[X] Close

வெள்ளி விழா காண்கிறது விழுப்புரம் மாவட்டம்: 25ம் ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கிறது


villupuram-enters-25-years

விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டதை அறிவிக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 12:41 pm
  • அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன.

வெள்ளிவிழா ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கும் இம்மாவட்டம்  வளர்ச்சி, வீழ்ச்சி, சாதனை, வேதனை என அனைத்தும் கலந்து நிற்கிறது.
பழமையும் பெருமையும்  எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் ஊர், அறியாமையில் இருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் - 'விழுப்புரம்‘ என்றார் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர்,

‘விழுப்புரம்' என்றால் 'விழுமியபுரம்‘ என்று பொருள் தருவார் கிருபானந்த வாரியார், ‘இராமன் வில்லைப் பிடித்துப் பொன் மானை நோக்கி அம்பு எய்த இடம் என்பதால், இந்த இடம் வில்லுப்புரமாயிற்று‘ என்பார் திருக்குறளார் வீ.முனுசாமி. 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவக்கரை கல் மரங்கள், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் உள்ளிட்டத் தொன்மையான சின்னங்களைத் தன்னகத்தே கொண்ட, பழமையும் பெருமையும் மிக்கது இம்மாவட்டம். 

அருவா நாடு, மலாடு, திருமுனைப்பாடி நாடு, நடுநாடு, சேதிநாடு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பகுதி, தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாகவும் விளங்கியது.சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற ஊர்கள் இடம்பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனார், மெய்கண்ட தேவர், கவிகாளமேகம், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் ஆகியோர் அவதரித்ததும், பாரியின் மகள்களை அடைக்கலப்படுத்திவிட்டு கபிலர் கனல் புகுந்ததும், கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி ஆட்சி புரிந்ததும் இந்த மண்ணில்தான்.

பல்லவர்களின் குடைவரைக் கோயில்கள், ஓவியங்கள், சமணக்குகைத் தளங்கள் – கல்வெட் டுகள், சோழர்களின் கலைச்சின்னங்கள் இந்த மாவட்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. பல்லவர், சோழர், பாண்டியர், காடவர், சம்புவராயர், முகலாயர், விஜயநகரர், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர் மற்றும் பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஆகிய அரசுகளின் ஆளுகைகளில் இருந்துள்ளது இந்த மாவட்டம். 1801ம் ஆண்டு  கேப்டன் கிரஹம் தலைமையில் தென்னார்க்காடு மாவட்டம் உருவானது. அப்போது இதில் இடம்பெற்ற 20 தாலுகாக்களில் விழுப்புரமும் ஒன்று. 

1975ம் ஆண்டு அரசுப் போக்குவரத்துக் கழகமும், 1982ம் ஆண்டு  தென்னார்க்காடு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமும், 1988ம் ஆண்டு  காவல் மாவட்டமும் விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்டன. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த போது விழுப்புரம் வருவாய் மாவட்டம் தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
1993ல் உருவானது 

ஆனாலும் அது 1993ம் ஆண்டில்தான் செயல் வடிவம் பெற்றது. 'கடலூரை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாக்க் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கலாம்' என முடிவெடுத்த அரசு, இந்த மாவட்டத்திற்கு “விழுப்புரம் வள்ளலார் மாவட்டம்” எனப் பெயர் சூட்டியது. இதன் தனி அதிகாரியாக  ரமேஷ் குமார் கன்னா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். 

வள்ளலார் வாழ்ந்து மறைந்தது கடலூரில். எனவே அம்மாவட்டத்திற்கே அவரதுப் பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் 30.09.1993 ம் தேதி  கடலூர் மாவட்டத்திற்கு, ‘தென்னார்க்காடு வள்ளலார் மாவட்டம்' எனப் பெயர் சூட்டிய முதல்வர் ஜெயலலிதா, “விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டம்” எனும் புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். (ராமசாமி  படையாட்சியாரும் கடலூர் மாவட்டத்துக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது)

1997இல் தமிழக அரசின், மாவட்டங்களுக்கான பெயர் மாற்ற நடவடிக்கையினைத் தொடர்ந்து, இதன் தலைநகரான “விழுப்புரம்” என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும், தெற்கில் கடலூர் மாவட்டமும், மேற்கில் சேலம்,தர்மபுரி மாவட்டங்களும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

13 தாலூகாக்கள் 

விழுப்புரம் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7,222.03 சதுர கிலோ மீட்டராகும்.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  3,458,873 மக்கள் தொகை உள்ளது. 4 வருவாய் கோட்டங்கள், 13 வட்டத் தலை நகர்கள்,22 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள்,15 பேரூராட்சிகள்,1099 கிராமங்கள் என பரந்து விரிந்துள்ள இம்மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம், மலட்டாறு, மணிமுத்தாறு, கோமுகி, சங்கராபரணி ஆகிய ஆறுகளும், வீடூர், கோமுகி, திருக்கோவலூர், மணிமுக்தா, எல்லீஸ் அணைக்கட்டுகளும் உள்ளன.

முக்கிய சுற்றுலாத் தலங்கள் 

கல்வராயன் மலை, செஞ்சிக் கோட்டை, வீடூர் அணை, ஆரோவில் ஆகியவை முக்கியச் சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - புதுச்சேரி  தேசிய நெடுஞ்சாலை, கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, புதுவை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகியவை இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றன.
இம்மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அஷோக் வர்தன் ஷெட்டி 30.09.93ம் தேதி பதவியேற்றார். அப்போது மாவட்ட எஸ் பியாக விஜயகுமாரும் பதவி வகித்தவர்கள். 

தற்போது 19ஆவது ஆட்சியராக இல.சுப்பிரமணியனும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ் ஜெயகுமாரும் பதவி வகிக்கின்றனர். இந்த 25 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன?  இழந்தது என்ன?  பெறத் தவறியது என்ன? என்பதை மாவட்ட நலனில் அக்கறை உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் கூறுகின்றனர். அந்தக் கருத்துகளை வரும் நாட்களில் பார்ப்போம்...

மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தோர் 

காஞ்சி சங்கராச்சாரியர் எனப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்,புகழ்பெற்ற சரித்திர கதை எழுத்தாளர் சாண்டில்யன், தேசிய விருது பெற்ற மறைந்த படதொகுப்பாளர் கிஷோர், முன்னணி திரைப்பட இயக்குநர் முருகதாஸ், சி பி எம் முன்னாள் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, திமுகவிற்கு உதய சூரியன் சின்னம் வழங்கிய ஏ. கோவிந்தசாமி, திருக்குறள் முனுசாமி உள்ளிட்டவர்களும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த
வர்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பூர்வீகம் சூரக்கோட்டையாக இருந்தாலும் பிறந்தது விழுப்புரத்தில்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close