப்பிட்டிருக்கிறார்.   

ஆனால், எப்போதும்போல, நடிகர்திலகமும் தான் அளித்த நன்கொடைகளை வெளியில் விளம்பரப்படுத்திக் கொள்ள வில்லை.  அதேபோல அவரால் பலனடைந்தவர்களும் கூட வெளியில் சொல்லாமல் போனதுதான் வேதனை. 

 

 

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close