[X] Close

காவிரித்தாய் வருகிறாள் பராக்... பராக்! : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்!


cauveri-river

கரிகாற்சோழன் கட்டிய கல்லணை

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Jul, 2018 15:36 pm
  • அ+ அ-

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது என்பார்கள்.  இங்கே  தாயை தெய்வத்துக்கு நிகராகச் சொல்கிறோம். கும்பிடுகிறோம். அப்படியெனில்  அன்னையை விட ஒரு படி மேலே இருக்கும் தண்ணீரையும் வணங்குவதுதானே இயல்பு. அப்படித்தானே புனித நதி என்றும் புண்ணிய நதி, தீர்த்தம் என்றும்  போற்றுகிறோம்; வணங்குகிறோம். அப்படி காவிரி நதியையும் புனிதம் புண்ணியம் என்றும் சொல்லிப் பூரிக்கிறோம். காவிரியைத் தாயாகவே நினைத்து நெகிழ்கிறோம்; மகிழ்கிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது குறுகிய கால வாழ்க்கையை வாழும் நமக்கே  பொருந்தும் போது, நதிகளுக்குப் பொருந்தாதா? அதனால்தான் எங்கிருந்தோ பிறந்து, ஊர்ந்து, தவழ்ந்து, நடந்து, பாய்ந்தோடி வரும் காவிரிப் பெண்ணுக்காகவும் அவளின் வருகைக்காகவும் தமிழகமும் குறிப்பாக, காவிரி தேசமும், சோழவளநாடும் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது.

நீரின்றி அமையாது உலகு என்பது  சத்திய வார்த்தை. அதனால்தான் சோழ மன்னர்கள் காலத்திலேயே, காவிரித்தாயை, பாய்ந்து பாசம் பொங்க, நுரை பொங்க ஓடி வரும் காவிரியை வரவேற்று விழா எடுத்தார்கள். விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

சோழ தேசம் என்பது பரந்துபட்ட தேசமாக இருந்தது அப்போது. கொங்கு நாட்டின் பாதி வரை, இவர்களின் ஆட்சிதான் இருந்தது. ஒகேனக்கலைக் கடந்து, மேட்டூருக்கு வந்து, ஈரோட்டுப் பக்கம் நனைத்து, கரூர் அமராவதியையும் தொட்டுச் சிலிர்க்க வைத்து, முக்கொம்புவிற்கும், கல்லணைக்குமாக தேக்கிக் கொள்ளவும் தந்து, தஞ்சாவூர், திருவையாறு , குடந்தை, மாயவரம் என  காவிரி செல்லும் இடமெல்லாம் சிறப்புதான்; சிறப்பாகவும் செம்மையாகவும் கொண்டாடினார்கள் மக்கள்.

காவிரியின் பாதை பிரமாண்டமானது. நீளமானது. அகண்ட காவிரி என்றே சொல்வார்கள். அப்படி காவிரி வரும் வழியெல்லாம்  படிக்கட்டுகளும் மண்டபங்களும் கட்டிவைத்தார்கள் மன்னர்கள். இந்த மண்டபங்களில் இருந்து கொண்டு, குதித்தோடி வரும் காவிரியை வணங்குவார்கள் மக்கள். கால் நனைப்பார்கள். தலையில் தெளித்துக்கொள்வார்கள். நீரெடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்வார்கள். தீர்த்தம் போல் எடுத்துப் பருகுவார்கள். ‘அமிர்தம் அமிர்தம்’ என்று புகழ்வார்கள். கூடைகூடையாக வைக்கப்பட்ட மலர்களை கைநிறைய எடுத்து காவிரியில் விடுவார்கள். நெடுஞ்சாண்கிடையாக, காவிரியை வணங்குவார்கள். ‘இந்த சோழ தேசம், சோறுடைத்த தேசம்... சோழ நாடு சோறுடைத்து’ எனும் பெயர் எப்போதும் திகழ அருள் செய் காவிரித்தாயே!’ என்று பிரார்த்தனை செய்வார்கள்.

