[X] Close

இசையரசி எம்.எஸ். வாழ்க!


ms-isaiyarasi

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Sep, 2018 14:43 pm
  • அ+ அ-

வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள் என்றொரு அற்புதமான வாசகம் உண்டு. 1916ம் ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி, வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அதற்கு முன்னதாக, வானில் இருந்த இசைதேவதையை அனுப்பிவைத்தார்கள். அந்த இசைதேவதைக்கு பூமாரி பொழிந்தார்கள். அந்த இசை தேவதையின் பெயர்... மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. சுருக்கமாகச் சொல்லவேண்டுமா? எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி.

என்னதான் மனைவி பிரமாதமாகச் சமைத்தாலும் அம்மாவின் சமையலுக்கு ஈடில்லை என்று சொல்லிக்கொண்டிருப்போம்தானே. அப்படித்தான் கடவுளர்களும்! தங்களைப் பாட மொத்தக் கடவுளர்களும் சேர்ந்து, ஒருமித்த முடிவுடன் அனுப்பிவைத்த இசைக்கடவுள்தான் எம்.எஸ்.

இசையால் இறைவனை வசமாக்கலாம் என்பது மூத்தோர் மொழி. இறைவனால் ஏற்கெனவே ஈர்க்கப்பட்டார் எம்.எஸ்., பிறகு தன் இசையால் கடவுள் எனும் பிரபஞ்ச சக்தியை தன் வசமாக்கிக்கொண்டார்.

இசைக்குடும்பப் பாரம்பர்யத்தில் உதித்த குயில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி. அம்மாவே குருவானார். சாதத்துடன் சேர்த்து சங்கீதத்தையும் குழைத்துச் சேர்த்துக் கொடுத்துக் கொடுத்து வளர்த்தார்.

எட்டு வயது அப்போது. மரகதவடிவம் என்றொரு செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த பாடலைப் பாட, சொக்கிப்போனார்கள் கேட்டவர்கள். ‘என்ன இது... இந்தக் குழந்தை நாவுல சரஸ்வதி உக்கார்ந்துக்கிட்டிருக்காளே...’ என வியந்தார்கள். தாய் எட்டடி, குட்டி பதினாறடி என்பார்கள். அந்த எட்டு வயதிலேயே எட்டாத உயரங்களையெல்லாம் தொட்டு, 64 அடி பாய்ந்திருந்தார் எம்.எஸ். வீட்டுக்கு வந்தவர்களெல்லாம் அவரின் பாடலைக் கேட்டார்கள். பாட்டைக் கேட்பதற்காகவே வீட்டுக்கு வந்தார்கள். ஒவ்வொருமுறையும் கேட்டுக்கேட்டு ஆனந்தித்தார்கள். பாடப்பாட, இறை சக்தி குளிர்ந்தது. எங்கெல்லாம் பாடுகிறாரோ அங்கே வந்து அந்த சக்தி உட்கார்ந்துகொண்டது.

கல்வியை ஏட்டுச்சுரைக்காய் என்பார்கள். சுப்புலக்ஷ்மி ஐந்தாவது வரைதான் படித்தார். பிற்காலத்தில், இசையையே கட்டியாளப் போகிறார்கள் என்பதை எவரும் அறியவில்லை.

ஏறாத மேடையில்லை. பாடாத சமஸ்தானங்களோ அரண்மனைகளோ இல்லை. எங்கே பாடினாலும் தனிமுத்திரை பதித்தார். தனியிடம் பிடித்தார். இசையால் இறைவனையே வசமாக்கிய எம்.எஸ். எல்லோரையும் தன் இசைக்கு வசப்படுத்தினார்.

கச்சேரி, மேடை, பாட்டு என்றிருந்தவரை காலம் சினிமாவுக்குள்ளும் அழைத்து வரித்துக்கொண்டது. ஆனாலும் இசைமேடையை அன்னையின் தொட்டிலெனக் கருதி, அதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் நாயகியாக நடித்தார். இவரின் நடிப்பும் நடையும் பாவங்களும் முக்கியமாக அந்தக் குழைவுக் குரலிலும் கட்டுண்டு போன தயாரிப்பாளர் கல்கி சதாவசிவம், இசையை விரும்பியதுடன் அவரையே விரும்பத் தொடங்கினார். காதலாகி, கல்யாணமுமாகி, இசைபட வாழ்ந்தனர்.

பக்தமீராவின் காற்றினிலே வரும் கீதம் பாடல், கேட்போரின் நரம்புகளுக்குள் புகுந்து புறப்பட்டு, இதயத்தைச் சுத்திகரித்தது. எனது உள்ளமே... என்ற பாட்டால், மொத்த உள்ளத்தையும் ஸ்வீகரித்துக்கொண்டார்.

தமிழே தெரியாத மெளண்ட்பேட்டன் பிரபுவும் அவரின் மனைவியும் அவரின் பாடலையும் குரலையும் கேட்டு, கிறுகிறுத்துப் போனார்கள். இசைக்குயிலின் பாடலில், கவிக்குயில் சரோஜினி நாயுடு மிரண்டே போனார். ஜவஹர்லால் நேரு, இசையரசியின் பாடலைக் கேட்டுவிட்டு, இரண்டு நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு மெல்ல எழுந்தார். ’இசையின் ராணிக்கு முன்னே, நானொரு சாதாரண பிரதமர்’ என்று போற்றிப் புகழ்ந்தார்.

இப்படித்தான் இசையரசியின் ராஜாங்கம், ராஜபாட்டை நடத்தியது. பாராட்டுகள் தெருமுழுக்க நிறைந்திருந்தன. வாழ்த்துகள் காற்றில் கலந்து, வீட்டையே நிறைத்தன. விருதுகள் காலிங்பெல் அடித்துக்கொண்டே இருந்தன. ஒரு பாட்டு, ஒரேயொரு பாட்டு, எம்.எஸ்.ஸின் குரலில் ஒரேயொரு பாட்டு கேட்டால் போதும், இந்த ஜென்ம சாபல்யம் நீங்கிவிடும் என்று கதறினார்கள் ரசிகர்கள்.

வெங்கடேச சுப்ரபாதம் இன்றைக்கும் திருமலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நம் வீடுகளிலும் கூட ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், காற்று முழுவதும் பரவியிருக்கிற இந்த உலகில், குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்கிற தேவதையின் குரல், கேட்பவரின் காதுக்குள் புகுந்து, கவலைகளையும் குறைகளையும் மொத்தமாக வழித்தெடுத்து பரவசப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

கண்களில் கருணை வழிய, நெற்றிக் குங்குமம் பிரகாசிக்க, டாலடிக்கும் மூக்குத்தியும் லேசாக்கும் புன்னகையுமாய் அம்பாள் மாதிரி காட்சி தருகிறார் என்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியை தெய்வாம்சமாகவே, தெய்வ ரூபமாகவே பார்த்தார்கள்.

சாகாவரம் பெற்ற இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பிறந்தநாள் இன்று (16.9.18). 102வது பிறந்தநாள். எம்.எஸ். எனும் பாட்டுராணியைப் போற்றுவோம். அவரின் பாடல்களைக் கண்மூடிக் கேட்டு, ஆனந்திப்போம்.

இசைக்கு முடிவு என்பதே இல்லை. இசையரசிக்கும்தான்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close