[X] Close

அறுசுவை அரசு அண்ணா தந்த ஏழாம் சுவை!  - அறுசுவை அரசு நடராஜன் காலமானார்


arusuvai-rip

அறுசுவை அரசு நடராஜன்

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Sep, 2018 22:02 pm
  • அ+ அ-

அறுசுவை என்றால் ஆறு சுவைகள் என்று அர்த்தம். ஆனால் இதற்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கிறார் அவர். சாம்பார் ஒரு சுவை, ரசம் ஒரு சுவை. கூட்டு ஒரு சுவை, பொரியல் ஒரு சுவை... என்பது அல்ல. ஒரு சாம்பாருக்குள்ளேயே ஆறுசுவைகளும் இருக்கவேண்டும். அதுவே அறுசுவை என்றார். அவர்... அறுசுவை அரசு  நடராஜன். 


மிகச்சிறந்த சமையல் கலைஞர். இந்தியாவில் பிரபலங்கள் யார் யார் என்று பட்டியல் போடச் சொன்னால், நாம் ஒவ்வொருவரும் ஒரு பட்டியல் போடுவோம். அதில் இவர் ஒரு லிஸ்ட், அவர் ஒரு லிஸ்ட் என்றெல்லாம் இருக்கும். அத்தனை பேர் வீட்டு விசேஷங்களுக்கும் சமைத்த பெருமைக்குரிய சமையல் கலையில் அப்படியொரு பாண்டித்யம் படைத்தவர் அறுசுவை நடராஜன்.


இவரின் சமையலைச் சாப்பிடாதவர்கள் மிகக்குறைவு. பந்தியில் சாப்பிட்டவர்கள், சாப்பிட்டு கையலம்பிய கையுடன் முதலில் தேடியோடிச் சென்று, சாப்பாடு பிரமாதம் சாப்பாடு பிரமாதம் என்று வாயாரப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். 


‘நாலு வாய் சாப்பிடலாம்னுதான் நெனைச்சேன். ஆனால், மூக்கு முட்ட சாப்பிட வைச்சிட்டீங்க சுவாமி’ என்று சொல்லுவார்கள். இன்னும் சிலர், அறுசுவை அண்ணா வைச்சதுல சாம்பார் பிரமாதம் என்பார் ஒருவர். பிரமாதம்தான் ஆனா ரசம் அமர்க்களம் என்பார் இன்னொருவர். இப்படி பதார்த்தங்களின் சுவை குறித்து பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கும். இதிலொரு துயரம்... சிறுவயதில் அறுசுவை அரசு நடராஜன் குடும்பம், மிகவும் ஏழ்மையாக இருந்தது. காலையில் சாப்பிட்டால் மதியம் உண்டா தெரியாது. அரைவயிறு கால்வயிறுக்கு என உணவு. 


கும்பகோணம் பக்கம் நன்னிலம். இந்த ஊருக்கு அருகில் உள்ள விக்கிரபாண்டியம் எனும் குக்கிராமம்தான் இவரின் சொந்த ஊர். தாத்தா, அப்பா என எல்லோரும் சமையலில் ஸ்பெஷலிஸ்ட். பிழைப்புக்காக, சென்னைக்கு வந்தவர், சென்னையில் உள்ள கீதா கபேயில் வேலைக்குச் சேர்ந்தார்.


அப்புறம்... காஞ்சி மடத்துக்கு வந்தார். காஞ்சி மகாபெரியவாளின் அனுக்கிரஹத்தால், அன்பால், அங்கே மடத்தில் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டார். வருவோருக்கெல்லாம் அன்னதானம் நடந்துகொண்டிருந்தது மடத்தில். அந்தப் புண்ணியமோ என்னவோ..., மகானின் அண்மையில் இருக்கும் பாக்கியமோ என்னவோ... காஞ்சி மகானின் கருணைப் பார்வையால் கிடைத்த ஆசீர்வாதம் என எல்லாம் சேர்ந்து, சமையல் கலையில் மெல்ல மெல்ல முன்னேறினார். 


