[X] Close

வைகைப்புயலுக்கு மதுரக்காரனின் மனம் திறந்த மடல்!


letter-to-vadivelu-from-madurai-fan

  • kamadenu
  • Posted: 15 Sep, 2018 13:26 pm
  • அ+ அ-

அண்ணே... வடிவேலு அண்ணே... வணக்கம்ணே.

நானும் மதுரைக்காரன்தாம்ணே. உன் ரசிகன்னு சொல்றதவிட உன் வெறியன்னு சொல்றதுல பெருமைப்படுறவன்ணே. அது என்னமோ தெரியலன்ணே மதுரைக்காரனான எனக்கு மட்டுமில்லண்ணே... இந்தத் தமிழகத்துக்கே உம்மேல ஒரு தனிப்பாசம்ணே. ‘என் ராசாவின் மனசுல’ படத்துல வடிவேலுங்கிற உன் சொந்தப் பேரோடவே ஒரு ஒல்லிப்பிச்சானா  உள்ள வந்த நீயி... உன்னோட காமெடி நடிப்பால  எங்க கவலைகள சல்லிசல்லியா நொறுக்கி மனசுக்குள்ள கில்லியா வந்து சட்டுன்னு உக்காந்துட்டண்ணே.  அடிவாங்கியே அடிமனசுல எடம் புடிச்ச ‘ஸ்நேக் பாபு’ண்ணே நீ.

 ‘போடாப் போடா புண்ணாக்கு... போடாத தப்புக் கணக்கு’னு ஆரம்பிச்சு நீ நடிச்ச காட்சிகள் எல்லாம் பார்த்தவன் வயித்தைதான் புண் ஆக்குச்சே தவிர யாரோட மனசையும் புண் ஆக்கல. அதுவுமில்லாம, அடுத்தவனைத் திட்டாம, அடிக்காம உன்னையே வருத்திக்கிட்டு எல்லாரையும் ரசிச்சு, சிரிக்க வெச்ச பாரு... அந்த யதார்த்தமான காமெடிதான் சின்னக் குழந்தைல இருந்து சீரியல் பார்க்குற பெருசுங்க வரை உன்னை ரசிக்க வெச்சிது.

சும்மா சொல்லக்கூடாதுண்ணே... உங்க வசனங்கள், ஒவ்வொண்ணும் பொன்னெழுத்துல பொறிக்க வேண்டிய தீர்க்க தரிசன வார்த்தைகள் அண்ணே... சமத்துவ சித்தாந்தத்தை ‘உனக்கு வந்தா ரத்தம்... எனக்கு வந்தா தக்காளி சட்னியா...’ங்கிறதை விட இதுவரைக்கும் உலகத்துல யாரும் இவ்வளவு எளிமையா சொன்னது இல்லண்ணே. எவ்வளவு பெரிய போராட்டக் களத்துலயும் அரசியல்வாதிங்க சட்டை கசங்காம பிரியாணியை சாப்பிட்டுக் கிளம்புற காலத்துல, ‘சண்டையில கிழியாத சட்டை எங்கெருக்கு...’ன்னு உண்மையான போராட்டக் களத்தை உலகத்துக்கு புரிய வெச்ச போராளிண்ணே நீங்க. போர் போர்ன்னு பொய்யா கூவறவங்களோட உண்மையான முகத்திரையை, ‘பில்டிங் ஸ்ட்ராங்க்... பேஸ்மென்ட்டு வீக்கு’னு அன்னைக்கே போட்டுக் கிழிச்ச பெருமை உங்களையே சாரும்ண்ணே... இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்ண்ணே. இன்னும் சொல்லப்போனா வயித்து வலின்னு ஆஸ்பத்திரிக்குப் போனாலும், அங்க டிவில உன் காமெடியப் பாத்து, ஒரு கூட்டம் வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருக்கும்.

 சினிமாவுல நல்ல டான்ஸ் ஆடவும் ஸ்ருதி சுத்தமா பாடவும் தெரிஞ்ச காமெடியன் நீதாண்ணே. ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேக்கும்’ பாட்டுக்கு, நீ ஆட்டத்துல பட்டையக் கிளப்புனப்ப, உனக்குள்ள ஹீரோ ஆசை இருக்குன்னு எனக்குத் தெரியாதுண்ணே. நீ ஹீரோ ஆயிட்டன்னு செய்தி வந்தப்ப, இந்தக் கருவாயனுக்கு எதுக்குத் தேவையில்லாத வேலைன்னு பலரும் கிசுகிசுத்தாங்க. ஆனா, இம்சை அரசனா உன்னைப் பாத்து ஆடிப்போயிட்டேன்.

அந்தப் படத்துல ஸ்டைலு, மேனரிசம், டயலாக் டெலிவரின்னு உண்மையான இம்சை அரசனாவே சும்மா ‘கெம்பீரமா’ பிரிச்சி மேய்ஞ்சிட்டண்ணே நீ. ஆனா, அந்தச் சந்தோஷம் எல்லாம் சில காலம்தாண்ணே. தங்கக் கட்டி போல பளபளன்னு தொடர்ந்து ஹீரோவா இனி பட்டைய கிளப்பப் போறன்னு பாத்தோம். ஆனா, அதுக்கப்பறம் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் கதையா, ஹீரோவும் இல்லாம காமெடியனாவும் இல்லாம வெட்டியா போன.

