[X] Close

பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களின் வரவால் தொன்மைச் சிறப்பை இழந்த ‘தொன்னை’ புத்துயிர் பெறுமா? - ஜனவரி மாதத்துக்காக காத்திருக்கும் உற்பத்தியாளர்கள்


thonnai-article

  • kamadenu
  • Posted: 21 Sep, 2018 10:59 am
  • அ+ அ-

பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றாலான பொருட்களின் வரவால் தொன்மைச் சிறப்பை இழந்த தொன்னை தயாரிப்பு தொழில் புத்துயிர் பெறும் என்ற எதிர்பார்ப்பில், 2019 ஜனவரி மாதத்துக்காக காத்திருக்கின்றனர் தொன்னை உற்பத்தியாளர்கள்.

கோயில்களில் பிரசாதம் வழங்குவதற்கு பயன்படும் தொன்னை தயாரிப்புத் தொழில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது.

தியாகராஜபுரம் அக்ரஹாரத்தில் பிராமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர்கள் கோயில்களில் பூஜைகள் நடத்திய பின் சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை வாழை இலை சருகில் தயாரிக்கப்பட்ட தொன்னையில் பக்தர்களுக்கு வழங்கி வந்தனர். தொடக்கத்தில் பிராமணர்களே தொன்னையைத் தயாரித்து கோயில்களில் பயன்படுத்தி வந்தனர்.

காலப்போக்கில் கோயில்களில் மட்டுமல்லாமல், பொது நிகழ்வுகள், திருமணம் போன்ற தனியார் நிகழ்வுகளில் விருந்தில் பொங்கல், அக்கார அடிசல் போன்ற இனிப்பு வகைகளைப் பரிமாற தொன்னை பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தொன்னை உற்பத்தி தனித் தொழிலாக மாறியது.

திருமலை திருப்பதியில்...

கும்பகோணம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழை இலைச் சருகால் வாழ்வு பெற்றுவந்தனர். காய்ந்த வாழை இலைகளைக் கொண்டு இங்கு தயாரிக்கப்படும் தொன்னைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்ததால் திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்குவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதில் இருந்தே இதன் சிறப்பை உணர முடியும்.

திருப்பதி கோயிலுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக தொன்னைகள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

சிறந்து விளங்கிய தொழில்...

தியாகராஜபுரம் தொன்னை களுக்கு பிளாஸ்டிக், தெர்மாகோல் கப்புகள், சிறு தட்டுகள் வருவதற்கு முன்பு வரை பெரும் வரவேற்பு இருந்தது. இதனால் தொன்னை தயாரிப்புத் தொழில் சிறந்து விளங்கியது. தியாகராஜபுரத்தில் இருந்து கும்பகோணம், சென்னை, திருப்பதி, பெங்களூரு, கன்னியாகுமரி என பல இடங்களுக்கும் தொன்னைகள் தினமும் அனுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலால் செய்யப்பட்ட கப்புகள், சிறு தட்டுகள் பயன்பாட்டுக்கு வந்தன. கோயிலில் பிரசாதம் வழங்க இவை பயன்படுத்தப்பட்டதால் தொன்னையின் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது, தொன்னை தயாரிப்புத் தொழிலும் நலிவடைந்தது.

தமிழக முதல்வர் அறிவிப்பு...

இந்நிலையில் வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் பிளாஸ்டிக், தெர்மாகோல் கப்புகள், சிறு தட்டுகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். தொன்னை மீண்டும் வரவேற்பைப் பெறும் என தொன்னை உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து தொன்னை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கே.மனோகரன் கூறியபோது, "தொடக்கத்தில் 200 குடும்பங்கள் செய்துவந்த இத்தொழிலை தற்போது 50 குடும்பத்தினர் மட்டுமே செய்துவருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை வெளியூர் சென்று வாழைத் தோப்புகளை குத்தகைக்கு எடுத்து, இலைகளை அறுத்து காயவைத்து பக்குவப்படுத்தி, தொன்னையை செய்துவந்தோம். பிளாஸ்டிக் பொருட்களின் வருகையால் முன்புபோல தொழில் நடைபெறவில்லை, போதிய வருமானமும் இல்லை.

தமிழக முதல்வரின் உத்தரவால் ஜனவரி முதல் தொன்னைக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்" என்றார்.

மீண்டும் வாழ்வு கிடைக்கும்...

தொன்னை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தியாகராஜபுரம் பாலகிருஷ்ணன் கூறியபோது, "தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுக்கும் தொன்னைகள் அனுப்பப்படுகின்றன. பிளாஸ்டிக், தெர்மாகோல் கப்புகள் வந்ததால் மவுசு குறைந்தாலும் தற்போதும் பல கோயில்களில் தொன்னைக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

வரும் ஜனவரி முதல் எல்லா கோயில்களிலும் தொன்னையைப் பயன்படுத்தத் தொடங்கினால் தியாகராஜபுரம் தொன்னைக்கும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் மீண்டும் வாழ்வு கிடைக்கும்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close