[X] Close

ராமநாதபுரம் மாவட்டத்தில்  மணல் கடத்தல் கும்பலுடன் காவல் ஆய்வாளர் பேரம்: ஆடியோ வைரலானதால் விசாரணைக்கு எஸ்.பி. உத்தரவு 


sand-issue

காவல் ஆய்வாளர் முகம்மது நசீர்.

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 13:21 pm
  • அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கடலாடி வட்டம், தத்தங்குடி கண்மாயில் பொதுப்பணித் துறை சார்பில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குடிமராமத்து என்ற பெயரில் கண்மாயின் பல இடங்களில் மணல் திருட்டு நடப்பதாக பரமக்குடி சார்-ஆட்சி யருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் விசாரணை நடத்தினார். இதில் சிக்கல் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், விஏஓ கருணாகரன், கிராம உதவியாளர் ஆகியோர் மீது 17(பி) விதியின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டும், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கண்ணன் மீது குற்ற விசாரணை முறைச்சட்ட பிரிவு 133-ன் கீழ் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சார் ஆட்சியர் உத்தரவின்பேரில் கனிம வள அலுவலர்களும் கண்மாயில் ஆய்வு செய்து, அதிக அளவில் மணல் திருடப்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சார்-ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் தத்தங்குடி கண்மாயில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மணல் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது. அப்பகுதியில் மணல் கடத்திய கும்பல் பயன் படுத்திய குடிசைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

சார்-ஆட்சியர் விசாரணை நடந்து கொண்டிருக்கையில், சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர் முகமது நசீர், மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

அந்த ஆடியோவில் அப்பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் மணல் கடத்தல் ஏஜென்ட் ஆக செயல்பட்டதும், அவரிடம் காவல் ஆய்வாளர் பேரம் பேசுவதும் உள்ளது. அந்த உரையாடலில் ‘காளி, நீ எத்தனை லோடு அடித்தாய், மற்றவர்கள் எத்தனை லோடு அடித்தனர். காலையில் வந்து என்னைப் பார்க்க வேண்டும். 20 (20 ஆயிரம்?) கொடுத்துவிடு என ஆய்வாளர் பேரம் பேசுவதாக உள்ளது.

சார்-ஆட்சியர் நடவடிக்கை யின்போதே மணல் கடத்தல் கும்பலுடன் காவல் ஆய்வாளர் பேரம் பேசுவது பொதுமக்கள் மத்தியில் காவல் துறையினர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பரமக்குடி சார்-ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரனிடம் கேட்டபோது, மணல் கடத்தலை தடுக்காத வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க 2-வது முறையாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருட்டுத்தனமாக மணல் அள்ளும் கும்பலுக்கு உடந்தையாக இருந்து பேரம் பேசும் சிக்கல் காவல் ஆய்வாளரின் ஆடியோ குறித்து, காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது: மணல் கடத்தல் ஏஜென்ட்டுடன் சிக்கல் ஆய்வாளர் முகம்மது நசீர் பேசும் ஆடியோ குறித்து, கீழக்கரை டிஎஸ்பி (பொ) நடராஜன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை தெரிந்தபின் சிக்கல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close