[X] Close

கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிகள் வேகமெடுக்குமா? - எதிர்பார்ப்பில் கொங்கு மண்டல தொழில் துறையினர்


kovai-airport-issue

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 12:11 pm
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

கொங்கு மண்டல மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, கோவை சர்வதேச விமானநிலைய விரிவாக்கப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் இரண்டாவது தொழில் நகரமான கோவையில் 1940-ம் ஆண்டுகளில் விமான சேவை தொடங்கப்பட்டது. விரிவாக்கப் பணிகளுக்குப் பின்னர் 1987-ல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்டன. 1995-ல் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் இது சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது கோவை விமானநிலையத்திலிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், சார்ஜா, கொழும்பு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினமும் சுமார் 40 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து, செல்கின்றனர். இந்த விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கோவை, திருப்பூரிலிருந்து மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் இணைந்து உருவாக்கியுள்ள கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநரும், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் முன்னாள் தலைவருமான டி.நந்தகுமார் ‘இந்து தமிழ்` செய்தியாளரிடம் கூறியதாவது:

12,500 அடி நீள ஓடுபாதை

கோவை விமானநிலையத்தின் ஓடுதள பாதை, மிகப் பெரிய அளவிலான சர்வதேச விமானங்கள் வந்து செல்லக்கூடிய அளவுக்கு இல்லை. தற்போதுள்ள ஓடுபாதையில் ஏ.டி.ஆர். ரக விமானங்கள் நிரந்தர உரிம அடிப்படையிலும், போயிங், ஏர்பஸ் போன்றவை தற்காலிக உரிம அடிப்படையிலும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், 300 சீட்டுகளுக்குமேல் கொண்ட பெரிய விமானங்களை இயக்க இந்த ஓடுபாதை போதுமானதாக இருக்காது. எனவே, தற்போதுள்ள சுமார் 9,500 ஆயிரம் அடி நீளமுள்ள ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.

2010-ம் ஆண்டிலேயே விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய இந்திய விமானநிலைய ஆணையம் உத்தரவிட்டது. தற்போது நிலத்தை கையகப்படுத்தும் பணியில் கோவை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

விமானநிலையத்தின் மேம்பாட்டுக்கு 627 ஏக்கர் தேவை. இரு கட்டங்களாக இந்த நிலத்தைக் கையகப்படுத்தி, முதல் கட்டத்தில் ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடலாம். அடுத்த கட்டத்தில், விமானநிலைய விரிவாக்கப் பணிகள், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல், எல் அண்ட் டி பைபாஸ் சாலையை 200 அடி சாலையாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

இப்பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலம் உள்ளது. அரசுக்குச் சொந்தமான 30 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இவற்றை கேட்டுப் பெற்றால், மீதமுள்ள 457 ஏக்கர் நிலத்தை மட்டும் ஆர்ஜிதம் செய்ய வேண்டும்.

நேரடியாக துபாய், அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டும். அங்கிருந்து எந்த நாடுகளுக்கு வேண்டுமானிலும் எளிதில் செல்ல முடியும். கோவையைவிட சிறிய நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் இருந்துகூட அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ஏராளமானோர் திருச்சி, சென்னை, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமானநிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதனால் கோவை விமானநிலையத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இங்கிருந்து அதிக விமானங்களை இயக்குவதால், கல்வி, தகவல் தொழில்நுட்பத் துறை, மருத்துவச் சுற்றுலா உள்ளிட்டவை மேம்படும். இது தொடர்பாக கொங்கு குளோபல் ஃபோரம் அணைப்பு சார்பில் மத்திய, மாநில அமைச்சர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் கூறும்போது, `விமானநிலைய விரிவாக்கத்துக்காக நிலங்களை ஆர்ஜிதப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. நில உரிமையாளர்களுடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நில உரிமையாளர்கள், நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

வேளாண் வகை நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.900, வீட்டுமனை அல்லது கட்டிடங்கள் உள்ள பகுதிக்கு சதுர அடிக்கு ரூ.1,500 இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு, நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

ரூ.1,500 கோடியில்...

கோவை விமானநிலைய இயக்குநர் ஆர்.மகாலிங்கம் கூறும்போது, `கோவை விமானநிலையத்தில் ஏற்கெனவே பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். விமானநிலைய விரிவாக்கத்துக்காக மாநில அரசு நிலத்தை ஆர்ஜிதம் செய்துகொடுத்துவிட்டால், உடனடியாகப் பணிகளைத் தொடங்க இந்திய விமானநிலைய ஆணையம் தயாராக உள்ளது. முதல்கட்டமாக ரூ.1500 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள் நடைபெறும். தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். வெளிநாடுகளில் உள்ள, சர்வதேச தரத்திலான விமானநிலையமாக கோவை விமானநிலையம் விரிவாக்கப்பட்ட பின்னர், மிகப் பெரிய அளவிலான விமானங்களும் இங்கிருந்து இயங்கும். அப்போது, கோவை மட்டுமின்றி, கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுமே தொழில், வர்த்தகம், கல்வி, சுற்றுலாத் துறைகளில் பெரிதும் வளர்ச்சியடையும்` என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close