[X] Close

செயற்கைக்கோள் போன் மானிய விலையில் கிடைக்குமா? - தோணி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு


bsnl-phone-for-cheap-rate

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் சரக்கு ஏற்றிச் செல்ல தயாராகும் தோணி. படங்கள்: ராஜேஷ்

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 10:13 am
  • அ+ அ-

 

ரெ.ஜாய்சன்

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 'செயற்கைகோள் போன்' தோணித் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், அதன் விலை அதிகமாக இருப்பதால் தோணி உரிமையாளர்களால் அதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. எனவே, செயற்கைக்கோள் போனை மானிய விலையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவினப்படுத்தப்பட்ட சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து மற்றும் பெரிய சரக்கு கப்பல்கள் கடல் வாணிபத்தில் அறிமுகம் ஆவதற்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தோணித் தொழில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும் பெரும் பங்கு வகித்தது. தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே 1990 வரை தோணி போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வந்தது. சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து அறிமுகம் மற்றும் ஈழ இனப்போர் காரணங்களால் தூத்துக்குடி - கொழும்பு தோணி போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

இலங்கை அரசின் தடை உத்தரவு, சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து மற்றும் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவின்மை ஆகிய காரணங்களால் தோணித் தொழில் முற்றிலும் முடிவு பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

மாற்று வழித்தடம்

இருப்பினும், இத்தொழிலை நேரடியாக மற்றும் மறைமுகமாக நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி, மாற்று வழியாக மாலத்தீவு மற்றும் லட்சதீவுகளுக்கு தற்போது தோணிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.பிரின்ஸ்டன் பர்னாண்டோ கூறும்போது, ``100 தோணிகள் வரை இருந்த தூத்துக்குடியில் தற்போது 30 தோணிகள் மட்டுமே உள்ளன. இதில் 10 தோணிகள் மாலத்தீவுக்கும், 20 தோணிகள் லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன” என்றார்

தேய்ந்து வரும் தொழில்

அவர் மேலும் கூறும்போது, டீசல் விலை உயர்வு, பருவநிலை மாற்றங்கள், சரக்குகள் பற்றாக்குறை, சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்தின் அசுர வளர்ச்சி, மத்திய, மாநில அரசுகளின் உதவி இல்லாதது போன்ற காரணங்களால் தோணித் தொழில் தேய்ந்து கொண்டே வருகிறது

ஒரு தோணி மாலத்தீவு சென்று வருவதற்கு 3,600 லிட்டர் டீசல் தேவை. டீசல் விலை உயர்வு இந்த தொழிலுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

ஒக்கி புயலால் பாதிப்பு

சங்கத்தின் செயலாளர் எஸ்.லசிங்டன் கூறும்போது, கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயல் தோணித் தொழிலை முற்றிலும் புரட்டி போட்டுவிட்டது. ஒக்கி புயலில் சிக்கி 4 தோணிகள் முழுவதுமாக கடலில் மூழ்கி போய்விட்டன. இந்த தோணிகளில் இருந்த தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனாலும், தோணி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் போன்

தோணிகளுக்கு நவீன செயற்கைக்கோள் போன் வசதி செய்து தரவேண்டும் என, தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் தோணிகளுக்கான செயற்கைக்கோள் போனை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

விலை அதிகம்

ஆனால், இதன் விலை ரூ. 1 லட்சம். இந்த உயிர்காக்கும் கருவியை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தோணி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொலைதொடர்பு கருவி மூலம் இந்திய கடல் எல்லை பகுதியில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். தோணிகளை பொறுத்தவரை இலங்கை, மாலத்தீவு கடல் எல்லைகளுக்கு அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் இந்த கருவி செயல்படாது.

மானிய விலை

எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய போதிலும், அதிகமான விலை மற்றும் ரோமிங் வசதி இல்லாதது போன்றவற்றால் இந்த உயிர்காக்கும் கருவி பயனற்றதாக போய்விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் எங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த உயிர்காக்கும் செயற்கைக்கோள் போனை மானிய விலையில் வழங்கவும், அண்டை நாட்டு கடல் எல்லைகளிலும் தொடர்பு கொள்ளும் வகையில் ரோமிங் வசதியுடன் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close