[X] Close

உபெரின் முதல் பெண் டிரைவர்: ஒரு பத்திரிகையாளரின் அனுபவப் பகிர்வு


meet-jerinabegam-chennai-s-first-lady-uber-driver-who-started-her-journey-as-a-beggar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Aug, 2018 12:12 pm
  • அ+ அ-

சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், மின்சார ரயில்கள் என போக்குவரத்துக்கு எத்தனை வாகனங்கள் வந்தாலும்கூட போதாது என்ற நிலையே இருக்கிறது. வேகமாகச் செல்ல சொகுசாக செல்ல இப்போது கேப்களும் வந்துவிட்டன. உபெர் என்ற கார் நிறுவனத்தின் காரில் ஒரு பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட அனுபவப் பகிர்வுதான் இது.

அந்த அனுபவத்தை அந்த பத்திரிகையாளரின் வார்த்தைகளிலேயே படித்தால்தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.

"இவர்தான் ஜெரீனாபேகம். உபெர் கால் டாக்ஸியின் சென்னையின் முதல் பெண் ஓட்டுநர்.
ஆகஸ்ட் 13-ம் தேதி காலை வழக்கம்போல் பரபரப்பாகவே இருந்தது. ஒரு பிரஸ் மீட்டுக்காக விரைந்து செல்ல வேண்டியிருந்தது. வழக்கம்போல் உபெர் புக் செய்தேன். என்னை ஏற்றிச் செல்லவேண்டிய இடத்தையும் இறங்குமிடத்தையும் குறிப்பிட்டுவிட்டு ஓட்டுநருக்கு நான் அழைப்புவிடுக்க அவரோ ஏனோ அந்த புக்கிங்கை கேன்சல் செய்தார்.

அடுத்த சில விநாடிகளில் தொலைபேசி அழைப்பில் ஒரு பெண். அந்தப் பெண் கால் சென்டர் பெண் என்றே நினைத்தேன். ஆனால், அவரோ நான் டிரைவர் பேசுகிறேன் என்று என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சற்றும் தாமதிக்காமல், ஹலோ மேம்.. நீங்க சென்னையின் முதல் கால் டாக்ஸி டிரைவரா என்று கேட்டே விட்டேன். அவரும் ஆமாம் என்றார்.

உபெர் வாடிக்கையாளராக இருந்தும் இதுவரை பெண் ஓட்டுநர் வாகனத்தில் சென்றதில்லை என்பதால் அன்றைய பயணம் ஆவலைத் தூண்டியது. காரில் ஏறியவுடனேயே ஜெரீனா பேகத்திடம் அவரது ஓட்டுநர் அனுபவம் குறித்து கேட்கத் தொடங்கினேன்.

"நான் 12 வருடங்களாக ஓட்டுநராக இருக்கிறேன். எல்லாம் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் இந்தத் தொழிலை ஏற்றேன். எனது கணவர் எங்கோ சென்றுவிட்டார். எனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வழியில்லாமல் தெருவில் பிச்சை எடுத்தேன். (எனக்கு தூக்கிவாரிப்போட்டது) நல் உள்ளம் கொண்ட ஒரு ஆண் எனக்கு கொஞ்சம் நிதியுதவி செய்தார். அதைக் கொண்டு ஒரு குடிசைக்கு குடித்தனம் சென்றேன். அருகாமையில் இருந்த வீடுகளில் வீட்டு வேலை தேடிச் சென்றேன். வேலையும் கிடைத்தது. ஆனால், எனது வயதும் பாலினமும் என்மீது கேவலமானப் பார்வைகளை ஈர்த்தது. அதிலிருந்து விடுபட வீட்டு வேலை பணியைத் துறந்தேன். கல்யாண மண்டபத்தில் க்ளீனராக சேர்ந்தேன். ஆனாலும், ஏதாவது கவுரமான வேலை வேண்டும் என ஏங்கினேன். சிறு வயதிலிருந்தே ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

மீண்டும் சில நல்ல உள்ளங்கள் உதவியுடன் ட்ரைவிங் பள்ளியில் இணைந்தேன். முதன்முதலில் நான் ஓட்டிய வாகனம் டாட்டா ஏஸ். அதாங்க குட்டி யானை. அதில் காய்கறி லோட் ஏற்றிச் சென்றேன். அப்போதுதான் எனக்கு சிலர் ஃபாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி குறித்து கூறினர். நானும் அங்கே பதிவு செய்து கார் ஓட்டினேன். நல்ல வருமானம் கிடைத்தது. கொஞ்சம் சவுகரியமான வீடு குழந்தைகளுக்கு கல்வி கிட்டியது. எனது காரில் வாடிக்கையாளராக வந்த ஒருவர் என் குழந்தைகளுக்கு சீருடை, பள்ளிக் கட்டணம், புத்தகங்கள் வழங்கினார். ஆனால், ஓராண்டாக அவரிடமிருந்து எதுவும் வரவில்லை. விசாரித்தபோது அந்த நல் உள்ளம் உறங்கிவிட்டது தெரிந்தது.

