[X] Close

கலைமாமணி விருதுகளுக்கு இனி சால்வையும், சான்றிதழும் தான்: நிதியில்லை என ஆளுநர் கிரண்பேடி கைவிரிப்பு - கலை சார் அறிஞர்கள் கடும் விரக்தி


kiranbedi-speech

  • kamadenu
  • Posted: 21 Sep, 2018 12:26 pm
  • அ+ அ-

நிதியில்லாததால் கலைமாமணி, தமிழ் மாமணி விருதுகளுக்கு பண முடிப்பு இல்லாமல் இனி சால்வை யும்,சான்றிதழும் மட்டும் வழங்கப்படும். இதை ஏற்பதாக இருந்தால் விருது வழங்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்ததால் அறிஞர்கள் குமுறியபடி திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக இவ்விருதுகள் தரப்படாததால் பலரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில் இயல், இசை, நடனம், ஓவியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதும், தமிழுக்கு தொண்டாற்றியோருக்கு தமிழ் மாமணி விருதும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை வழங்கி வருகிறது. இதில் கலைமாமணி விருதுக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பரிசு, 2 பவுன் தங்க பதக்கமும் தமிழ் மாமணி விருதுக்குரியோருக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் தங்கப்பதக்கமும் தரப்பட்டு வந்தது.

இதற்கிடையில், கடந்த 2008-09ம் நிதியாண்டில் கலைமாமணி விருதுக்கு 46 பேரும், தமிழ்மாமணி விருதுக்கு 6 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி நடந்த விழாவில் அப்போதைய ஆளுநர் இக்பால் சிங் கலந்து கொண்டு விருதுகளை அளித்தார். அப்போது தங்கப்பதக்கம் தரப்படவில்லை. விருது பெற்றவர்கள் தங்கப் பதக்கம் தராதது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு, 'தங்கப்பதக்கத்தில் பெயர் பொறித்து தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தாமதமாக தரப்பட்ட தொகை

2011ல் அரசிடம் கேட்டதற்கு, 'தங்கம் விலை உயர்ந்து விட்டது. விரைவில் பதக்கம் தருவோம்' என தெரிவித்தனர். அதையடுத்து விருது அறிவித்த காலத்தில் என்ன விலைக்கு தங்கம் விற்றதோ அந்த தொகையை அரசு தருவதாக தெரிவித்து கலைமாமணி விருது பெற்ற 46 பேருக்கு மட்டும் தலா 2 சவரனுக்குரிய தொகையை அரசு தந்தது.

ஆனால் தமிழ்மாமணி விருது பெற்ற நந்திவர்மன், சித்தன், பரிதி வெங்கடேசன், திருமாவளவன், அருணாச் சலம், நாகராசன் ஆகிய 6 பேருக்கு ரொக்கப்பணம் தரப்படாமல் இருந்தது. அதையடுத்து இதுபற்றி இந்து தமிழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு 2016-ல் தரப்பட்டது.

2 ஆண்டுகளாக எதுவும் இல்லை

அதன்பிறகு கடந்த இரு ஆண்டுகளாக புதுச்சேரியில் தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் சரியாக தரப்படவில்லை. இதனால் பலரும் வேதனையில் உள்ளனர். ஏராளமானோர் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

விருதுகளை வழங்க கோரி தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளர்கள் சங்கத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விருது வழங்காததற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என கலை பண்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மன வருத்தம் அடைந்துள்ள தமிழ்மாமணி, கலைமாமணி விருதுக்கு விண்ணப்பித்தோர், முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கடும் நிதி நெருக்கடி

இந்நிலையில், அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆளுநர் கிரண்பேடி உடனே கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசனை அழைத்து,. அவரிடம் விருதுகள் வழங்காதாதற்கான காரணத்தை கேட்டுள்ளார். இயக்குநர் கணேசன் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அடையாள அட்டை வழங்குவது, உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு எழுத்துபூர்வ பதிலளிக்குமாறு இயக்குநருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் இயக்குநர் கணேசன் எழுத்துபூர்வ பதிலை ஆளுநருக்கு அளித்துள்ளார்.

அதில் 8 கேள்விகளுக்கும் பதில் அளித்த அவர், நிதி இல்லாததால் விண்ணப்பித்துள்ள 26 பேருக்கு விருது வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளர்கள் சங்கத் தலைவர் ஏ.மு ராஜன், செயலாளர் ஆனந்த், பொருளாளர் ராமஜெயம் உள்ளிட்ட 5 பேர் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்துள்ளனர்

அப்போது ஆளுநர், அரசிடம் நிதி இல்லாததால் தமிழ்மாமணி, கலைமாமணி விருதினை வழங்கவில்லை., பணமுடிப்பு இல்லாமல், வெறும் சால்வை மற்றும் சான்றிதழ் வாங்கிக்கொள்வதாக இருந்தால் விருது வழங்க தான் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட அவர்கள், இங்குள்ள 5 பேர் மட்டும் முடிவெடுக்க முடியாது அனைவரையும் கலந்தாலோசித்த பின்னர்தான் முடிவெடுக்கப்படும் என தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கின்றனர்.

காத்திருக்கும் 151 பேர்

இதுபற்றி சங்கத்தலைவர் பேராசிரியர் ஏ.மு. ராஜனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப் பட்ட 21 தமிழ்மாமணி விருதுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாத 130 பேருக்கு கலைமாமணி விருதுகள் இன்னும் வழங்கப் படவில்லை என ஆளுநரிடம் புகார் கூறினோம்.

நிதியில்லை எனக்காரணம் காட்டி வெறும் சால்வையும் சான்றிதழும் மட்டும் பெற்றுக் கொள்வதாக இருந்தால் சொல்லுங்கள் ஏற்பாடு செய்கிறேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

ஏழ்மையிறும் தமிழ்பணி மற்றும் கலைப்பணிக்காக பாடுபடும் அறிஞர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை மறுப்பது ஏற்புடையது அல்ல.

அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருதுகளை வழங்குவதில்லை. சேர்த்து வைத்து நடத்துவதால் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி நிதி வழங்குவதும் அதிகமாகிறது'' என்று குறிப்பிட்டார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close