சோழ தேசத்து மக்கள் ஆங்காங்கே படித்துறைகளில் நின்றுகொண்டு, பூக்களைச் சொரிவார்கள். தொப்பென்று குதித்து நீச்சலடிப்பார்கள். முங்கிக் குளிப்பார்கள். கைகளால் அள்ளியெடுத்து, அப்படியே நெஞ்சில் ஊற்றிக் கொள்வார்கள்.

மன்னரும் மகாராணியும் நின்று, காவிரிக்கு மரியாதை செய்து வணங்கிய இடம் , இன்னும் கொண்டாட்டமாக இருக்கும். மேள வாத்தியங்கள் முழங்கும். சிறுவர்கள் ஆடுவார்கள். பெண்கள் படித்துறைகளில் விளக்கேற்றுவார்கள். முதியவர்கள், கும்பிட்ட கையை இறக்காமல், கண்ணீர் மல்க காவிரியைப் பார்த்துக்கொண்டே கண்ணீர் வடிப்பார்கள்.

இப்போதுதான் ஆற்று நீர்ப் பாசனம், குளத்து நீர்ப் பாசனம், கிணற்று நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் என்பதெல்லாம்! ஆனால், சோழ தேசம் முழுக்க, காவிரி நீர்பாசனம்தான். அதனால்தான் சோழ தேசத்து விவசாயிகளை, காவிரி டெல்டா விவசாயிகள் என்று இப்போது சொல்கிறோம்.

ஒருபக்கம் வேற்று மாநிலம், இன்னொரு பக்கம் அரசியல் ஆகியவற்றால், காவிரியின் வருகைக்காக தவம் இருக்கத் தொடங்கினார்கள் சோழ தேச மக்கள். வானம் பார்த்த பூமி மாதிரி, காவிரி பார்த்து, காவிரி வருகைக்காக ஏங்கிக் காத்திருக்கும் சோழ தேச பூமி, ஆயிரம் கதை சொல்லும். போதாக்குறைக்கு, மணல் கொள்ளை வேறு. மார்பகம் வற்றிக் கிடக்கும் தாய்க்கிழவி போல , மூதாட்டியின் கன்னக்குழி போல, காவிரிப் பாதையில் ஏகப்பட்ட பள்ளங்கள்; எக்கச்சக்க முட்செடிகள். மணல் எடுத்துச் செல்லும் லாரிகளையும் டிராக்டர்களையும் கழுவக் கூட காவிரியில் தண்ணீரில்ல்லாத கொடுமை!

கரும்பு பயிரிட ஒரு கூட்டம், வாழைக்கென ஒரு கூட்டம், தென்னைக்கு ஒரு கூட்டம், நெல்மணிகளை விளையச் செய்ய கூட்டம், சோளத்துக்காகவும் கம்புக்காகவும் பயறுக்காகவும் கூட்டம்கூட்டமாகக் காத்திருக்கும் கூட்டத்தின் கண்ணீரும் சோகமும் காவிரி குறித்தது மட்டும்தான்!

காவிரி வருகையின் போது, இன்னும் இன்னும் நடந்த விழாக்களும் கொண்டாட்டங்களும் ஏராளம்!

இதோ... முக்கொம்பில் அலையடிக்கிறது. கல்லணையில் எக்காளமிட்டுச் சிரிக்கிறாள் காவிரி. தியாகப்பிரம்மத்தின் இசைவெள்ளத்தில் நனைய, ஓடோடி வருகிறாள் காவிரித்தாய்.

காவிரிப் பெண்ணுக்கு, பூக்கள்  தூவுவோம். மஞ்சளும் அரிசியும் அட்சதையுமாக அள்ளித் தெளிப்போம்.

நீங்களும் நானும்தான் சண்டையிட்டுக்கொள்வோம். அப்படி சண்டையிட்டதை மறக்காமல் வன்மம் வளர்ப்போம். இயற்கை ஒருபோதும் மனிதர்களை பழி வாங்காது. இயற்கையை நாம் சூறையாடினாலும், வதைத்துச் சிதைத்தாலும் இயற்கையானது... மன்னிக்கும் மகத்தான குணம் கொண்டது. காவிரித்தாயும் அப்படித்தான். நம்மை மன்னித்து, நம்மையும் நம் விவசாய பூமியையும் குளிரச் செய்வாள்!

காவிரித்தாயே சரணம். காவிரித்தாயே போற்றி!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close