[X] Close

தனியார் வெங்காய மண்டியில் 2 மாதங்களாக கூலி முரண்பாடு: ஊதியம் பெறாமல் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்


fight-at-onion-market

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 20 Sep, 2018 09:16 am
  • அ+ அ-

தனியார் வெங்காய மண்டியில் கூலி நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக ஊதியம் பெறாமல் பணியாற்றி வருகின்றனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்ட வெங்காய மண்டியின் பெரும்பாலான கடைகள் கடந்த ஜூன் 3-ம் தேதி முதல் அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே தனியாரால் அமைக்கப்பட்டுள்ள மண்டிக்கு மாற்றப்பட்டுள்ளன.

காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் பணிபுரிந்தவர்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கப் படாததால், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பழைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டது.

அதன்பேரில், 25.7.2018-ம் தேதி முதல் சுமை தூக்கும் பணியாளர்கள் பணியில் ஈடுபடத் தொடங்கினர். எனினும், அவர்களுக்கான கூலியை நிர்ணயம் செய்வதில் இழுபறி நீடித்தது. 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டைக்கு ரூ.7.20 வழங்க வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் ரூ.6 மட்டுமே வழங்க முடியும் என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால், கடந்த 2 மாதங்களாக தங்களுக்கான ஊதியத்தைப் பெறாமல் சுமை தூக்கும் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி வெங்காய மண்டி பாரம் சுமக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் எஸ்.ராம லிங்கம் கூறும்போது, ‘‘காந்தி மார்க்கெட்டில் பணியாற்றியபோது ஒரு மூட்டைக்கு ரூ.7.20 கொடுத்தனர். அதன்படியே புதிய மண்டியிலும் வழங்க வேண்டும். ஆனால், கடை உரிமையாளர்கள், தொழிற்சங்க சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படாமல், தமிழ்நாடு சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தை வைத்து போலியாக ரூ.6 என கூலி ஒப்பந்தம் செய்து, நீதிமன்றத்துக்கு தவறான தகவலை அளித்து, ஒரு உத்தரவை பெற்றுள்ளனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, தடையாணை பெற்றுள்ளோம். எனவே, தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை பழைய ஒப்பந்தப்படி ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், தொடர் போராட் டம் நடத்தப்படும்'’ என்றார்.

இதுதொடர்பாக, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொழிற்சங்கச் சட்டம் 1926-ன்படி பதிவு செய்யப்பட்ட சங்கம் மட்டுமே தொழிலாளர்கள் பிரச்சினையில், தொழில் தாவா எழுப்பி ஒப்பந்தம் செய்ய இயலும். எனவே, கடை உரிமையாளர்கள் பெற்ற தீர்ப்புக்கு கடந்த மாதம் 28-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. கடை உரிமையாளர்கள் இனியாவது தங்களது போக்கை மாற்றிக் கொண்டு, பழைய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வலிமையான போராட்டம் நடத்தப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து அழுகும் பொருள் கமிஷன் மண்டி வியாபாரிகள் நலச் சங்க செயலாளர் ஏ.தங்கராஜூவிடம் கேட்டபோது, 'காந்தி மார்க்கெட்டில் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் இந்த மண்டிக்குச் செல்லாது. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் காரணமாகவே, காந்தி மார்க்கெட்டில் பணியாற்றியவர்களுக்கு இங்கு பணி வழங்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு முன்பே, இங்கு ஒரு தொழிலாளர் சங்கம் இருந்தது. அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே எங்களால் ஊதியம் அளிக்க முடியும்.

மேலும், காந்தி மார்க்கெட்டில் பணியாற்றியபோது, மூட்டை தைப்பதற்கான சணல் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பொறுப்பு. எனவே, அதற்கும் சேர்த்து ஒரு மூட்டைக்கு ரூ.7.20 கொடுத்தோம். இங்கு சணலை நாங்களே கொடுத்துவிடுவதால், அதற்கான செலவைத் தவிர்த்து கூலியாக ரூ.6 கொடுப்பதாக கூறுகிறோம். அவர்கள்தான் பெற மறுக்கின்றனர். இதனால், ஊதிய நிலுவைத் தொகை தற்போது ரூ.25 லட்சத்தை தாண்டிவிட்டது. உயர் நீதிமன்றத்தில் இப்பிரச்சினை குறித்த முழு விவரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து குறிப்பிடாமல் தடையாணை பெற்றுள்ளனர். இதை எதிர்த்து நாங்களும் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது' என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close