[X] Close

கெலமங்கலம் பகுதி கிராமங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மந்தார தையல் சாப்பாட்டு இலை தயாரிப்பு தீவிரம்


new-type-of-banana-leaf-in-production-at-kolamangalam

கெலமங்கலம் அருகே குடிசைத் தொழிலாக தயாரிக்கப்படும் மந்தார தையல் சாப்பாட்டு இலைகள்.

  • kamadenu
  • Posted: 02 Sep, 2018 22:55 pm
  • அ+ அ-

 குடிசைத் தொழில் வளர்ச்சிக்கு அரசு உதவ கோரிக்கை

தமிழர்கள் பண்பாட்டில் இலையில் உணவு வகைகளைப் படைத்து சாப்பிடும் பழக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது. அதிலும் உடலுக்கு தேவை யான மருத்துவ குணமுள்ள வாழை இலைகள், மந்தார இலைகள் என தேடித்தேடி இலைகளைக் கண்டறிந்து அதில் உணவுப் பொருட்களை கடவுளுக்கு படைத்தும், உண்டும் நோயின்றி வாழும் வாழ்க்கை முறையில் ஒன்றியிருந்தனர். இலைகளில் உணவு உண்ணும் போது உடல் நலம் காக்கப்படுவதுடன், தூக்கி எறியும் போது எளிதில் மண்ணில் மக்கும் தன்மை இருப்பதால் சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது.

உணவு வகைகள் பரிமாறப்படும் இலைகளில் வாழை இலைக்கு அடுத்தபடியாக மந்தார தையல் இலைக்கு முக்கியத்துவம் உண்டு. மந்தார இலைக்கே உரிய சிறப்புத்தன்மை என்னவென்றால் இந்த இலையில் சூடான உணவு பொருட்களை வைத்தால், உணவுப் பொருளின் மணம், சுவையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. இலையில் பரிமாறப்படும் சூடான உணவில் எந்த விதமான ரசாயனத் தன்மையும் ஏற்படாது. அதுமட்டுமின்றி உணவு உட்கொண்ட பின்பு வெளியில் வீசப்படும் மந்தார இலை ஆடு, மாடுகள் சாப்பிட உகந்ததாக இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

இதன் காரணமாகவே உணவு சாப்பிடும் இலைகளில் வாழை இலைக்கு அடுத்தபடியாக மந்தார இலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. கால ஓட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு வந்த பிறகு மக்களிடையே உணவு உண்ண இலையைப் பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது. எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் என்ற நிலை உருவாகிப் போனதால், தையல் இலை தயாரிக்கும் குடிசைத் தொழிலை நம்பி இருந்த ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலை சீர்குலைந்து போனது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாட்டில் மக்காத குப்பைகள் அதிகரித்து சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து எளிதில் மக்கும் தன்மையுடைய, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மந்தார தையல் இலை தயாரிப்பு குடிசைத் தொழில் வளர்ச்சிக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும் என்பது தையல் இலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, அந்தேவனப்பள்ளி, நொகனூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங் களில் மந்தார சாப்பாட்டு தையல் இலைகள் தயார் செய்யப்படுவது குடிசைத் தொழிலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மந்தார தையல் இலைகளுக்கு சிறிய உணவகங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல், கனகபுரா உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால், இந்த தொழில் இப்பகுதி யில் இப்போதும் அழியாமல் உள்ளதாக கூறுகின்றனர் இத்தொழி லில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

இதுகுறித்து கெல மங்கலம் பட்டாளம்மன் கோயில் அருகே மந்தார இலைகளைக் கொண்டு சாப்பாட்டு இலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிவம்மா கூறியதாவது: கெலமங்கலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தையல் இலை தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு வருவதற்கு முன்பு மந்தார இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சாப்பாட்டு இலையின் விற்பனை உச்சத்தில் இருந்து வந்தது. ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை தளி உள்ளிட்ட பகுதிகள் வனம் சார்ந்த பகுதிகளாக இருப்பதால் இங்கு தையல் இலைகள் தயாரிக்க மந்தார இலைகள் தாராளமாக கிடைத்து வருகின்றன. இங்கு தயாரிக்கும் தையல் இலைகள் பல இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வியாபாரிகள் எங்கள் பகுதிக்கே வந்து சிற்றுண்டி இலை, சாப்பாட்டு இலை என வாங்கிச் செல்வார்கள், நாளடைவில் பிளாஸ்டிக் வந்த பிறகு படிப்படியாக விற்பனை குறைந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கெலமங்கலத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாப்பாட்டு இலை தயாரிப்பு குடிசைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கெலமங் கலத்தில் தையல் இலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந் துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தையல் இலையை சாப்பாட்டுக்கு பயன்படுத்துவது அதிகரிக்கும் என எதிர்பார்த்து, தையல் இலை தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறோம்.

தையல் இலைகளைத் தயாரிக்க மந்தார மரத்தின் இலைகளைப் பயன்படுத்துகிறோம். ரூ.100-க்கு விற்கப்படும் ஒரு மூட்டை பச்சை மந்தார இலைகளைக் கொண்டு சுமார் 200 தையல் இலைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் பச்சை மந்தார இலைகளை ஒரு கயிற்றில் வரிசையாக கோர்த்து வெயிலில் ஒரு வாரம் காய வைக்க வேண்டும். பின்பு நன்றாக காய்ந்த இலைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு இலைகளை எடுத்து சுத்தப்படுத்தி துணிகளில் சுற்றி அதன் மீது அகலமான கல் வைத்து இலைகளை மடிப்பு இன்றி சமப்படுத்த வேண்டும். இதனிடையே இலைகளைத் தைக்க தேவையான குச்சியை மூன்றாக பிளந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு குச்சிகளை பயன்படுத்தி இலைகளைத் தைத்து அடுக்கப்பட்ட இலையின் மீது கல் வைத்து பாரம் கொடுத்து இலைகளை சமப்படுத்த வேண்டும். இப்படி பல நிலைகளைக் கடந்து ஒரு இலை தயாரிக்கப்படுகிறது.

10 முதல் 13 இலைகளைக் ஒன்று சேர்த்து ஒரு தையல் இலை உருவாகிறது. இதில் வேலை அதிகம். ஆனால் லாபம் குறைவு. அதேசமயத்தில் பெண்களுக்கு ஏற்ற வேலையாக இது உள்ளது. வீட்டு வேலை செய்து கொண்டே ஓய்வு நேரத்தில் இலைகளைத் தயாரிக்கலாம். 100 இலைகள் உள்ள ஒரு கட்டு மந்தார தையல் இலை ரூ.150 முதல் ரூ.175 வரை விற்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியில் ஒரு கட்டு இலை ரூ.200 வரை விலை போகிறது.

இலை தைக்கப் பயன்படும் ஒரு கட்டு குச்சி ரூ.15-க்கு கிடைக்கிறது. செலவுகள் எல்லாம் போக ஒரு கட்டு தையல் இலை விற்றால் ரூ.50 முதல் ரூ.75 வரை லாபம் கிடைக்கிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து விரைவில் மண்ணோடு மண்ணாக மக்கி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் தையல் இலைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில் மந்தார தையல் இலை குடிசை தொழில் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் அளி்ப்பது, சந்தைப்படுத்துதலுக்கு வழி ஏற்படுத்தித் தருவது என உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close