[X] Close

வன விலங்குகளின் உயிரைப் பறிக்கும் பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள்: வனச் சூழலை பாதுகாக்க களமிறங்குமா வனத் துறை?


elephants-in-deep-trouble-because-of-wastage

  • kamadenu
  • Posted: 21 Sep, 2018 08:23 am
  • அ+ அ-

வனத்தை ஊடுருவி அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளால் வனச் சூழல் பாழாவதுடன், விலங்குகளும் பரிதாபமாக உயிரிழக்கின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அடர்ந்த வனப் பகுதியில் பிரிந்து செல்லும் இரு மலைச் சாலைகள் வழியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், உதகை மற்றும் கோத்தகிரி போன்ற மலைவாச ஸ்தலங்களுக்குச் சென்று திரும்புகின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த வனச் சாலையில் சுற்றுலாப் பயணிகளில் சிலர் காட்டுப் பகுதியில் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கைச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

பயணத்தின்போது மீதமான உணவுப் பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், காலியான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வனப் பகுதிகளில் வீசியெறிகின்றனர்.

இவற்றை இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள், மான்கள், காட்டெருமைகள், யானைகள் போன்ற விலங்கினங்கள், சிப்ஸ் போன்ற திண்பண்டங்களின் உப்புச் சுவைக்காக, அவற்றை பிளாஸ்டிக் கவருடன் சாப்பிட்டு விடுகின்றன. இவை செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்குவதால், கடும் வலி ஏற்பட்டு துடிதுடித்து இறக்கின்றன.

வேதனையில் யானைகள்

அண்மைக்காலமாக இறந்து கிடக்கும் யானை, மான் உள்ளிட்ட விலங்குகளின் உடற்கூறு ஆய்வின்போது, அவற்றின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சிலர் கும்பலாக சாலையோரம் உள்ள, தடை செய்யப்பட்ட காட்டுக்குள் சென்று மது அருந்துவதுடன், காலியான கண்ணாடி பாட்டில்களை வனத்துக்குள் வீசிச் செல்கின்றனர். இந்தக் கண்ணாடி மது பாட்டில்களை அறியாமல் மிதித்துவிடும் யானைகள் கடும் வேதனைக்குள்ளாகின்றன. தரையில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைகளின் கால் பாதத்தில் கண்ணாடி துண்டுகள் புகுந்து, நடக்க இயலாமல் கீழே விழுந்து, பல நாட்கள் வலியாலும், பசியாலும், தாகத்தாலும் தவித்து அங்கேயே உயிரிழந்து விடுகின்றன.

இவ்வாறு மனிதர்களின் அலட்சியத்தாலும், அறியாமையாலும் விலங்குகள் மரணிப்பது தொடர் கதையாகி வருகிறது.

காடுகளுக்குள் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்குள் புதைந்து, மழைநீரை பூமிக்குள் செல்ல அனுமதிக்காமல், வனங்களின் பசுமையையே சிதைத்துவிடுகின்றன.

வனத்தின் ஊடே செல்லும் உதகை சாலை, கோத்தகிரி சாலையில் வனத் துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. இவற்றைக் கடந்து செல்லும் சுற்றுலா வாகனங்களில் சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவும், வனம் சார்ந்த பகுதிகளில் மது அருந்துவோரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வனத் துறையினருக்கு சட்டப்படி அதிகாரம் இருந்தும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களைத் திரட்டி வனச் சாலையோரம் உள்ள பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அவ்வப்போது அகற்றினாலும், உரிய பலனளிப்பதில்லை. எனவே, இந்த விவகாரத்தில் வனத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, பாழாகி வரும் வனச்சூழலை காக்க இயலும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குப்பை சேகரிப்பு மையம்

இது தொடர்பாக `நம்ம மேட்டுப்பாளையம்` அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஹ்மான் கூறும்போது, `வனத்தையும், அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில், வனத் துறை சோதனைச் சாவடிகளில் மக்காத பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத, மக்கும் வகையிலான பைகளை வழங்கலாம். ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் குப்பை சேகரிப்பு மையம் அமைத்து, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்தை விளக்கி, அவற்றை வனப் பகுதியில் வீசுவதை தவிர்த்து, குப்பை சேகரிப்பு மையத்தில் வழங்குமாறு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதன் மூலம் வனத்தில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகள் பெருமளவு குறையும்.

தூய்மை இந்தியா திட்டம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டுமல்ல, விலங்குகள் வாழும் வனங்களுக்கும் சேர்த்தேதான் என்பதை உணர்ந்து, முக்கிய பிரமுகர்களும் வனம் சார்ந்த பகுதிகளில் குப்பையை அகற்றி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்` என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close