[X] Close

பாரம்பரிய திருவிழாக்கள்... பசுமை மாறா மலைப்பகுதிகள்...: அந்தியூரை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசுக்கு கோரிக்கை - அடிப்படை வசதியுடன் பொருளாதாரம் மேம்படும்


anthiyur-village

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா நிகழ்ச்சியில் நடனமாடும் குதிரை.

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 12:04 pm
  • அ+ அ-

ஏதேனும் ஒரு நிகழ்வு நூற்றாண்டுகள் கடந்து பாரம்பரியத்துடனும், அதன் பழமை மாறாமலும், இன்றும் தொடர்ந்து உயிரோட்டமாக திகழுமானால் அந்த இடம் சுற்றுலாத்தலம் என்ற தகுதியைப் பெறுகிறது. இத்தகைய தகுதியுடன், பர்கூர் மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த, இதமான காலநிலை கொண்டு விளங்குகிறது ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிராமம். பாரம்பரியமும், இயற்கை வளமும் ஒருங்கே அமைந்த அந்தியூர், சுற்றுலாத்தலமாகும் அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கி இருக்கிறது.

அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடிப்பெருந்தேர்த்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் ஆடிப் பெருந்தேர்த்திருவிழா நடைபெறும்.

இக்கோயிலின் பரம்பரை அறங் காவலர்களாக உள்ளவர்களின் மூதாதையர்கள் ஆறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு நவாபுகள் ஆட்சிக்காலத்தில் தற்போதைய கடலூர் மாவட்டத்தின் கடலோர சதுப்பு நில பகுதியான பிச்சாவரத்திலிருந்து வந்தவர்கள் என்று கோயில் ஸ்தல வரலாறு கூறுகிறது.

குதிரை மற்றும் மாட்டுச்சந்தை

இத்திருவிழாவின் தனிச்சிறப்பு என்பது இங்கு ஆண்டுதோறும் கூடும் பிரம்மாண்டமான குதிரைச்சந்தை மற்றும் மாட்டுச்சந்தை ஒரு வார காலம் நடப்பது தான். அனைத்து ரகமான குதிரைகளும், மாடுகளும் இந்த திருவிழா சந்தைக்கு வரும். குறிப்பாக இங்கு விற்பனைக்கு வரும் பர்கூர் மலை இன பழுப்புநிற மாடுகள் விவசாயப் பணிகளில் கடுமையாக உழைக்கக் கூடியவை. தற்போது ஒட்டகம் மற்றும் பல்வகைப்பட்ட ஆடு,கோழி, பறவை இனங்களும் வருகின்றன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் விவசாயிகள் இங்கு வந்து மாடு, குதிரைகளை வாங்கிச்செல்வார்கள். இங்கு கிடைக்காத உள்நாட்டு மாடு, குதிரை இனங்கள் என்பது இல்லை என்றே சொல்லலாம். அதன் விலைகளும் லட்சங்களில் தீர்மானிக்கப்படும். இசைக்கு ஏற்ப நடனமாடும் குதிரைகள் கண்காட்சியின் கூடுதல் சிறப்பு.

மைசூரை ஆண்ட திப்புசுல்தான் காலம் முதல் இங்கு குதிரைச் சந்தை நடைபெற்று வருகிறது என்ற தகவல் உள்ளது. அந்தியூரில் திப்புசுல்தான் காலத்தில் கட்டிய கோட்டையின் சுவடுகள் இன்றும் உள்ளது.

கண்காட்சியின் சிறப்பு

திரைப்படங்களில் மட்டும் கிராமியத் திருவிழாக்களைக் கண்டு ரசிக்கும் நகர மக்கள், அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் பங்கேற்றால், அதன் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியும். வளையல் கடை, பழக்கடை, பொம்மைக்கடை என கிராமத்து திருவிழாவின் அனைத்து அம்சங்களோடு, மிகப்பெரிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுவது கண்காட்சி யின் கூடுதல் சிறப்பு.

இத்துடன் அந்தியூர் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகில் பத்ரகாளியம்மன் மற்றும் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோயில்கள் உள்ளது. அந்தியூருக்கு அருகில் உள்ள (17 கி.மீ) பவானியில் தான் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்திலுள்ள கங்கை-யமுனை நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்திற்கு இணை யான காவிரி-பவானி-சரஸ்வதி ஆறுகள் இரண்டற கலக்கும் புண்ணிய ஸ்தலமான கூடுதுறை உள்ளது.

அந்தியூர் அருகே மலை அடிவாரத்தில் அமைந்த கொம்பு தூக்கி அம்மன் கோயில், மலைகருப்புசாமி கோயில், புரவிபாளையம் கோயில் போன்றவை பாரம்பரியத்தையும், பக்தியையும் பறைசாற்றும் இடங்களாகும். வாரத்தில் இரு நாட்கள் அந்தியூரில் நடக்கும் வெற்றிலைச்சந்தையும் சிறப்பாகும்.

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூரில் இருந்து 160 கிலோமீட்டரில் மைசூர் உள்ளது. அந்தியூர் - மைசூர் ரோட்டில் (10கி.மீ) வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. யானைக்கூட்டமும், இதர விலங்குகளும் இங்கு நீர் அருந்த வருவதை நேரடியாக கண்டு ரசிக்க முடியும். வரட்டுப்பள்ளத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரம், கர்நாடக எல்லைவரை செல்லும் சாலை வனவிலங்குகள் நடமாடக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சாலையாகும். இந்த சாலையை இருவழிச்சாலையாக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதால், போக்குவரத்தும் இனி எளிமையாகும்.

பர்கூர் மலையில் அமைந்துள்ள பழங்குடியின கிராமங்கள் அனைத்தும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளன. இக்கிராம மக்களின் வாழ்க்கை முறை, கலைத்திறன்கள் போன்றவை சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும்.

அந்தியூரை சுற்றுலாத்தலமாக அறிவிப்பதன் மூலம், இப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, அடிப்படை வசதிகளும் மேம்பாடு அடையும் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர். முருகேசன். இது குறித்து அவர் கூறியதாவது:

தமிழர் பண்பாடு பாரம்பரியம் மற்றும் பழைமையான சந்தை நடைமுறைகளை தன்னகத்தே கொண்ட குருநாதசாமி கோயில் ஆடிப்பெருந் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடக்கிய அந்தியூரை சுற்றுலாத்தலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இப்பகுதி சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டால், இப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும். இப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகைதரும்போது கூடுதல் போக்குவரத்து வசதிகள், தங்கும் விடுதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், டிராவல்ஸ் ஏஜென்சிகள் என பலவும் இங்கு உருவாகும். அரசும் கட்டமைப்புக்காக கூடுதல் நிதி ஒதுக்கும், என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close