எல்லாத்த விட அல்டிமேட்டு, உனக்கு நீயே வெச்சுக்கிட்ட ஆப்புதான் அண்ணே உன்னோட அரசியல் என்ட்ரி.. ஜீப்புல மைக்க புடிச்சி, எப்போ நீ அரசியல் பேச ஆரம்பிச்சியோ, அப்பவே நான் அப்படியே ஷாக்காயிட்டேன்ணே.இருந்திருந்தும் ஆளும் கட்சியா இருக்கப்ப மட்டுமே அஞ்சா நெஞ்சனா இருக்கிற எங்க அழகிரி அண்ணனோட பேச்சைக் கேட்டு அரசியல்ல குதிச்ச பாரு! வந்ததுதான் வந்தே அதையாச்சும் ஒழுங்கா செஞ்சியா? இல்லியேண்ணே... இல்லியேண்ணே... நீ அரசியல்ல குதிச்சதே கேப்டனைத் திட்டுறதுக்கு மட்டும்தான்னு அப்பத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தப் பேச்சுல ஒண்ணு மட்டும் தெரிஞ்சுது ‘ஸ்கெட்ச் நீ விஜயகாந்துக்கு போடலண்ணே... உனக்கு நீயே போட்டுக்கிட்டனு'.

அப்பவே நம்மாளு சிக்கி சின்னாபின்னாமாகப் போறான்னு தெரியும். ஆனா, இப்படி அதள பாதாளத்துல அடிவாங்கி, துண்டக் காணோம் துணியக் காணோம்னு நீ நம்மூருக்கு ஓடி வருவன்னு நான் கனவுலகூட நெனச்சுப் பார்க்கலண்ணே.

உன்னைப் பார்த்தா பரிதாபம்தான் வருது. மண்டையில் கொண்ட இருக்கிறத இன்னுமா மறப்ப சாமி? இப்ப படமில்லாம ஈ ஓட்டுனாலும், வாய்ப்புக் குடுக்க வர்ற ஒண்ணு ரெண்டு பேருக்கும் நீ குடுக்கற டார்ச்சர் கொஞ்சம் நஞ்சமில்லைன்னு சொல்றத கேக்கும்போது வயிறெல்லாம் பத்தி எரியுதுண்ணே. சினிமாவுல உனக்கு ஹிட்டுக் கொடுத்த டைரக்டர்ஸ் சுந்தர்.சி, சுராஜ் உள்ளிட்டவங்க எல்லாம் இப்போ உன் பேரைக் கேட்டாலே அலர்றாய்ங்களாமே. ஏன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீயா? இம்சை அரசன் 2-வுல இந்த காஸ்ட்டியூம் டிசைனர் வேண்டாம், பாட்டு வேண்டாம்னு ஷங்கரையே அலறவிட்டு இருக்கீயே அண்ணே. அதுவும் அவரு இதுவரைக்கும் தயாரிப்பாளர் சங்கத்துல யார் மேலயும் புகார் கொடுத்ததில்லையாம். அவரையும் புகார் கொடுக்க வெச்ச பெருமை உனக்குத்தானா வரணும்?

காமெடியில வேலூரு ஜெயிலுக்கு வெள்ளையடிச்சு, மதுரை ஜெயில்ல மல்யுத்தம் பண்ணுவன்னு பாத்தா, வீட்ல உக்காந்து வாய்ச் சவடால் பேசிட்டு இருக்கியேண்ணே. தயாரிப்பாளர்கிட்ட பிரச்சினை, டைரக்டருகிட்ட பிரச்சினைன்னு உண்மையிலேயே இப்ப உனக்கு நாரவாய்தாண்ணே. ‘குடிக்கவே தண்ணி இல்லையாம். இவருக்கு கொப்பளிக்க பன்னீர் கேக்குதாம்’ன்னு சினிமா ஆளுங்க உன்னைக் கழுவிக் கழுவி ஊத்தும்போது, ஊருப் பேரை அசிங்கப்படுத்தறானேன்னு உம்மேல கோபம் கோபமா வருதுண்ணே. சும்மா கெம்பீரமா இருந்த உன் புலிகேசி மீசை இப்படி பொசுக்குன்னு தொங்கிருச்சேண்ணே... ரெம்ப வருத்தமா இருக்குண்ணே!

கடைசியா ஒண்ணு சொல்றேண்ணே, இப்பவும் கெட்டுப் போகலை. ஒன்னோட இடம் காலியாத்தான் இருக்கு. அதை உன்னைத் தவிர யாராலும் நிரப்பவே முடியாதுண்ணே. காமெடி சேனல்கள் தொடங்கி மீம் கிரியேட்டர்ஸ் வரைக்கும் இன்னும் உன்னை வெச்சிதாண்ணே பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க. போதும்ண்ணே வாய்ச் சவடாலு... உன் ‘சூனாபானா’ வீராப்ப விட்டுட்டு பழைய கணக்க ஆரம்பிண்ணே. போதும் போதும்ற அளவுக்கு சம்பாதிச்சிட்ட. வெட்டியா வீம்பு புடிக்காம வேலையப் பாருண்ணே.

மீண்டும் அந்த கருப்பு நாகேஷா களம் இறங்குண்ணே... புதுப் படத்துல உன்னயப் பாத்து கைதட்டணும்னு எனக்கு மட்டுமில்லை... சிரிக்கத் தெரிஞ்ச அத்தனை பேரும் ஆவலா காத்திட்டுருக்காங்கண்ணே!

-மதுரக்காரன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close