[X] Close

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் காப்பகம் தெரியாமல் பக்தர்கள் தவிப்பு


madurai-meenakshi-amman-temple-issue

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 12:20 pm
  • அ+ அ-

என்.சன்னாசி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள்  கோயிலுக்குள் நுழையும் இடத்திலுள்ள செல்போன் காப்பகம் தெரியாமல் தவிக்கின்றனர். ஒலி்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி  வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். 

செவ்வாய், வெள்ளி,  ஞாயிறு மற்றும் திருவிழாக் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கோயிலின் பாதுகாப்புக் கருதி தீவிரப் பரிசோதனைக்குப் பிறகே பக்தர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல கடந்த சில மாதங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து கோயில் நுழைவாயில் அருகே காலணி காப்பகத்தின் பக்கத்தில் பக்தர்களின் செல்போன்களை  பாதுகாத்து திருப்பி வழங்கும் சிறப்புக்  கவுன்டர் ஒன்று திறக்கப்பட்டுச் செயல்படுகிறது. ஒரு செல்போனுக்கு ரூ.10 கட்டணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். தரிசனம் முடிந்து வெளியே செல்லும்போது, ரசீதை கொடுத்து தங்களது செல்போன்களை வாங்கிக் கொள்ளலாம். இதுவே தற்போது நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில்  முக்கிய நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது, காலணி, செல்போன்களை ஒப்படைக்கும் இடத்தில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. கோயிலுக்குள் செல்வோரின் வரிசையைக் கடந்து செல்போன், காலணி காப்பகத்திற்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. 

செல்போன் காப்பகம் தெரியாமல்  பக்தர்கள் செல்போன்களுடன் உள்ளே செல்கின்றனர். போலீஸார் பரிசோதிக்கும் இடத்திற்குச் செல்லும்போது, அங்கிருந்து திருப்பி அனுப்புகின்றனர்.  மறுபடியும் செல்போன் காப்பகத்திற்குச் சென்று, ஒப்படைத்துவிட்டு கோயிலுக்குள் செல்வதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது.

செல்போன் காப்பகங்களை பக்தர்கள்  எளிதில் அறியும் வகையில் கவுன்டர் அமைக்க வேண்டும். சித்திரை வீதிகளில்   கூடுதல் கவுன்டர்கள்  அமைக்க வேண்டும். செல்போன் காப்பகம் பற்றி  தெரிந்துகொள்ள வசதியாக தமிழ் உட்பட பிற மொழிகளில்  டிஜிட்டல் போர்டு, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தால் காப்பகத்தை எளிதில் அறிந்துகொள்ள முடியும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவண்ணாமலையைச் சேர்ந்த பக்தர் முருகன் கூறியதாவது:  எனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் முதல்முறையாக மீனாட்சி கோயிக்கு வந்தேன். கோயிலுக்குள் செல்போனுக்குத் தடை உள்ளது பற்றிய  தகவல் தெரியாமல் உள்ளே சென்றோம். போலீஸார் பாதியில் திருப்பிவிட்டனர். ஒரு மணி நேரம் தாமதமானதால்  கோயில் நடை சாத்தப்பட்டது. ஒளிபெருக்கி மூலம் செல்போன் காப்பகம் பற்றி தெரியப்படுத்த வேண்டும். செல்போன் காப்பகத்தில் காத்திருப்பதைத் தவிர்க்க சேவையை விரைந்து வழங்க வேண்டும் என்றார். 

மீனாட்சி கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டபோது,  செல்போன், காலணி காப்பகங்களில் போதிய ஊழியர்கள் உள்ளனர். செல்போன் காப்பகம் பற்றி கவுன்டர் அருகில் போர்டுகள் உள்ளன. இருப்பினும் பக்தர்களின் வசதிக்கென தமிழ் உட்பட பிற மொழிகளில் செல்போன் காப்பகம், உடமைகள் பாதுகாப்பகம் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்த ஆடியோ மூலம் ஒலிபரப்பவும், டிஜிட்டல் போர்டு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close