[X] Close

மூன்று முறை ஆற்றில் குதித்து... மூன்றுபேரைக் காப்பாற்றி! ஆறாம் வகுப்பு சிறுவனுக்கு குவியுது பாராட்டு!


brammaputhra-6th-std-boy

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Sep, 2018 10:52 am
  • அ+ அ-

மூன்று முறை ஆற்றில் குதித்து, மூன்று பேரைக் காப்பாற்றிய ஆறாம் வகுப்புச் சிறுவனின் தைரியத்தைக் கண்டு, சிறுவனுக்கு  பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கவுகாத்தியில் இருந்து கவுகாத்தி நகருக்கு, ஆற்றைக் கடந்து படகில்தான் செல்வார்கள் ஊர்க்காரர்கள். அந்த ஆறு, சாதாரண ஆறு அல்ல. இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்று. அது... பிரம்மபுத்திரா ஆறு.

கடந்த புதன்கிழமை அன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்றது. அந்தப் படகில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தார்கள். அந்தப் பயணிகளில், கமல் கிஷோர்தாஸ் எனும் சிறுவனும் ஒருவன். வடக்கு கவுகாத்தியில் உள்ள செயிண்ட் அந்தோணி பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கிறான். அன்றைக்கு, அந்தப் படகில், அவனுடன், அவனுடைய அம்மாவும் அத்தையும் பயணித்தார்கள்.

சென்று கொண்டிருந்த படகு, திடீரென நிலைதடுமாறியது. எல்லோரும் திகைத்துப் போனார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில், படகு கவிழ்ந்தது.

பயணித்தவர்கள் எல்லோரும் ஆற்றில் விழுந்தார்கள். பயத்தில் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆற்று நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த கிஷோரின் அம்மா அவனைப் பார்த்து, ‘எப்படியாவது ஆத்துல நீந்தி, கரைக்குப் போயிடு’ என்று எச்சரித்தார். அவனும் ஒருபக்கம் மரண பயத்தாலும் இன்னொரு பக்கம் அம்மாவுக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்ற கலக்கத்தாலும் குமைந்துபோனான். ஆனாலும் ஒருவழியாக நீந்தி, கரை சேர்ந்தான்.

’அப்பாடா... கரைக்கு வந்தாச்சு’ என்று நினைத்தபடி, கிஷோர் திரும்பி ஆற்றைப் பார்த்தான். அதிர்ந்து போனான். அங்கே படகு கவிழ்ந்த இடத்தில் அம்மாவைக் காணோம். அதிர்ந்து கலங்கினான். அழுது கண்ணீர்விட்டான். ஆனாலும் உறுதியாக இருந்தான். விருட்டென்று ஆற்றில் குதித்தான். படகு கவிழ்ந்த இடத்துக்கு நீந்திச் சென்றான். அங்கே அம்மா தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தார். உடனே அம்மாவின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு இழுத்துக்கொண்டே வந்தான். ‘அய்யோ, அம்மா தலைமுடியைப் பிடிச்சு இழுக்கிறோமே, வலிக்குமே’ என்று உணர்ந்தவன், சட்டென்று அம்மாவின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே ஆற்றின் மேடான பகுதியை நோக்கி நீந்தி வந்தான். மேடான இடம், பாதுகாப்பான இடம் என உணர்ந்து, அம்மாவை அங்கே விட்டான். பிறகு, மீண்டும் ஆற்றுக்குள் குதித்து, நீந்தினான். ’அத்தையைக் கண்டுபிடிக்க வேண்டுமே!’

இந்த முறை இன்னும் வேகம் கொண்டு நீச்சலடித்தான். படகு கவிழ்ந்த இடம் மற்றும் சுற்றிலும் உள்ள இடங்களில் அத்தையைத் தேடினான். ஒருகட்டத்தில், அத்தையைக் கண்டான். அப்படியே அவரை கெட்டியாகப் பிடித்தபடி நீந்தினான். கரையின் மேடான பகுதிக்கு, அம்மாவை உட்கார வைத்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

அதுமட்டுமா? அம்மாவைக் காப்பாற்றியது போலவே அத்தையக் காப்பாற்றினான். இப்போது அங்கே இவர்கள் சென்ற படகில் பயணித்த ஒருவர், தத்தளித்துக் கதறிகொண்டிருந்தார். அவரையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான்.

தைரியத்தாலும் மன உறுதியாலும் தன் மீது கொண்ட மிகுந்த நம்பிக்கையாலும், கிஷோர் என்கிற ஆறாம் வகுப்பு மாணவன், ஆற்றில் நீந்திச் சென்று மூன்றுபேரைக் காப்பாற்றியதை, ஊரே திரண்டு வாழ்த்தியது. எங்கிருந்தெல்லாமோ, யார்யாரோ கிஷோரை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close