[X] Close

இன்று ஆசிரியர் தினம்: மாணவர்களை ஈர்க்க அரிதாரம் பூசும் ஆசிரியர்


teachers-day-special-article-about-sankarram

‘வால் கோமாளி’ வேடமிட்டு மாணவிகள் மத்தியில் கதை சொல்லி மகிழ்விக்கும் ஆசிரியர் சங்கர்ராம்.

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 05 Sep, 2018 09:01 am
  • அ+ அ-

சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சங்கர்ராம். எம்ஏ, எம்எட், எம்பில், பிஎச்டி படித்துள்ள இவர், ‘வால் கோமாளி’ வேடமிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். ‘வால் கோமாளி’ என்று மாணவர்கள் அழைப்பதை தனக்குக் கிடைத்த விருதாகக் கருதுகிறார்.

இன்று ஆசிரியர் தினத்தை யொட்டி தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டபோது குற்றா லத்தில் 10 நாட்கள் நடைபெற்ற நாடகப் பயிற்சி, பாடல் பாடும் பயிற்சி ஆகியவை எனக்குள் கலை ஆர்வத்தை ஏற்படுத்தியது. மதுரை தியாகராஜர் கல்லூரியில் பிஏ தமிழ் இலக்கியம் படித்த போது, பேராசிரியர்கள் பரமசிவன், ஞானசம்பந்தன் ஆகியோர் நாடகப்போட்டி, பேச்சுப் போட்டி களுக்கு என்னை அனுப்பி வைத்த னர். அது எனக்கு கலை ஆர்வத்துக்கான களமாக இருந்தது.

அடிமை சமூகம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் ராமச்சந்திரன் வழிகாட்டுதலில் ‘குழந்தைகளும், தமிழ் கதையாடல் மரபும்’ என்ற தலைப்பில் பி.எச்டி ஆய்வைத் தொடங்கினேன். திருநெல்வேலியில் பேராசிரியர் ராமானுஜம் அளித்த நாடகப் பயிற்சியில் கலந்துகொண்டேன். மதுரையில் தாய்த் தமிழ் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ‘கதை சொல்வது எப்படி’? என்பது குறித்து பயிற்சியை பேராசிரியர் மு.ராமசாமி அளித்தார்.

காட்சி ஊடகங்களுக்கு அடிமை யான சமூகமாக நம் சமூகம் மாறி உள்ளது. ஒரு நொடியில் பல காட்சிகளை குழந்தைகள் பார்க்கின்றனர். 1960-ல் தமிழா சிரியர்கள் பாடல் பாடி, கதை சொல்லித்தான் பாடம் நடத்தினர்.

ஆசிரியர் தனது பாடவேளையில் வகுப்பறையை சுவாரஸ்யமாக, மாணவர்களை ஈர்க்கும் வகையில் கொண்டுசெல்ல வேண்டும். ஒவ்வொரு தமிழாசிரியரும் ஒரு கதை சொல்லியாக, ஒரு நாடகக்காரராக இருந்தால் வகுப்பறையை வளமானதாக மாற்ற முடியும் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் கூறினார். அது எனக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்தது.

பத்தாம் வகுப்பில் மு.வரதராச னாரின் ‘குறட்டை ஒலி’ என்ற கதை இருந்தது. ஆசிரியர் பயிற்சி நடந்தபோது முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் ஆசிரி யர்கள் மத்தியில் கோமாளி வேடமிட்டு அந்த கதையை நாடக வடிவில் கூறினேன். கோமாளி வேடம் என்பது குழந்தைகளை மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பிடித்தமானதாக இருந்ததை அப்போது பார்க்க முடிந்தது.

அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை மனம் உள்ளது. எப்போது அது வெளிப்பட்டு குதூகலிக்க ஆரம்பிக்கிறதோ, அப்போது நாம் நினைத்ததையெல்லாம் அவர்களிடம் சொல்ல முடியும். அதற்கு இந்த கோமாளி வேடம் மிகவும் உதவியாக இருந்தது.

கூட்டு முயற்சி தேவை

ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கலைகளின் வழியாக கல்வியை கொடுத்தால் அது முழு வெற்றியடையும். கதையா டல் மூலம் கற்பித்தால் அதை மாணவர்கள் மறக்கமாட்டார்கள். கதைக்குள் இருக்கும் திருப்பு முனை கூடுதலாக கவனிக்க வைக்கிறது.

தமிழ் மட்டுமின்றி அறிவியல், சமூக அறிவியல், கணிதப் பாடங்களை முடிந்தவரை நாடக மயப்படுத்த முடியும். அதற்கு கூட்டு முயற்சி தேவை.எனவே, ஆசிரியர்கள் கதை சொல்லியாக மாற வேண்டும்.

குற்றாலத்துக்கு சென்றால் அருவியை போல் குரங்குகளையும் குழந்தைகள் உற்சாகமாக பார்ப்பார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வால் உள்ள கோமாளியாக உரு வெடுத்தேன். சில பள்ளிகளில் கதை சொல்லி முடித்தவுடன் மாண வர்களை என்னை கட்டி அணைத்து தூக்கி கொண்டாடுவார்கள். ‘ஏய்... வால் கோமாளி போறாரு...’ என்று மாணவர்கள் சொல்வதை கேட்கும்போது பெரிய விருது வாங்கியது போன்ற பெருமை ஏற்படுகிறது.

ஆசிரியர் என்ற உணர்வையும் தாண்டி, தனக்கான நண்பனாக மாணவர்கள் என்னை நெருங்கி வருகிறார்கள். தங்களது மனதில் உள்ள கவலைகளை கூறு கிறார்கள். திறந்த மனதுடன் என்னை அணுகுவதால், மாணவர்களுட னான உறவு மேன்மையானதாக மாறுகிறது.

ஆசிரியர் என்பவர் தன் வாழ்நா ளெல்லாம் கற்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆசிரியர்களை யும் தாண்டி மாணவர்கள் புதிய சிந்தனைகளை கொடுக்கும் போது அவர்கள் ஆசிரியர்களாகின்றனர். குழந்தைகளிடமிருந்து கற்று க்கொள்ள வேண்டும், அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் வேண்டும். இந்த சிந்தனை வந்தால் வகுப்ப றையை அற்புதமான கொண்டா ட்டமாக மாற்ற முடியும் என்றார்.

அதிகாரத்தை சுமக்கக்கூடாது

‘‘ஆசிரியர் தனக்குள் அதிகாரத்தை சுமந்துகொண்டு இருக்கக் கூடாது. தனக்கு கிரீடம் இருப்பதாகவும், தலைக்கு பின்னால் ஒளி வட்டம் இருப்பதாகவும் நினைத்தால் அவர் ஆசிரியராக தன்னை வளப்படுத்திக்கொள்ள முடியாது.

மாணவர்களுடன் கரைந்து செல்லும் இயல்புடைய ஆசிரியராக இருக்க வேண்டும். அதிகாரத்தை தூக்கி எறிந்துவிட்டு, குழந்தைகளோடு குழந்தைகளாக மாறும் மன இயல்புடன் இருந்தால் என்ன சொன்னாலும் உள் வாங்கிக்கொள்ளும் தன்மை குழந்தைகளுக்கு ஏற்படும்’’ என்கிறார் சங்கர்ராம்,

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close