[X] Close

மதங்களைக் கடந்த மனிதம்: இயக்குநர் பொன்வண்ணன் பதிவிட்ட நெகிழ்ச்சிப் பகிர்வு


actor-ponvannan-amazing-facebook-post

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 01 Sep, 2018 19:38 pm
  • அ+ அ-

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான பொன்வண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆட்டோ ஒட்டுநர் பற்றி நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். இப்பதிவுக்கு அவரது நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தனது ஃபேஸ்புக் பதிவில் பொன்வண்ணன் கூறியிருப்பதாவது:

என் துணைவியார் நடத்தும் Dsoft-ல் பயிற்சிபெற admission-னுக்காக தஞ்சாவூரிலருந்து தன் மனைவியை அழைத்து கொண்டு வந்த நண்பர் ஒருவர். கோயம்பேடு பஸ் நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் வந்து, அலுவலகத்தின் முன் இறங்கிய சிறிது நேரத்திலேயே பதட்டத்துடன் ரோட்டிற்கு ஓடியிருக்கிறார்.

காரணம்....அவர் எடுத்துவந்த பெட்டியை ஆட்டோ பின்புறம் வைத்து,எடுக்க மறந்துவிட்டதுதான். அதில் பணம்,கிரிடெட் கார்டு,திரும்பி செல்லும் டிக்கெட் உட்பட அனைத்தும் இருந்திருக்கிறது.நான் காலையில் படப்பிடிப்புக்கு கிளம்பி கொண்டிருந்த சூழ்நிலையில் தகவல் தெரிந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை இழந்த அவர் கண்கள் கலங்கி நின்றார். (என் சிறுவயதில் என் தந்தையார் இதுபோன்று பணத்தை இழந்து கலங்கிய சம்பவம் நினைவில் வந்தது..)

உடனே வீட்டிலிருந்த cctv கேமரா மூலம்,அந்த ஆட்டோவை தேடினேன். அவர்களுடைய நேரம் அந்த ஆட்டோவில் எண்கள் சரியாக கேமராவில் தெரியவில்லை. இதற்கிடையே அவர்களுக்கு பணம்தந்து இருவரையும் பதட்டப்படாமல் போய் சாப்பிட்டு விட்டு,காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வரச்சொன்னேன்.

இரண்டு மணி நேரத்திற்கு பின் 

ஒரு ஆட்டோ வந்து நின்றது. தவறவிட்ட பணப்பெட்டியுடன் வந்து நின்றார் ஆட்டோ ஓட்டுநர் வேலு. அந்த தம்பதியர் கண்ணீர்மல்க நன்றி கூறினர். பணத்துக்காக கழுத்தை அறுப்பது, செயின் அறுப்பது நடக்கிற காலகட்டத்தில் இவரின் மனிதாபிமானம் நெகிழ வைத்தது. அவரை அவருடைய நேர்மையை பாராட்டி நான் தந்த அன்பளிப்பையும் வாங்க தயங்கினார். 

தர்மபுரியை சேர்ந்த அவர், கஷ்டப்பட்டு தான் பையனை இன்ஜினியரிங் படிக்க வைப்பதாக சொன்னார். ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் அழையுங்கள் என கூறி அனுப்பிவைத்தேன். 

உங்களின் நேர்மைக்கு மிகப்பெரிய வணக்கங்கள் வேலு...!

இச்சம்பவத்தை யோசிக்கும் போது, பணத்தை இழந்தது இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவர்கள். பணத்தை கொண்டுவந்தது இந்து மார்க்கத்தை சார்ந்தவர். இருவருக்குமே பணத்தேவைகள் இருக்கிறது!

கஷ்டப்பட்டு உழைச்சதை இழக்கவெச்சிட்டியே ’அல்லா’ என தம்பதியர்களும். கஷ்டத்துக்கு ’கடவுள்’ வழிகாட்டிவிட்டார் என ஓட்டுநரும். யோசிக்க வாய்ப்பிருக்கிற மனநிலையில், தங்கள் சார்ந்த “கடவுள்களை”இவர்கள் மனிதம் மூலம் வென்றெடுத்திருக்கிறார்கள்.

அல்லது -

மனிதாபிமானம் மூலமாக ’கடவுள்’ தன் உருவத்தை காட்டியிருக்கிறார்.

இவ்வாறு தன் பதிவில் பொன்வண்ணன் பதிவிட்டு இருக்கிறார். ஆட்டோர் ஓட்டுநர் வேலுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளது.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close