ஃபாஸ்ட் ட்ராக்கில் சேர்வதற்கு முன்னர் ஒரு குடும்பத்தினருக்கு பெர்சனல் டிரைவராகவும் வேலை பார்த்தேன். அவர்கள் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது என்னையும் அழைத்தனர். ஆனால், நான் மறுத்துவிட்டேன். சென்னைதான் எனது சொந்த ஊர். இங்கிருந்து கிளம்பிவிட்டால் என்னைத் தவறாகப் பேசுவார்கள். மோசமான பாதையில்தான் பணம் ஈட்டுகிறேன் என்று பழி சொல்வார்கள். சொல்வார்கள் தானே சார். (நானும் ஆமோதிப்பதுபோல் தலையை அட்டினேன்.)
ஃபாஸ்ட் ட்ராக் வேலை நன்றாக சென்று கொண்டிருந்தபோதுதான் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வேலை என அந்நிறுவனம் அறிவித்தது. அது மிகக்கடினமான காலமாக மாறியது. என்ன செய்வதென்று தெரியாது நின்றபோது உபெர் வந்தது.

உபெரில் சேர்வதற்கு இடைப்பட்ட காலத்தில் மீண்டும் வீட்டு வேலைக்குச் சென்றேன். இப்போது உபெர் மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். அதிகாலையே வேலைக்குச் சென்று விடுவேன். சில நாட்கள் மீண்டும் அடுத்தநாள் காலை 2 மணிக்குதான் வருவேன். எனது பிள்ளைகள் அவர்களாகவே வளர்கின்றனர். காலை உணவை வீட்டிலேயே சாப்பிட்டு விடுவேன். அப்புறம் எல்லாம் பிஸ்கட்டும் தண்ணீரும்தான். வேலை இருக்குலா சார். வேற என்ன செய்ய முடியும் சொல்லுங்க?
நான் டாட்டா ஏஸ் ஓட்டும்போதே ஒரு தொலைக்காட்சிகாரங்க என்னை இன்டர்வியூவ் செய்தாங்க. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. (ஆனால், வேறொரு வெப் சேனல் மூலமாக ஜெரீனாவுக்கு ரூ.60,000 உதவி கிடைத்திருக்கிறது)

ஜெரீனாவிடம் நான் கேட்டேன். சொந்தமாக கார் வேண்டுமா என்று. லோன் எல்லாம் கஷ்டம் சார் என்று சொல்லிவிட்டார். 

வாகனத்திலிருந்து வெளியே வரும்போது அவர் அனுமதியுடனேயே அவரை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். 

"நீங்கள் உத்வேகம் அளிக்கும் பெண். நான் ஊடகத்தில் பணியாற்றுகிறேன். என்னால் இப்போதைக்கு எதுவும் உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் உங்களுக்கு உதவ யாராவது முன்வருகிறார்களா எனத் தேடுகிறேன்" என்றேன். அவரும் சரி என்றார்.

ஜெரினாவின் புகைப்படத்தை உடனே எனது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிந்தேன். ஆனால், அவரைப் பற்றி விவரமாகப் பதிவிடவில்லை. அன்று அந்தப் புகைப்படத்தின் கீழ், "இவர்தான் ஜெரீனாபேகம். சென்னையில் உபெர் கால் டாக்ஸியின் முதல் பெண் ஓட்டுநர். இவரது கதை உத்வேகம் அளிக்கிறது. அதைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன். ஜெரீனா தனி ஒருவராக இருந்து தனது பிள்ளைகளுக்காக உழைக்கிறார். சிறிய பின்னடைவுகள் ஏற்படும்போதே நாமெல்லாம் நொறுங்கிப்போகும்போது ஜெரீனா மிகக் கடினமான பாதையை கடந்து வந்திருக்கிறார். #Inspiration" எனப் பதிவிட்டிருந்தேன்.

முழு விவரத்தையும் நான் குறிப்பிடாதபோதும் உபெர் இந்தியா நிறுவனம் எனது ட்வீட்டுக்கு பதில் அளித்தது. "இவரை அடையாளப்படுத்தியதற்கு நன்றி ராஜசேகர். இப்படிப்பட்ட சூப்பர்வுமன் எங்களுடன் இணைந்திருப்பதை ஆசிர்வாதமாக உணர்கிறோம். இவர் நிச்சயமாக உத்வேகம் அளிக்கக் கூடியவர். இவரைப் பற்றி சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்திருக்கிறோம். மீண்டும் நன்றி. எங்களை புன்னகை பூக்க வைத்துவிட்டீர்கள்" என உருக்கமாக பதிலளித்திருந்தது.

அதற்கு பதிலாக, "இவரைப் போல் இன்னும் பல சூப்பர்வுமன்களுக்கு வாய்ப்பு தருவீர்கள் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டேன். அதற்கும் ஆமோதித்து பதில் அளித்தார்கள்.

சமூக வலைதளம் மிகவும் வலிமையான ஒரு மேடை. இங்கே சில நல்ல நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. எனது பதிவைப் படித்துவிட்டு நிறைய ஊடக நண்பர்கள் ஜெரீனாவின் எண்ணைப் பெற்றுள்ளனர்.

ஜெரீனாவுக்கு தேவையான உதவி கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அந்த பத்திரிகையாளர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கீழே இருக்கும் சுட்டி பத்திரிகையாளரின் பிளாகுக்கானது

https://sekarspeaks.blogspot.com/2018/08/meet-jerinabegam-chennais-first-lady.html?m=1

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close