[X] Close

இன்று வெள்ளி விழா காண்கிறது: நெல் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது விழுப்புரம் மாவட்டம்


villupuram-enters-25-years

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 12:46 pm
  • அ+ அ-

எஸ்.நீலவண்ணன்

கடந்த 30.09.2018 அன்று உருவான விழுப்புரம் மாவட்டம் இன்று வெள்ளி விழா காண்கிறது.

பரந்து விரிந்த புதிய பேருந்து நிலையம், அதன் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அதையொட்டி அமைந்துள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகம். அதிலேயே அமைந்துள்ள 90 சதவீத அரசு அலுவலகங்கள் என முக்கிய நிர்வாகங்கள் ஒருங்கிணைந்த தலைமையமாக விழுப்புரம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

விழுப்புரம், திண்டிவனத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி, திண்டிவனம் அருகே தனியார் சட்டக் கல்லூரி, அரசு, தனியார் மகளிர் கல்லூரிகள்,திண்டிவனம் அருகே வேளாண் அறிவியியல் ஆராய்ச்சி மையம் என மாவட்டத்தின் கல்வி நிலையங்களை பட்டியலிடலாம்.

அதே நேரம் தேசிய அளவில் 250 பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும், நிலத்தடி நீர் குறைந்த 5 மாவட்டங்களில் ஒன்றாகவும் உள்ளது. குடிசைகள் நிறைந்த மாவட்டமாகவும் விழுப்புரம் உள்ளது.

மாவட்டத்தில் 7.22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 5.00 லட்சம் ஹெக்டேர் விவசாயம் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று தஞ்சை மாவட்டத்தைச் சொல்வார்கள். ஆனால் அந்த இடத்தை விழுப்புரம் மாவட்டம் பிடித்துள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.முழுமையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிசை இல்லா மாவட்டம் என்ற நிலையை பெற மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி குறித்து மாவட்ட நலனில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் பின்வருமாறு,

நீர் நிலைகளை மீட்க இளைஞர்கள் இயக்கம்

மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் முயற்சியாக 2015ம் ஆண்டு கண்டம்பாக்கம், முத்தாம்பாளையம் கிராமங்களில் 2 ஏரிகளை தூர்வாரினோம். தொடர்ந்து மாவட்டத்தில் பல கிராமங்களில் மரங்களின் அவசியத்தை எடுத்து சொல்லி மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.மேலும் நெகிழி ஒழிப்பு பிரச்சாரமும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும், பனை விதைகளை ஏரிக்கரைகளில் ஊன்றியும், மக்களிடம் விழிப்புணவு பிரச்சாரத்தையும் செய்து வருகிறோம் என்கிறார் கரிகால சோழன் பசுமை மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் அகிலன்.

திருக்கோவிலூர் பேரூராட்சியில் உள்ள இளைஞர்களான நாங்கள் ஒன்று சேர்ந்து ”நாடொப் பனசெய் மரம்நட மறவேல், துணிப்பை கைவிடேல்” என்ற வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்து திருக்கோவிலூரில் மரக்கன்று நடும் பணியினையும், அதனை பராமரிக்கும் பணியினையும் செய்து வருகிறோம். பள்ளிகள், பொது இடங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.

இதற்கான செலவுகளை எங்கள் குழுவில் உள்ளவர்கள் விரும்பி கொடுப்பதை ஏற்று செய்து வருகிறோம். இது எங்கள் ஊர் என்ற எண்ணம் வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு உள்ளது. இங்கு வாழ்வோருக்கும் அந்த எண்ணத்தையும், கைகோர்க்கவும் முயற்சி செய்கிறோம் என்கிறார் இக்குழுவைச் சேர்ந்த தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பாத இளைஞர் ஒருவர்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்ற ஒப்பற்ற தலைவர் பிறந்த விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் திட்டங்கள், முடங்கிப்போன திட்டங்கள், தோல்வியில் முடிந்த திட்டங்கள் என்ன என்பதையும், மாவட்டத்திற்கு என்னென்ன தேவை, என்னென்ன செய்துள்ளோம் என்பதைப்பற்றியும் அரசியல் கட்சியினர் கருத்துக்களை வரும் நாட்களில் பார்ப்போம்.

அரசு விழா எப்போது?

விழுப்புரம் மாவட்டத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி மாவட்ட நிர்வாகம் எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யவில்லை.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டத்தின் வெள்ளி விழா கொண்டாட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close