[X] Close

‘நேர்மை’ மனிதருக்கு குவியுது பாராட்டு! ஏடிஎம் பணத்தை வங்கியில் ஒப்படைத்தார்!


atm-10-000-kbm

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Aug, 2018 11:58 am
  • அ+ அ-

ரோட்டில் கிடக்கும் பத்து ரூபாய் பணத்தைக் கூட யாரும் பார்க்காத சமயத்தில், லபக்கிச் செல்லும் இந்தக் காலத்தில், ஏடிஎம் மையத்தில் இருந்த பத்தாயிரம் ரூபாயை, வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த கல்லூரிப் பேராசிரியரின் நேர்மையான செயலை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

கும்பகோணத்தை அடுத்து உள்ள ஆடுதுறையில், தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார் செந்தில்வேலன். இவர், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு, பணம் எடுப்பதற்காகச் சென்றார்.

அப்போது மிஷினில் தன் வங்கி அட்டையை நுழைக்கச் சென்றவருக்கு அதிர்ச்சி. அங்கே மிஷினில், பணம் வெளிவரும் இடத்தில் கத்தையாகப் பணம் இருந்தது. எடுத்துப் பார்த்தால், பத்தாயிரம் ரூபாய். அதிர்ந்து போன செந்தில்வேலன், ஏடிஎம் மையக் காவலாளியைத் தேடினார். அவர் இல்லை.

இதையடுத்து நண்பரிடம் ஆலோசித்தார். பிறகு ஏடிஎம் மையத்துக்கு உரிய தனியார் வங்கிக்குச் சென்று, மேலாளரைச் சந்தித்தார். விவரங்கள் முழுவதையும் சொல்லி, பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் ஒப்படைத்தார்.

’யாரோ மிஷினில் கார்டு போட்டிருக்கவேண்டும். நீண்ட நேரமாகியும் பணம் வரவில்லை என்பதால், மிஷின் கோளாறு என்று நினைத்துக் கிளம்பியிருக்கவேண்டும். ஆனால், மிஷினில் இருந்து பணம் பிறகுதான் வெளியே வந்திருக்கும் போல!

இந்தப் பத்தாயிரம் ரூபாய் பணம் என்பது சாதாரணம் அல்ல. நிச்சயமாக, அவசரத் தேவைக்காகவோ அவசியத் தேவைக்காகவோதான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எப்படியும் கார்டில் பணம் இல்லை என்று தெரிந்ததும் வங்கிக்கு புகார் அளிக்க வருவார்கள். அப்போது பணம் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று தெரிவித்தார் பேராசிரியர் செந்தில்வேலன்.

வங்கி மேலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி இந்த இவரின் நேர்மையான செயலைக் கண்டு பொதுமக்களும் பாராட்டினார்கள்.

ஆடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்த போதிலும் அண்ணனின் சாலையோரக் கடையில், மாலை நேரங்களில் தினமும் சப்ளையராகவும் வேலை செய்து வருகிறார் செந்தில்வேலன்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close