[X] Close

பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்! 


padmini-pappimma

பத்மினி

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Sep, 2018 19:55 pm
  • அ+ அ-

திருவாங்கூர் சகோதரிகள் என்று அவர்களைச் சொல்லுவார்கள். கேரளாவில் பிறந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிரபலம் அடைவதே பெரும்பாடு. அப்படிப் பிரபலமாவதற்கு திறமை ரொம்பவே முக்கியம். அந்த வீட்டில் உள்ள சகோதரிகள் மூவருமே, நடனத்திறமையுடன் திகழ்ந்தார்கள். நாட்டிய சகோதரிகள் என்றே அறியப்பட்டார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரியும். லலிதா, பத்மினி, ராகினியைத் தெரியாதவர் உண்டா என்ன?


இதில் பத்மினிக்கு, கடவுள் இன்னொரு வரத்தையும் தந்திருந்தார். நாட்டியத்துடன் நடிப்பும் ஒருசேர அமைந்தது அவருக்கு. 


   எடுத்ததும் இந்திப் படம். கல்பனா எனும் படத்தில் நடித்தார். சின்னச் சின்ன கேரக்டர்கள்தான். பிறகு 1949ம் ஆண்டு, ஏவிஎம்மின் வாழ்க்கை எனும் படத்தில் நடித்தார். அன்று தொடங்கிய கலையுலக வாழ்க்கை, இவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. 


ஒவ்வொரு படமும் இவரைத் தனித்துக் காட்டின. இவரின் திறமையைக் கண்டு எல்லோரும் சிலிர்த்தார்கள். சிவாஜிகணேசனுடன் முதன்முதலாக தூக்குத்தூக்கி என்கிற படத்தில் நடித்தார். உண்மையிலேயே பத்மினியை இந்தப் படம், ஒரு தூக்குத்தூக்கித்தான் ஏற்றிவைத்தது. 


ராஜாராணி, உத்தமபுத்திரன் என்று சிவாஜிக்கு ஏற்ற ஜோடி என்று பேசப்பட்டார். சிவாஜியும் நடிப்புல அசத்துறாரு. பத்மினியும் நடிப்புல பிரமாதம் பண்றாங்க என்று ரசிகர்கள் விமர்சித்தார்கள். 


அப்படியே எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார். ராணி சம்யுக்தா, மன்னாதி மன்னன், மதுரைவீரன், அரசிளங்குமரி என்று பல படங்களில் நடித்தார். ஆனாலும் இல்லற ஜோதி, அமரதீபம், எதிர்பாராதது, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தங்கப்பதுமை, இருதுருவம், இருமலர்கள், தேனும்பாலும் என ஏகப்பட்ட படங்கள் பண்ணினார். ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் முத்திரை பதித்தார். நாட்டியப்பேரொளி பத்மினி, நடிப்பிலும் சுடர்விட்டார்.


ஆனாலும் சிவாஜிகணேசனுடன் இவர் நடித்த தில்லானா மோகனாம்பாள், பத்மினிக்காகவே எடுக்கப்பட்ட படம். அவரைத் தவிர எவரும் நடிக்கவே முடியாத நாட்டியக் கதாபாத்திரம். பிரமாதப்படுத்தியிருப்பார். மோகனாம்பாளாகவே வாழ்ந்திருப்பார். அந்தக் காலகட்டத்தில், கடைகண்ணிக்குச் செல்லும்போது, விழாக்களில் கலந்துகொள்ளும்போது, பத்மினியை எல்லோரும் மோகனாம்பாள் என்றே அழைத்து ரசித்தார்கள். 


250 படங்களில் நடித்த பத்மினி, சிவாஜியுடன் மட்டுமே 57 படங்களில் நடித்தார். அடுத்து... வியட்நாம்வீடு. பிரஸ்டீஜ் பத்மநாபனையும் அவரின் மனைவி சாவித்திரியையும் மறந்துவிடமுடியுமா என்ன? மடிசார் புடவையும் தொணத்தொணப் பேச்சும் டாலடிக்கும் மூக்குத்தியுமாக வாழ்ந்திருப்பார் பத்மினி. 


இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், சித்தி படத்தில் பத்மினியின் நடிப்பைக் கண்டு மிரண்டு போனார்கள். எம்.ஆர்.ராதாவின் மனைவியாக, அவரின் குழந்தைகளுக்கு சித்தியாக பத்மினி அதகளம் பண்ணியிருப்பார். பல இடங்களில் பத்மினியின் நடிப்பைக் கண்டு, நடிப்பால் மிரட்டியெடுக்கும் எம்.ஆர்.ராதாவே பாராட்டி வியந்தார். வியந்து பாராட்டினார். 


இப்படி எத்தனையோ படங்கள். ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில் என்று தொடர்ந்து நடித்து அசத்தினார் நாட்டியப்பேரொளி. எண்பதுகளில்... பூங்காவனத்தம்மாள் எனும் கதாபாத்திரத்தில் ஒரு பாட்டியாகவே வாழ்ந்திருப்பார். பூவேபூச்சூடவா எனும் படத்தை, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தெரிந்து உணர்ந்து பூரித்தது. பாட்டிக்கும் பேத்திக்குமான அன்பைப் பொழியவிட்டிருப்பார். 


கேரளாவில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, அமெரிக்கா சென்று செட்டிலானார். அங்கே நாட்டியப்பள்ளி ஒன்றைத் தொடங்கி, நடத்திவந்தார். கடந்த 2006ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். திருவாங்கூர் சகோதரி, பத்மினி, நாட்டியப்பேரொளி என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் அவரை அன்புடன் எல்லோரும் பப்பி என்றே அழைத்தார்கள். வயதான போதும் பப்பிம்மா என்றே கூப்பிட்டார்கள். 


கலை என்பதே உன்னதம். கலையில் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டவர்களைக் கூட, கலை ஸ்வீகரித்துக் கொள்ளும். ஒரு கோட்டையையே எழுப்பி, கொடியை நாட்டிய பப்பிம்மாவை, கலை உள்ளவரைக்கும் வாழச் செய்துகொண்டே இருக்கும். 


பப்பிம்மா என்கிற பத்மினியின் நினைவு நாளில் (24.9.18) அவரைப் போற்றுவோம்! 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close