[X] Close

டணால் தங்கவேலு (எ) எழுத்தாளர் பைரவன் வாழ்க!


kathangavelu

தில்லானா மோகனாம்பாள் தங்கவேலு

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Sep, 2018 13:42 pm
  • அ+ அ-

’அட... என்ன இவன் இப்படிப் பேசுறான்? இவனைத் தூக்கி எரவாணத்துல வைக்க?’..., ‘என்னடா இவன்.. உண்மையக் கூட சொல்லவுடமாட்டேங்கிறானே’, ... ‘உன்னைத் தூக்கி உலைல வைக்க’... என்பன போன்ற வசனங்கள், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் மிகப்பெரிய கைத்தட்டல்களைப் பெற்றன. சொல்லும் மொழியும் புதுசு, சொல்லும் பாணியும் தனி தினுசு என அலட்டலோ ஆர்ப்பரிப்போ இல்லாமல், காமெடி ராஜாங்கம் பண்ணியவர் அவர். எழுத்தாளர் பைரவன் என்று சொன்னால் போதும்... தடாலென்று சொல்லிவிடுவீர்கள் டணால் தங்கவேலு என்று! அதாவது கே.ஏ.தங்கவேலு. காரைக்கால் அருணாசலம் தங்கவேலு.

இன்றைக்கு வயதாகிவிட்டாலும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்கள் பல நடிகர்கள். கொடுத்தால் ஹீரோ வேஷம் கொடுங்க. இல்லேன்னா நடிக்கவே இல்லை என்று வீட்டில் இருக்கவும் தயாராகி, முடங்கிக் கிடக்கிறார்கள் இன்னும் பல நடிகர்கள். ஆனால், இளம் வயதிலேயே ஹீரோவுக்கு அப்பா, மாமனார் கேரக்டரெல்லாம் போட்டு, எந்த வேஷமா இருந்தா என்ன... கொடுத்த வேஷத்துல வெளுத்துவாங்குவேன் என்று ஜொலித்துப் பிரகாசித்த சொற்ப நடிகர்களில் டணால் தங்கவேலுவும் ஒருவர்.

அந்தக் காலத்தில், கோயில் விழாவோ, வீட்டில் காதுகுத்து கல்யாணமோ... எந்த விழா வைபவமாக இருந்தாலும் சரி... அப்போது ஒன்று நிகழ்ந்தே தீரும்.  இன்றைக்கு ஐம்பதை நெருங்கியவர்களுக்குக் கிடைத்த ஆனந்தக் குதூகலம் அது. அந்த ஐஸ்க்ரீம் நினைவுகளில்... விழாக்களிலும் இலங்கை வானொலியிலும் இரண்டு ஒலிச்சித்திரங்கள் வெகு பிரபலம். திருவிளையாடல். இன்னொன்று கல்யாணப்பரிசின் தங்கவேலு போர்ஷன். அதுதான் எழுத்தாளர் பைரவன் கேரக்டர்!

கலைவாணருக்கு அடுத்த காலகட்டத்தில் தங்கவேலுதான் அந்த இடத்தைப் பிடித்திருந்தார். நாகேஷ், சந்திரபாபு வந்த போதிலும் தனக்கென உள்ள டயலாக் டெலிவரியால் அவர்களுடன் போட்டிபோட்டு, வெளுத்து வாங்கினார்.

சிவாஜிக்கு அப்பாவாகவும் நடித்திருப்பார். கலாட்டா கல்யாணம் படத்தில் மாமனாராகவும் நடித்திருப்பார். எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களிலும் சிவாஜிகணேசனின் பாசமலர் மாதிரியான படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தவர்தான் தங்கவேலு.

ஆனாலும் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் கதாபாத்திரம், எம்ஜிஆர், பானுமதி, சக்ரபாணி, வீரப்பா ஆகியோரை அடுத்து இவரையும் பேசவைத்தது. அடுத்த வீட்டுப் பெண் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்குப் பின்னே இருந்து குரல் கொடுக்கும் காட்சியும் பாடலும் செம ஹிட்டு. காதலிக்கவைப்பதற்காக இவர்படும் பாடு, பெரும்பாடு. மகா நகைச்சுவை.

