[X] Close

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமைகளில் தொடரும் தீக்குளிப்பு சம்பவங்கள்: நிரந்தரமாக வைக்கப்பட்டது தண்ணீரும், கம்பளியும்


villupuram-collector-office-issue

தீக்குளிக்க முயன்ற நடராஜனை போலீஸார் அழைத்துச் செல்கின்றனர்.

  • kamadenu
  • Posted: 25 Sep, 2018 10:08 am
  • அ+ அ-

விழுப்புரம் மாவட்டத்தில் 1,099 கிராமங்கள், 15 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 34.6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் எந்த வகையிலாவது அரசு அதிகாரிகளை அணுகியே ஆக வேண்டும். அப்படி அணுகும்போது அவர்களுக்கு திருப்தியான அளவில் பதில் கிடைக்காதபட்சத்தில் உயர் அதிகாரிகளிடம் முறையிடு கிறார்கள். இது அனைத்து மாவட்டத்திலும் உள்ள நடைமுறை.

தங்களின் முறையீட்டில் சில நேரங்களில் தீர்வு ஏற்படா தபட்சத்தில், ஆட்சியரின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு திங்கள்கிழமையும் மனு கொடுக்க வருபவர்களில் சிலர் தீக்குளிக்க முயல்வது தொடர்கதையாகிறது.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்புகின்றனர். சமயங்களில் அவர்களுக்கான உளவியல் ஆலோசனைகளும் அளிக்கப் படுகின்றன. சில நேரங்களில் தீக்குளிக்க முயல்வோரின் பிரச் சினைகளில் உண்மைத்தன்மை இல்லாமல் இருந்தாலோ அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறையினர் முறையாக வழக்குப்பதிவு செய்கின்றனர். சில நேரங்களில் தீக்குளிக்க தூண்டியவர்களை கண்டறிந்து அவர்களையும் கைது செய்கின்றனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயலும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் அலுவலக பிரதான வாயிலில் ஒரு பக்கெட்டில் தண்ணீரும், கம்பளி போர்வையும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதில்லை

விபரீத முயற்சி எடுத்து, தங்களின் கோரிக்கைகளை முன் வைப்பவர்களின் மனுக்கள் என்ன ஆகின்றன?

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததில், “ஆட்சியர் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்புகிறோம். முறையாக கள ஆய்வு செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, உரிய காலத்திற்குள் குறிப்பிட்ட மனுக்களின் நலன்கள் பயனாளியை சென்றடைய வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறோம். தற்கொலை மிரட்டல் விடும் நபருக்கு ஒரு சதவீதம் கூட கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதில்லை; அதேநேரம் அந்த மனுக்களை நாங்கள் தவிர்ப்பதும் இல்லை” என்கின்றனர்.

'தன் பெயரை குறிப்பிட வேண்டாம்' என்று கூறி அதிகாரி ஒருவர் இதுபற்றி பேசியபோது, “அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம் சொல்லலாம். ஏட்டு விசாரணை செய்ய வேண்டிய புகாரை, ஏட்டு விசாரிக்கவில்லை என்று டிஜிபிக்கு அனுப்பினாலும், மீண்டும் அதே ஏட்டுவிடம் தான் விசாரணைக்கு வரும் என்பார்கள். அதேபோல உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்க்க எடுக்கும் இந்த மாதிரியான விஷமத்தனமான முயற் சிகளை விட்டுவிட்டு சட்டப்படி அதை அணுகும் வகையில் முயற்சி செய்யலாம்” என்கிறார்.

முறைப்படுத்தினாலே போதும்

எங்கெங்கோ முட்டி மோதி, முடிவில்லாமல் தங்கள் பிரச் சினையை ஆட்சியரிடம் முறை யிட்டால் தீர்வு காணலாம் என பாதிக்கப்பட்டவர்கள், பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை அளிக்கிறார்கள். வாரந்தோறும் இப்படி மனுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சில தீர்க்கப்படுகின்றன; சில பரிசீலனையில் இருக்கின்றன; சில நிராகரிக்கப்படுகின்றன.

அந்த மனுக்களின் நிலை குறித்து உரிய முறையில் பயனாளிகளுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை சரியாக முறைப்படுத்தினாலே, இதுபோன்ற வேண்டாத நிகழ்வுகளை பெருமளவில் தவிர்க்க முடியும் என்கின்றனர் அரசு நிர்வாக செயல்பாட்டை உற்றுநோக்குபவர்கள்.

தீக்குளிப்பு சம்பவங்களை தடுப்பதில் ஆர்வம் காட்டும் மாவட்ட நிர்வாகம், இதிலும் கவனம் செலுத்தி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். நிச்சயம் அதை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

தீக்குளிக்க முயன்ற இளைஞர்

விழுப்புரம் கே.கே. ரோட்டைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் நேற்று ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறுகையில், ரூ.1 லட்சம் போக்கியத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விட்ட வீட்டின் உரிமையாளர் கணபதி என்பவர், போதிய காலக்கெடு முடிந்தும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. மறு ஒப்பந்தமும் செய்யவில்லை. மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பையும் துண்டித்து, தன் தாயார் மல்லிகாவை தாக்கியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close