[X] Close

மதுரை அரசு மருத்துவமனையில் ஓயாத லஞ்சம்: பிரசவம் முதல் பிணவறை வரை தொடரும் அவலம்


madurai-government-hospital-in-deep-trouble

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 17:06 pm
  • அ+ அ-

ஓய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவம னையில் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்க முடியாமல் நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது.

சென்னைக்கு அடுத்து நோயாளிகள் வருகை அதிகமாக இருக்கும் மருத்துவமனை என்ற பெருமை மதுரை அரசு மருத்துவமனைக்கு உள்ளது. சமீப காலமாக லஞ்சத்திற்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றதாக மாறி வருகிறது.

மருத்துவமனை டீனாக மருதுபாண்டியன் பொறுப்பேற்ற பின் சீர்குலைந்திருந்த மருத்துவ மனையின் செயல்பாடுகளைச் சீர்படுத்தினார். நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற தற்காலிகப் பணியாளர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ஆனால், தொடர்ந்து நடவடிக்கை இன்மையால் பிரசவம் முதல் பிணவறை வரை மீண்டும் லஞ்சம் பெறுவது தொடர்கிறது.

லஞ்சத்தை ஒழிக்க கடந்த வாரம் மருத்துவமனை வளாகத்தில் 150 இடங்களில் நோட்டீஸ் ஒட்டி, பணம் கேட்போரை பற்றி தகவல் தெரிவிக்க தொலைபேசி, வாட்ஸ் அப் எண்களை வெளியிட்டார். ஆனால், இந்த நடைமுறை தொடங்கி ஒரு வாரமாகியும் இதுவரை ஒருவர் மட்டுமே புகார் செய்துள்ளார். அவரும், யாரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக புகார் தெரிவித்தார். இதனால், மருத்துவமனை நிர்வாகம், லஞ்சம் வாங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது:

பிரசவ வார்டுக்குள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி யாளர்கள் அனுமதிக்கின்றனர். முன்பு டிஜிட்டல் திரையில் யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பது தெரிவிக்கப்படும்.

மைக்கில் சில நேரங்களில் கூறுகிறார்கள். மற்ற நேரங்களில் சொல்வது இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவிக்க தற்காலிகப்பணியாளர்கள் கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். ஆண் குழந்தையாக இருந்தால் ரூ1,500-ம், பெண் குழந்தையாக இருந்தால் ரூ.1000-ம் வரை வாங்குகின்றனர்.

அதுபோல், பிற வார்டுகளுக்கு ட்ரெச்சரில் தள்ளிச்செல்ல ரூ.50 முதல் ரூ.100 வரை கேட்கின்றனர். சில வார்டுகளில் நோயாளிகளை மூளைச் சலவை செய்து தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்புவதும் திரைமறைவில் நடக்கின்றன. லஞ்சம் வாங்குவோர் பற்றி புகார் கொடுத்தால் அவர்களால் எங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்ற பயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘வார்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், கேமரா இல்லாத இடமாகப் பார்த்து நோயாளிகளின் உறவினர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் பெறுகின்றனர். லஞ்சம் வாங்கினால் துறைரீதியான நட வடிக்கை பாயும் என்பதால் நிரந்தரப்பணியாளர்கள் பெரும்பாலும் கைநீட்டுவதில்லை. ஆனால், குறைந்த ஊதியம் பெறும் தற்காலிகப் பணியாளர்கள், தங்களை வேலையை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை என்ற கணக்கிலே துணிந்து லஞ்சம் வாங்குகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள் 25 சதவீதம் வரை பழுதடைந்து காட்சிகள் தெரிவதில்லை. அவற் றைப் பழுதுப்பார்த்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புகார் கொடுக்க தயக்கம்

டீன் மருதுபாண்டியனிடம் கேட்டபோது, ‘‘லஞ்சம் முழுமையாக இல்லை என்று மறுத்துவிட முடியாது. பாதிக்கப்படுவோர் தைரியமாக புகார் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரசவ வார்டில் யாருக்கு, என்ன குழந்தை பிறந்தது என்பது மைக்கில் தெரிவிக்கப்படுகிறது. டிஜிட்டல் திரை வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. வந்ததும், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close