[X] Close

நாகேஷ் - சிவாஜி - தாதாமிராஸி! (நடிகர்திலகம் 90)


sivaji-90

நாகேஷ் - சிவாஜி

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 09:18 am
  • அ+ அ-

சிவாஜிகணேசன் பிறந்தநாள் (1.10.18) ஸ்பெஷல்

தொகுப்பு: மானா பாஸ்கரன்

31. 1965-ம் ஆண்டு வெளியான  ‘திருவிளையாடல்’ படத்தில்  தருமி கேரக்டரில் நாகேஷும், சிவனாக சிவாஜியும் நடித்த காட்சி படமாக்கப்பட்டபோது, இயக்குநர் ஏ.பி.நாகராஜன்  சிவாஜியிடம்,  ’’உங்களை டாமினேட் செய்வது போல நாகேஷின்  நடிப்பு உள்ளது. கொஞ்சம் மாற்றி எடுக்கலாமா?’’ என்று கேட்டிருக்கிறார்.  

``வேண்டாம்! அதுதான்  நாகேஷுக்கு  கிடைக்கும் பரிசு’’ என்று கூறினாராம் சிவாஜி. இதை  எல்லா மேடைகளிலும் சொல்லத் தவறியதில்லை  நாகேஷ்.

32. சிவாஜி கணேசனின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர்  நடிகர் வீ.கே.ராமசாமி.  1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் மதுரை  பாலகான சபாவில் சிவாஜி சேர்ந்தபோது, அங்கு ஏற்கெனவே சேர்ந்திருந்த வீ.கே.ராமசாமியுடன் ஏற்பட்ட நட்பு இறுதி வரை தொடர்ந்தது. 

33.  1967-ம் ஆண்டில் வெளியான திருவருட்செல்வர் படத்தில் அப்பர்  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவாஜிகணேசன். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, காஞ்சிப் பெரியவர்  சிவாஜி கணேசனை  நேரில் அழைத்துப் பாராட்டினார்.

34. மூதறிஞர்  ராஜாஜி அபூர்வமாக சினிமா பார்ப்பவர்.  தனக்குப் பிடித்த நடிகர் ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் பரதன் பாத்திரத்தில் நடித்த சிவாஜிகணேசன் என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

35. எதை எழுதுவது, எதை விடுவது ? இமயமலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும் ? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ? சிவாஜி ஒரு மலை, சிவாஜி ஒரு கடல். இப்படி சிவாஜியை புகழ்ந்தவர் - கவியரசு கண்ணதாசன்.

36. சிவாஜிகணேசன் ஒருமுறை சித்ராலயா கோபுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது தனது நெருங்கிய நண்பர் ‘புதிய பறவை’ படத்தின் இயக்குநர் தாதா மிராசியை ஒரு கதை சொல்லச் சொல்லி கேட்டுப் பார். அவரது உடல் மொழியை  அப்படியே ஏதாவது ஒரு படத்தில் வைத்தால்,  அந்தக் காட்சி பிரமாதமாக  இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். சித்ராலயா கோபு தாதா மிராசியை அணுகி கதை சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறார். தாதா மிராசியின் கதை சொல்லும்  தன்மையையும், உடல்மொழியையும்  இயக்குநர் ஸ்ரீதரிடம் அவர் சொல்ல, ஸ்ரீதர் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் தனது தந்தை டி.எஸ்.பாலையாவிடம் கதை சொல்வது போல காட்சி வைத்துவிட்டார். 

37. ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு,’ ‘நீதி’ ஆகிய 2 படங்களில் லாரி டிரைவராகவும், ‘பாபு’ படத்தில் ரிக்‌ஷாக்காரராகவும் சிவாஜிகணேசன் நடித்து இருந்தார்!

38.  'சக்ஸஸ்' என்று    முதன்முதலில் சிவாஜிகணேசன்  வசனம் பேசிய இடம் இன்றும் ஏவி.எம்., ஸ்டுடியோவில் நினைவு சின்னமாக திகழ்கிறது!

39. சீனா  யுத்த நிதிக்காக பிரபல நடிகர் - நடிகைகளை வைத்து  நட்சத்திர  கலை இரவு  நடத்தி...  நிதி வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்தது.  நட்சத்திர இரவின்போது,  இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராக இருந்த சித்ராலயா கோபு  ஒரு நாடகம் எழுத... சிவாஜி  அதில் நடிக்க...  அந்த நாடகம் பெரிய கைத்தட்டல் வாங்கியது. அந்த நாடகத்தின் பெயர்: கலாட்டா கல்யாணம். 

இந்த நாடகத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்ட சிவாஜி கணேசன்... சித்ராலயா கோபுவிடம் ‘இந்த நாடகத்தை நானே சினிமாவாக எடுக்கிறேன்... இதை நான் பி.மாதவனை வைத்து டைரக்‌ஷன் செய்துகொள்கிறேன்’ என்று சொல்லி கதை உரிமையை விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.  

அப்போது சிவாஜியிடம் ஒரே ஒரு கண்டிஷன் போட்டார் சித்ராலயா கோபு: ‘’இந்தப் படத்தை சி.வி.ராஜேந்திரன் டைரக்ட் செய்யட்டும்’’ என்றார்.  அதைக் கேட்ட சிவாஜி` ‘’அந்தப்  பய மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு’’ என்று சொல்லி சித்ராலயா கோபுவின் கண்டிஷனை ஏற்றுக்கொண்டார்.

அப்படித்தான் ’சிவாஜி ஃபிலிம்ஸ்’  மேற்பார்வையில்  ’ராம்குமார் ஃபிலிம்ஸ்’  `கலாட்டா கல்யாணம்’  திரைப்படத்தை தயாரித்தது.   இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா,  கே.ஏ.தங்கவேலு, சுந்தரிபாய், ஏவி.எம்.ராஜன், நாகேஷ், கே.கோபாலகிருஷ்ணன்,  சோ, வி.எஸ்.ராகவன் ஆகியோர் நடிப்பில் மிளிர்ந்தது.

40. தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

 - தொடரும்...

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close