[X] Close

மானமிகு  சுயமரியாதைக்காரன்! - கருணாநிதி பேட்டி


self-respecting-m-karunanithi

  • சரவணன்
  • Posted: 25 Jul, 2018 11:52 am
  • அ+ அ-


கருணாநிதியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிவிடுவது எளிது. பத்திரிகையாளர்கள் எப்போதும் அணுகத்தக்கவராக இருந்தவர் அவர். ஆனால், பேட்டி எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதிவேகம், வரலாற்றுத் தரவுகளின் வழியிலான எதிர்க்கேள்விகள், கச்சிதமான வார்த்தைகள் என்று கேள்வி கேட்பவரை அசரடிப்பவர் அவர். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளுக்காக அவர் அளித்த பேட்டிகளிலிருந்து தொகுக்கப்பட்ட கேள்வி - பதில்கள் இவை!


தொடக்கத்தில் இருந்தே நீங்கள் நாத்திகர்தானா?


பத்து வயது வரை ஆத்திகன்தான். அதற்குப் பிறகுதான் நாத்திகன் ஆனேன். பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் கூட்டங்களைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாறினேன். காளிதாஸன் நாக்கில் காளி எழுதிய உடனே பாட ஆரம்பித்த மாதிரி, உடனடியாக மாறிவிடவில்லை.


‘ஒன்றே குலம்’ சரி. ‘ஒருவனே தேவன்’ என்பது உங்களுக்கு ஏற்புடையதுதானா?


அது தேவனோ, தேவியோ... சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் இயற்கை. அதற்கு கை, கால் இருக்கிறது, வரம் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதையோ, அது ஒருவரை வாழ வைக்கும் அல்லது கெடுக்கும் என்று சொல்வதையோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


உங்கள் வீட்டிற்கு அருகிலேயே வேணுகோபாலன் கோயில். என்றைக்காவது அங்கு சென்றிருக்கிறீர்களா?


நான் வெளியூர் செல்லும்போது யாராவது அன்பின் காரணமாக வேல்கள், விநாயகர், அம்பாள் சிலைகளைப் பரிசாகத் தந்தால், அவற்றை இந்தக் கோவிலுக்கு அனுப்பிவிடுவேன். நான் அனுப்பிய அந்தப் பொருட்கள் போயிருக்கின்றன. நான் போனதில்லை.


உங்கள் கட்சியில் பலர் ஆத்திகர்களாக இருக்கிறார்களே?


என் குடும்பத்திற்குள்ளேயும்தான் இருக்கிறார்கள். அதையே நான் அனுமதிக்கிறேனே! நேரு நாத்திகத் தலைவர்தான். ஆனால், அவருடைய காங்கிரஸ் இயக்கம் நாத்திக இயக்கம் இல்லையே?


பெரியார்?


அநியாயத்தைப் பொசுக்கும் அக்கினி மலை!


தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடர்பாக சிலாகித்துப் பேசியுள்ள நீங்கள், பக்தி இலக்கியங்கள் தொடர்பாக எதுவும் சொல்வதே இல்லை. கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகிறது என்பதாலேயே அவற்றைப் புறக்கணித்துவிட முடியுமா?

தொல்காப்பியம், சங்க இலக்கியம் பெரும்பாலும் சாதி, சமயம், பக்தி இவற்றுக்கு அப்பாற்பட்ட மிக உயர்வான இலக்கண, இலக்கியங்களாகும். அவற்றுக்குப் பிறகு வந்தவை பக்தி இலக்கியங்கள். அவற்றை நான் புறக்கணித்ததும் இல்லை, புறந்தள்ளியதும் இல்லை. அவ்வகை இலக்கியங்களில் நான் படித்துத் தோய்ந்திருக்கிறேன். அவை கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகின்றனவோ இல்லையோ...  தமிழ்மொழியின் நீள, அகலத்தை நிச்சயமாக முன்னிலைப்படுத்துகின்றன.


நல்ல இலக்கியவாதியால், பெரிய அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. உங்களால் எப்படி இருக்க முடிகிறது?


