[X] Close

கோவையில் அதிகரிக்கும் கலப்படத் தேயிலைத்தூள் பயன்பாடு: புற்றுநோய் அபாயம் இருப்பதால் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்


worst-tea-powder

கோவையில் உள்ள டீக்கடையில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் (கோப்புப் படம்).

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 13:23 pm
  • அ+ அ-

கோவையில் கலப்படத் தேயிலைத்தூள் பயன்பாடு அதிகரித்து வருவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, வால்பாறை, கேரளா மாநிலத்தில் மூணார், வயநாடு, வண்டிபெரியார், கோட்டயம் ஆகிய பகுதிகளில் அதிக பரப்பளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தரத்துக்கு ஏற்றவாறு தேயிலைத்தூளை பிரித்து, தங்களது நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்கின்றன. தேயிலைத்தூளை, லாபநோக்கோடு சிலர் கலப்படம் செய்து போலி நிறுவனங்களின் பெயர்களில் விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பி.விஜயலலிதாம்பிகை, ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள பேக்கரி, ஹோட்டல், டீக்கடைகள், தேயிலைத்தூள் விற்பனை நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்.

கடந்த 6 மாதங்களாக நடத்திய சோதனையில் ஆயிரம் கிலோவுக்கு மேல் கலப்பட தேயிலைத்தூள் மற்றும் கலப்படம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேயிலைத்தூளை பறிமுதல் செய்துள்ளோம்.

அவற்றை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். ஆய்வறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 6 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

கண்டறிவது எப்படி?

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி, தேயிலைத்தூளை போட்டால், நிறம் பரவாமல் இருந்தால் அது கலப்படமில்லாத தூள். தண்ணீர் செந்நிறமாக மாறினால் அது கலப்படத்தூள்.

இதேபோல் ஒரு கை துடைக்கும் வெள்ளை காகிதத்தில் (டிஸ்யு பேப்பர்) தேயிலைத்தூளை போட்டு, தண்ணீர் ஊற்றினால், கலப்படம் என்றால் தாள் முழுவதும் பரவும். கலப்படமற்றது என்றால் பரவாது.

முதலில் செங்கல்தூளை கலப்படம் செய்தனர். இப்போது 'டாட்டாரிசின் டை' என்ற நிறமேற்றி வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது தேநீரில் நிறமேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

என்னென்ன பாதிப்புகள்?

கலப்படத் தேயிலைத்தூள் கலக்கப்பட்ட தேநீரை அருந்துவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். வயிற்று வலி, வயிற்றுப் புண் (அல்சர்), போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் புற்றுநோயும் ஏற்படலாம்.

எனவே பொதுமக்கள் தேயிலைத்தூள் வாங்கும் போது தேயிலைத்தூளின் பிராண்ட் பெயர், அதில் கலக்கப்பட்ட பொருட்கள், ஊட்டச்சத்து தகவல், சைவ மற்றும் அசைவ குறியீடு, சேர்மான பொருட்கள், தயாரிப்பாளரின் பெயர் மற்றும் முகவரி, மொத்த எடை, தொகுதி எண், தயாரிக்கப்பட்ட தேதி, பயன்படுத்த உகந்த கால அளவு, உணவுப் பாதுகாப்புத்துறை உரிம எண் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் போலியான நிறுவனங்கள் பெயரில் தேயிலைத்தூள் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. உணவுப் பொருள் கலப்படம் உள்ளிட்ட பல்வேறு புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். 24 மணி நேரத்துக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்கெங்கு யாரிடம்?

அன்னூர், எஸ்எஸ் குளம்-8220050466, கிணத்துக்கடவு -97883 26647, மதுக்கரை -9884409152, பெரியநா யக்கன் பாளையம்-9865770834, சுல்தான்பேட்டை- 984325 5265, சூலூர்-8220050465, தொண்டா முத்தூர்-9894164688, மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை-9865770834, பொள்ளாச்சி-9842764101, வால்பாறை, ஆனைமலை-9842764101, கோவை மாநகராட்சி 1முதல் 9, 26, 32, 42, 43 வார்டுகள்-8220050459, 10 முதல் 14, 22 முதல் 25, 77, 81 வார்டுகள்-9840630001, 15 முதல் 21 வார்டுகள்-8220050459, 33 முதல் 39 வார்டுகள்-9842649480, 40, 41, 44, 49, 53, 55, 56, 65, 67, 70 வார்டுகள்-9486654917, 57 முதல் 64 மற்றும் 66 வார்டுகள்-9976559438, 71, 73, 75, 82, 94, 100 வார்டுகள்-9487474512, 76, 78, 79, 80 வார்டுகள்-9952821846, 83 மற்றும் 93 வார்டுகள்-9003433606 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close