காரைக்காலுக்கு அருகில் உள்ள திருமலைராயன் பட்டினம்தான் இவரின் சொந்த ஊர். சென்னை தி.நகர், இப்போது சென்னையின் அடையாளம். இங்கே உள்ள ராஜாபாதர் தெரு, அடுத்தடுத்த காலகட்டங்களில் இன்னும் பிரபலமாயிற்று. ஆனால், அந்த ராஜாபாதர் தெரு, அந்தக் காலத்தில் மிகப்பிரபலமானதற்கு காரணம்... அங்குதான் தங்கவேலு வீடு இருந்தது.

இயக்குநர் ஸ்ரீதரின் முதல் இயக்கம் கல்யாணப்பரிசு. இந்தப் படத்தில், மிக ஆழமான காதல் கதைக்கு நடுவே, சோகக்கதைக்கு இடையே, அவர் கொண்டுவந்ததுதான் எழுத்தாளர் பைரவன் என்கிற கற்பனைக் கேரக்டர். அந்த ஆப்பிள் ஜூஸ்... ஆட்டுக்கால் ஜூஸ் வசனம் வெகு பிரபலம். ‘தட்டுனான் பாரு... என்பார் தங்கவேலு. அவரின் மனைவி, ‘என்ன முதுகுலயா...’ என்பார். தியேட்டரே கைத்தட்டும். மன்னார் அண்ட் கம்பெனியை இன்றைக்கும் சிரித்துக்கொண்டே தேடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.  

அதேபோல் ஸ்ரீதரின் தேன்நிலவு சி.வி.ராஜேந்திரனின் சுமதி என் சுந்தரி என்று எத்தனையோ படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நட்டுவனார் கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருப்பார். எம்ஜிஆரின் நம்நாடு படத்தில் வில்லன்களில் ஒருவர். அதே எம்ஜிஆரின் உழைக்கும் கரங்களிலும் வில்லன். எங்கவீட்டுப் பிள்ளை படத்தில் நம்பியாருக்கு மேனேஜர் இவர். எம்ஜிஆர், சாட்டையைச் சுழற்றி நம்பியாரை அடிப்பார். நான் ஆணையிட்டால் பாடல் ஆரம்பமாகும். நம்பியாருக்கு விழுந்த அடியில் உறைந்துபோய் நின்றுவிடுவார் தங்கவேலு. ஆடாமல், அசையாமல், அப்படியே நின்று நடித்திருப்பார். அதனால்தான் இன்றைக்கும் நிலைத்து நிற்கிறார் தங்கவேலு.

குணச்சித்திரம், காமெடியன், வில்லன் என்பதெல்லாம் நமக்குத்தான். மகாகலைஞனுக்கு அதுவொரு கதாபாத்திரம், அவ்வளவுதான்!

முத்துலட்சுமியுடன் ஜோடி சேர்ந்து செய்த காமெடிகள் அப்போதே தெறிக்கவிட்டிருக்கும். அடுத்து சரோஜாவுடன் சேர்ந்து காமெடியில் சரவெடி கொளுத்திப்போட்டிருப்பார்.

800 படங்கள். சளைக்காமல் கடுமையாக உழைத்தவர். இவருடைய குரல் ஒருபக்கம் நடித்துக்கொண்டிருக்கும். உடல் இன்னொரு பக்கம் நடிப்பை மெருகேற்றிக்கொண்டிருக்கும். படபடவென சிமிட்டுகிற கண்கள், நடிப்பை எங்கோ கொண்டுபோய்விடும். ஆனால் ஒரு சோகம்... டணால் தங்கவேலுவுக்கு, உரிய இடத்தை, மரியாதையை, கவுரவத்தை இந்தத் தமிழ்த்திரையுலகம் தங்கவேலுவுக்குத் தந்திருக்கிறதா என்றால் இல்லை என்ற பதில் ரெடியாக இருக்கிறது.

தங்கவேலு எனும் கலைஞன், நம் தமிழ் சினிமா சரிதத்தின், இனிய பக்கங்கள். எம்ஜிஆரைச் சொன்னாலும் இவர் வருவார். சிவாஜியைச் சொன்னாலும் இவரைச் சொல்லியாகவேண்டும். அவருக்கு ஒரு ராயல்சல்யூட்!

டணால் தங்கவேலு நினைவு தினம் இன்று (28.9.18). அவரைப் போற்றுவோம். வணங்குவோம்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close