[X] Close

உலக இதய தினம்: இதயத்தை பாதுகாப்போம்


world-heart-day-special-article

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 12:05 pm
  • அ+ அ-

ஒரு மனிதனின் நல்வாழ்வுக்கு அதிமுக்கியம் மூளையா, இதயமா என்ற கேள்வி எழும்போது இதயமே பிரதானமாகி விடுகிறது. இதய பாதுகாப்பை வலியுறுத்தவே உலகம் முழுவதும் உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மாரடைப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். சரியான நேரத்தில் சரியான முதலுதவியும், சிகிச்சையும் கிடைக்காததே இதற்கு காரணம்.

இயற்கையிலேயே இந்தியர்களின் இதய  ரத்தக் குழாயின் அளவு சிறிது என்பது பலரும் அறியாத தகவல்.மேலைநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இதய ரத்தக்குழாயின் விட்டம் 2 மி.மீ. முதல் 3 மி.மீ. வரை இருக்கும். இந்தியர்களின் இதய ரத்தக் குழாயின் அளவு ஒன்று முதல் ஒன்றரை மி.மீ. மட்டுமே. இதனால்தான் உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவை மாறும்போது ரத்தக் குழாய்களில் எளிதாக கொழுப்புபடிந்து,  மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதய பாதிப்புகளால் பேரிழப்பு ஏற்படாமல் தடுக்க சில விஷயங்களைக் கடைபிடிப்பது அவசியம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தகுந்த இதய நோய் நிபுணரைப் பார்த்து ரத்த அழுத்தம், சர்க்கரை, இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சிறு வயதிலேயே உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, பிரணாயாமம், நடைப்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடித்தால் பிரச்சினை இல்லை. அதேபோல, வந்த பின் காப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

7 லட்சம் பேர் உயிரிழப்பு

நாட்டில் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் மாரடைப்புக்கு பலியாகின்றனர் என்பது வேதனைக்குரியது. அதிலும், நகர்ப்புற மக்கள்தான் அதிகம். நகரங்களில் உள்ள வாழ்க்கை முறைதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. சிகரெட்டையும், கொழுப்பு மிகுந்த உணவைத் தவிர்ப்பதும், உடற்பயிற்சியும், மன அமைதியும் முக்கியம். 

தனி நபருக்கு வரும் மாரடைப்பால் அவருக்கு மட்டுமின்றி, அவரது குடும்பத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாகன ஓட்டிக்கு மாரடைப்பு வந்தால் எத்தனை பேரின் வாழ்க்கை நாசமாகிறது என்பதை உணர வேண்டும். புகைப் பழக்கத்தால் கடந்த 1950-ல் இருந்து 2000-ம் ஆண்டு வரை 6 கோடிக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கின்றனர். இரண்டாம் உலகபோரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். எனவே, சிகரெட் மட்டுமின்றி, புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் ஆபத்தானதுதான் என்பதை உணர வேண்டும். நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், இதய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

உணவுமுறைகள்

கோதுமை ரவை, தானியங்கள், முளைக் கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், நவதானியங்கள், கொட்டை வகை, கீரை, பழ வகைகள், காய்கறி, வைட்டமின் சி பழவகை, காய்கறி சாலட், பழ சாலட், வேர்க்கடலை, சுண்டல், சப்பாத்தி, லெமன் டீ, மோர், பழரசம். (அன்றாட உணவில் காய்கறி, கீரை, பழங்கள் அதிகளவில் சேர்க்க வேண்டும்.)

காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாறு, ஆரஞ்சுசாறு, திராட்சை சாறு, பப்பாளி பழம், கொய்யா பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். காலை 11 மணியளவில் நீர்மோர், சுண்டல், வெள்ளாரி போன்றவற்றை சாப்பிட வேண்டும். பகல் 12 மணியளவில் ஒரு கப் அரிசி சாதம், 2 கப் காய்கறி பொறியல் வகைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். மதியம் 3 மணியளவில் லெமன் டீ, கிரீன் டீ, சுண்டல், காய்கறி சாலட் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இரவு 2 இட்லி, 2 தோசை, அண்ணாச்சி பழம், கொய்யா பழம், பப்பாளி பழம் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். காலை உணவு காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளும், மதிய உணவு 12.30 மணி முதல் 1.30 மணிக்குள்ளும், இரவு உணவு 7.30 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும்.

தவிர்க்கவேண்டியஉணவுவகைகள்

ரொட்டி, நெய், குளிர்பானம், போண்டா, எண்ணெய், உப்பு, பூரி, வெண்ணெய், சர்க்கரை, சிப்ஸ், தயிர், கற்கண்டு, வடை, காபி, பால், மிக்சர், டீ, மைதா, உருளைகிழங்கு, அரிசி, மாமிசம், ஊறுகாய் மற்றும் மது, புகைபிடித்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

மாரடைப்பு யாருக்கு வரும்?

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புகைப் பிடிப்பவர்கள், 40 வயதுக்கு  மேற்பட்டோர், உடல் பருமன் உள்ளவர்கள் (80கிலோவுக்குமேல்), ரத்தத்தில் கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், பரம்பரையாக இதயவியாதி உள்ள குடும்பத்தினர், அதிக மன அழுத்தம் மற்றும் அதிக மனச்சுமையோடு வேலை செய்பவர்கள்.

அறிகுறிகள் மாரடைப்பு ஏற்படுவதை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்: நெஞ்சுப்பகுதியில் அசவுகரியமான உணர்வு, அதிக அழுத்தமான நெஞ்சுவலி, தாடை மற்றும் கழுத்து வலி, முதுகுப் பகுதி மற்றும் இடது கைக்கு வலி பரவுதல், குளிர்ந்த இடத்திலும் வியர்வை, பிசுபிசுப்பு, நடப்பதற்கு, மாடிப்படி ஏறுவதற்கு சிரமம், முச்சுவிடுவதில் சிரமம், தலைச்சுற்றல், மயக்கம், படபடப்பு. மேற்கூறிய அறிகுறிகள் திடீரென்று ஏற்படுமானால் இது மாரடைப்பு வருவதை குறிக்கலாம். 

இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close