[X] Close

இலவச தொலைபேசி 1098 உதவியால் 48 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்


free-telephone-helpline-for-child-marriage

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நடந்த சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு பலகை திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசினார். படம் : என்.ராஜேஷ்.

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 12:32 pm
  • அ+ அ-

சைல்டு லைன் இலவச தொலைபேசி 1098 உதவியால் 48 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில், சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்1098 விழிப்புணர்வு பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அரசு பேருந்துகளில் ஒட்டினார். ஆட்சியர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் சைல்டு லைன் இலவச தொலை பேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணில், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர்கள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை திருமணம், காணாமல் போன குழந்தைகள், பாலியல் ரீதியான துன்பத்துக்கு உள்ளாகும் குழந்தைகள் குறித்த விவரங்களை பொது மக்கள் தெரியப்படுத்தலாம்.

கடந்தாண்டு, சைல்டு லைன் 1098 என்ற எண்ணுக்கு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து மொத்தம் 489 தகவல்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு 44 குழந்தை திருமணங்களும், 2017-ம் ஆண்டு 48 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு நேரிடும் இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை தடுப்பதற்காக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ராஜாஜி பூங்கா முன்பு, முத்துநகர் கடற்கரை, அண்ணாநகர் மெயின்ரோடு, மாநகராட்சி பூங்கா (ஸ்டேட்பாங்க் காலனி), வ.உ.சி கல்லூரி பேருந்து நிலையம், புனித மரியன்னை மகளிர் கல்லூரி முன்பு, ரயில்வே நிலையம், காமராஜ் மார்க்கெட் ரவுன்டானா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய 11 இடங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைல்டு லைன் 1098 குறித்த விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சைல்டு லைன் ஒருங்கிணைப் பாளர் த.காசிராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் கு.தனலெட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பா.ஜோதிக்குமார், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் டி.ரேனியல் ஜேசுபாதம், நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி, சைல்டு லைன் அருண்குமார் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close