விவி.கிரி, ஜி.கே.மூப்பனார், அம்பானி, ரஜினிகாந்த், சுப்ரமண்ய சுவாமி என இவர்கள் வீட்டின் கல்யாணமோ காதுகுத்தோ... அறுசுவை அரசு அண்ணாவின் தடபுடல் சமையல்தான். இவரின் சுவையால் ஈர்க்கப்பட்டு, அறுசுவை அரசு எனும் பட்டம் கொடுத்த விவி.கிரி அவரின் அலுவலகத்தின் தலைமை சமையல் கலை வல்லுநர் பணியிலும் அமர்த்திக்கொண்டார்.


சினிமா, அரசியல், சங்கீதம், விளையாட்டு, வணிகம் என அனைத்துத் துறை பிரபலங்கள் வீடு, வீட்டில் யாருக்கேனும் திருமணம் என்றால், மண்டபத்தை புக் செய்வதற்கு முன்பாக, முதலில் அறுசுவை அண்ணாவைதான் புக் செய்து வைத்துக்கொள்வார்கள்.


‘நம்ம வீட்ல கல்யாணம்னு பத்திரிகை கொடுத்தோம். அவங்க வந்தாங்களா. அதனால நாமளும் போகத்தேவையில்ல’ எனும் மனநிலையில் இருப்பவர்கள் கூட, அறுசுவை அண்ணாதான் சமையலாம். அதுக்காகவாவது ஒரு எட்டு போயிட்டு வந்துருவோம் என்று நாக்கு சப்புக்கொட்டிக்கொண்டே போனவர்களின் கதை நீளம். 


‘ஒருத்தரோட மனசுல இடம்பிடிக்கறது கஷ்டம்னு சொல்லுவாங்க. உண்மைலயே அது ரொம்ப ஈஸி. எந்த வழில போனா, மனசுல இடம்பிடிக்கலாம்னு ஒண்ணு இருக்கு. அது வயிறு வழி. சாப்ப்பாட்டுல கவனமா இருக்கணும். ருசில கவனமா இருக்கணும். நாலுவாய் கூட சாப்பிடணும்ங்கற நெனைப்போட சமைக்கணும்.அப்படி சமைச்சு, சமைச்சதை சாப்பிடக் கொடுக்கும் போது, அவங்களோட வயிறு வழியா போய், மனசுல இடம்பிடிச்சிடலாம்’ என்று வெற்றிலை சீவல் போட்டுக்கொண்டே அறுசுவை அண்ணா விளக்குவது, அது இன்னும் ருசி. கூடுதல் சுவை.


அந்த அறுசுவை அரசு அண்ணா இப்போது இல்லை. வயது முதிர்ச்சியாலும் உடல் உபாதையாலும் சிகிச்சை மேற்கொண்டு வந்த அறுசுவை நடராஜன் அண்ணா, இன்று புண்ணியம் மிகுந்த புரட்டாசியின் தொடக்க நாளில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில்... மாலை வேளையில் காலமானார். 


அறுசுவை அரசு அண்ணாவின் சமையல் ருசி, இன்னும் நாக்கில் தொக்கிக்கொண்டு நிற்கிறது. நாசியை ரசத்தின் மணம் இன்னும் நிமிண்டிக்கொண்டே இருக்கிறது. யாருக்கும் தெரியாமல், விவரமும் சொல்லாமல், அறுசுவை அரசு அண்ணா, இன்னொரு சுவையையும் ஏழாம் சுவையாகக் கொடுத்துச் சென்றுவிட்டார். 


அது... துயரச்சுவை. சோகச் சுவை. பிரிவுச் சுவை. 


வயிறார உணவூட்டிய, மணக்க மணக்க, ருசிக்க ருசிக்க, ரசிக்க ரசிக்க, சுவைக்கச் சுவைக்க உணவு வழங்கிய அன்னபூரணி அறுசுவை அரசு நடராஜன்  அண்ணாவை வாழ்த்தியதும் பாராட்டியதும் என எல்லாம் சேர்ந்து புண்ணியங்களாக அவருடன் பயணிக்கும். அந்த நல்லாத்மா அமைதிபெறட்டும்! 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close