[X] Close

தென் மாவட்ட சுற்றுலா தலங்கள் புறக்கணிப்பா? - இன்று நடக்கும் உலக சுற்றுலா விழாவில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? 


world-tourism-day-special-article

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 10:20 am
  • அ+ அ-

 

ஒய். ஆண்டனி செல்வராஜ்

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் பார்வை படாததால், தென் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன.

இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 29 இடங்களில் 5 இடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இதில், தென் மாவட்ட சுற்றுலா தலங் களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான உலக சுற்றுலாத் தினக் கொண்டாட்டம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக் கிறது. ஆனால், அதற்காக பெருமைப் பட்டுக் கொள்ளும் நிலையில் தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களை சேர்ந்த மக்கள் இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், முறையான பராமரிப்பு இன்றி , அவை சுற்றுலா அடையாளங்களை இழந்து வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

மதுரை, கொடைக்கானல், ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ‘ஹெலிகாப்டர் சுற்றுலா’ தொடங்கப்படுவதாக, கடந்த 4 ஆண்டு களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் ஆய்வு நிலையிலேயே உள்ளது.

தற்போது மதுரைக்கு 1.50 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சித்திரைத் திருவிழா, பொங்கல்விழா மற்றும் ஜல்லிக்கட்டை காண வருகிறார்கள். ஆனால், அவர் களுக்கான சுற்றுலா வழிகாட்டுதல் உதவி மையங்கள் இல்லை. ஒவ்வொரு இடத்துக்குச் செல்வதற்கு தனியார் சுற்றுலா நிறுவனங்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், ரிக்சா வண்டிக்காரர்களை நம்பி இருக்கும் நிலை உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வாகனங்களை நிறுத்த பாதுகாப்பான பார்க்கிங் வசதி இல்லை. இக்கோயிலைச் சுற்றி ஒட்டுமொத்த வணிக நிறுவனங்களும் அமைந் துள்ளதால் சுற்றுலா பயணிகள் நெரிசலில் தவிக்கின்றனர். ஒருமுறை வந்தவர்கள், மீண்டும் வர தயங்குகின்றனர். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவசரத்துக்கு ஒதுங்க சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லை. இங்குள்ள சரவணப் பொய்கை கழிவுகளின் சங்கமமாக உள்ளது.

திருவிழா காலங்களில் பக்தர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவலம் உள்ளது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மாரியம்மன் தெப்பக்குளம் வறண்டு கிடக்கிறது.

மதுரை அருகே 18 கி.மீ. தொலைவில் அழகர்கோவிலுக்கு செல்ல சரியான போக்குவரத்து வசதியில்லை. நகரின் நடுவில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள பிரம்மாண்ட தூண்கள் கையெ ழுத்து கிறுக்கல்களால் அசுத்தமாக காட்சி அளிக்கிறது.

மதுரையிலிருந்து 121 கி.மீ தொலைவில் உள்ள சிறந்த கோடைவாசஸ்தலம் கொடைக்கானல். கொடைக்கானல் ஏரியில் மனிதக் கழிவுகள் மிதப்பதாக வந்த செய்தியால் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழநி மலையில் அமைந்தி ருக்கும் தண்டாயுதபாணி கோயில் மதுரையிலிருந்து 118 கி.மீ. தொலைவில் உள்ளது. பழநியையும், கொடைக்கானலையும் இணைக்கும் சுற்றுலா சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.

பழநியையும், கொடைக்கானலையும் இணைக்கும் ரோப்கார் திட்டமும் ‘ஹெலிகாப்டர்’ சுற்றுலாவை போல் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நிலையிலேயே உள்ளது.

ராமேசுவரம் அக்னித் தீர்த்தக் கடற்கரை சரியாக பராமரிப்பின்றி மிகவும் அசுத்தமாக காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் புனித நீராடாமல் வேதனையுடன் செல்கின்றனர். தென் மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் வகையில், மதுரையில் இன்று நடக்கும் உலக சுற்றுலா விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் முக்கிய திட்டங்களை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close