[X] Close

என்எஸ்எஸ் முகாமில் நாப்கின் தயாரிக்க மாணவியருக்கு பயிற்சி: உடல் நலனும், சூழலும் காக்கப்படும் என மாணவியர் கருத்து 


nss-students-making-napkins

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் முகாமில் நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்ட மாணவிகள்.

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 12:28 pm
  • அ+ அ-

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாமில், மாணவியருக்கு பருத்தித் துணியால் நாப்கின் தயாரிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் மாணவ, மாணவியருக்கு நாட்டு நலப்பணித் திட்ட முகாம்கள் நடந்து வருகிறது. அந்த வரிசையில் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது. கடந்த 25-ம் தேதி தொடங்கிய முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் தெரசாள் தொடங்கி வைத்தார். முகாமில், பிளஸ் 1 பயிலும் 25 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர்.

முகாம் நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக, பருத்தித் துணிகளைக் கொண்டு தாங்களே நாப்கின் தயாரித்துக் கொள்வது எப்படி என மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புவிதம் பள்ளியின் ஆசிரியர்கள் குணவதி, செண்பகம் ஆகியோர், ‘நானும் எனது பெண்மையும்’ என்ற தலைப்பில் மாணவியர் மத்தியில் உரையாற்றினர். பின்னர், நாப்கின் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளித்தனர்.

நாப்கின் தயாரிப்பு குறித்து ஆசிரியர் குணவதி கூறியது:

பெண்கள் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் இன்றைய நவீன நாப்கின்கள் அதிக விலை கொண்டவை. மற்றொருபுறம், இந்த நாப்கின்கள் ரசாயனங்களால் தயாராவதால் அதை பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பலவித நோய்களும் ஏற்படுகின்றன. மேலும், மண்ணில் வீசப்படும் இந்த நாப்கின்கள் எளிதில் மக்காமல் சுற்றுச் சூழலையும் பாதிக்கின்றன.

இந்நிலையில், பாரம்பரியமாக நமது பெண்கள் பயன்படுத்திய பருத்தித் துணி நடைமுறையை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே துணிகளை, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சற்றே நவீன முறையில் வடிவமைப்பு செய்து பயன்படுத்தும்போது பல பிரச்சினைகள் தீரும். வீட்டில் பயன்படுத்தி கிழிந்த பருத்தியினாலான வேட்டிகள், புடவைகள், லுங்கிகள் இருந்தாலே நாப்கின்களை தயாரித்துக் கொள்ள முடியும். இந்த நாப்கின்களை துவைத்து வெயிலில் உலரச் செய்து சுமார் ஓராண்டு வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். புதிய பருத்தித் துணிகளாலும் இவற்றை தயாரிக்கலாம். ஒரு நாப்கின் தயாரிக்க அதிகபட்சம் ரூ.20 மட்டும் செலவாகும்.

இவ்வாறு கூறினார்.

முகாமில் பங்கேற்றுள்ள மாணவியர், ‘இந்தப் பயிற்சி மிகவும் பயனளிக்கக் கூடியதாக உள்ளது. நாப்கின் தயாரிப்பு குறித்தும், பெண்மை குறித்தும் பயிற்சியாளர் அளித்த விளக்கங்கள் எங்களிடம் நிலவிய பல்வேறு தயக்கங்களை போக்கியுள்ளது. நாமே தயாரிக்கும் நாப்கின்களால் உடல் நலன், சுற்றுச் சூழல் இரண்டையும் பாதுகாக்க முடியும் என்பதையும் அறிந்தோம். முகாமில் கற்றுக் கொண்ட நாப்கின் தயாரிப்பு முறை குறித்து உறவினர்கள், சுற்றத்தார் என பலரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்’ என்றனர். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வளர்மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close