[X] Close

இயல்பை விட 69% அதிக மழை: நெல்லை மாவட்டத்தில் வறண்ட நிலையில் 1741 குளங்கள்


no-water-at-ponds

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 12:39 pm
  • அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட அதிகமாக 69 சதவீதம் மழை பொழிந்தும் 1,741 குளங்கள் வறண்ட நிலையில் உள்ளன. மொத்தமுள்ள 11 அணைகளிலும் நீர் இருப்பு கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. கடந்த ஆண்டில் 1,090.99 மி.மீ. மழை பெய்திருந்தது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம். இவ்வாண்டில் நடப்பு மாதம் வரை இயல்பான மழையளவு 329 மி.மீ.. இதை விட அதிகமாக 556.22 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. இது இயல்பைவிட 69 சதவீதம் அதிகம் ஆகும்.

மிக அதிக மழை பெய்திருந்த போதும் மாவட்டத்தில் 1,741 குளங்கள் வறண்டு கிடப்பதாக வேளாண்மைத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. அதில் 6 கால்வரத்து குளங்களில் 3 மாதத்துக்கும், 92 குளங்களில் 2 மாதத்துக்கும், 474 குளங்களில் 1 மாதத்துக்கும் தண்ணீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள 649 கால்வரத்து குளங்கள் வறண்டுள்ளன.

மானாவாரி குளங்களில் 205-ல் ஒரு மாதத்துக்கான தண்ணீர் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 1,092 குளங்கள் வறண்டிருக்கின்றன. மொத்தமாக மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 1,741 குளங்கள் வறண்டுள்ளன. கிணறுகளில் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்துக்கு பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கே நீர் இருப்பு உள்ளது.

மாவட்டத்திலுள்ள 11 அணை களிலும் தற்போது 49 சதவீதம் தண்ணீர் இருப்பதாக வேளாண்மைத்துறை தெரி வித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 29 சதவீதம் நீர் மட்டுமே இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சை யாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளில் தண்ணீிரின் மொத்த கொள்ளளவு 13,771 மில்லியன் கனஅடியாகும்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 4,005 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது 6,799 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைகளில் தற்போது 49 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 29 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 20 சதவீதம் அதிகமாக அணைகளில் நீர் இருப்பு உள்ளது.

கடந்த மாத இறுதியில் முழு கொள்ளளவை எட்டியிருந்த பாபநாசம், கடனா, ராமநதி, கருப்பா நதி, குண்டாறு, அடவிநயி னார்கோயில், கொடுமுடியாறு ஆகிய 7 அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

இலக்கை தாண்டி சாதனை

நடப்பு கார் பருவத்தில் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கை தாண்டி 16,741 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. 2017-2018-ல் 15,700 ஹெக்டேரில் சிறுதானியங்கள் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயித்த நிலையில் இதுவரை 2,154 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. 36,000 ஹெக்டேரில் பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கிடப்பட்ட நிலையில் 979 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கரும்பு சாகுபடி இலக்கு 4,000 ஹெக்டேரில் 2,169 ஹெக்டேர் எட்டப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி 5,500 ஹெக்டேர் இலக்கிடப்பட்ட நிலையில் 804 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

எண்ணெய் வித்து சாகுபடி

3,940 ஹெக்டேரில் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை 1,780 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டி ருக்கிறது.

மொத்தமாக 2017-2018-ம் ஆண்டில் 1,38,140 ஹெக்டேரில் அனைத்து வகை பயிர்களும் சாகு படி செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. கடந்த 31.7.2018-ம் தேதி வரை 24,627 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5,251 ஹெக்டேரில் பல பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close