விதிவிலக்கு உண்டு. பண்டித நேரு அடிப்படையில் இலக்கிய உள்ளமும், படைப்பாளிக்கான பண்பட்ட திறனும் கொண்டிருந்தவர். சிறையில் இருந்துகொண்டு தனது அருமை மகள் இந்திராவிற்கு அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் இலக்கியச் செறிவு கொண்டவை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் எழுத்திலும், பேச்சிலும் இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரரசன். அப்படிப்பட்டவர்களோடு என்னை ஒப்பிட்டுக்கொள்வதற்காகச் சொல்லவில்லை. அரசியல் எனக்குப் பிராணவாயு எனில், இலக்கியம் எனக்குத் தெம்பூட்டும் சரிவிகித உணவு.


ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப் பணி என ஓய்வில்லா வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மனதையும் உடலையும் சோர்வடையாமல் வைத்துக் கொள்ள தாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கங்கள் என்ன?


அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் உதயசூரியனைக் காணுகிறேன். என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா?


தலைசிறந்த 10 புத்தகங்களைப் பட்டியலிடுங்களேன்?


1.திருக்குறள், 2.தொல்காப்பியம், 3.புறநானூறு, 4.சிலப்பதிகாரம், 5. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 6.அண்ணா எழுதிய ‘பணத்தோட்டம்’, 7. கார்க்கியின் ‘தாய்’, 8. நேருவின் உலக வரலாறு, 9.அண்ணல் காந்தியின் ‘சத்திய சோதனை’, 10.ராகுல் சாங்கிருத்தியானின் ‘வால்கா முதல் கங்கை வரை’.


எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?


பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மனநிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேற வேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.


செய்ய நினைத்து - செய்ய இயலாமல் போன காரியங்கள் என்ன?


மத்தியில் தமிழும் ஆட்சி மொழி; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி; மாநில சுயாட்சி -இவைதான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.


திமுக தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?  


என்னைப் போல் ஒருவர்தான் திமுக தொண்டர். நான் உற்சாகமாக இருக்கும்போது அவரும், அவர் உற்சாகமாக இருக்கும்போது நானும் என மாறி மாறி உற்சாகம் பெறுகிறோம்.


திமுகவை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?


தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித் தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இனவுணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.


சமதர்மக் கொள்கையில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உங்கள் திமுகவிற்கும் இடையேயான வித்தியாசம் என்ன?


தமிழ்நாட்டில் நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று அறிஞர் அண்ணா அடிக்கடி கூறியிருக்கிறார். அதேசமயம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களின் அடிப்படை உரிமைகளில் அரசின் தலையீடு குறைவாக இருக்கும். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின்  கொள்கைக்கும், எங்களுக்கும் இடையேயுள்ள வேற்றுமை.


திமுகவின் இறுதி லட்சியம்?


சமுதாயத் துறையில் சமத்துவம், பகுத்தறிவு. பொருளாதாரத் துறையில் சமதர்மம். அரசியலில் ஜனநாயகம்.


திராவிடம், தமிழ் உணர்வு என நீங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை, இனிவரும் காலங்களிலும் பேசி, அரசியலில் வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா?


திராவிடம், தமிழ் உணர்வு போன்ற லட்சியங்கள், எப்போதும் சுடர்விட்டு எரியும் தீபங்கள். அவை எல்லா காலங்களுக்கும் பொருத்தமானவை. தமிழன் என்பது எப்படி நிரந்தரமானதோ, அதைப் போன்றதுதான் திராவிடமும் தமிழ் உணர்வும். தாய்ப் பாசத்துக்கு எப்படி கால நிர்ணயம் இல்லையோ, அதைப் போல் தமிழ் உணர்வுக்கும் கால நிர்ணயம் கிடையாது.


இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?


அம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள். ஆமாம், சாதியப் பாகுபாடுகள் என் மீது போட்டிருந்த விலங்குகளை உடைக்க வேண்டும் என்றால், அயராத போராட்டம்தான் அதற்கு ஒரே வழி என்பதைத்தான் என்னுடைய வாழ்க்கை எனக்குச் சொல்லிக்கொடுத்தது.


இன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா? எப்படிச் சொல்கிறீர்கள்? 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள். கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்களெல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும்கூட சாதியப் பார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா?


ஆமாம். அவர்களில் பலரிடமும்கூட சாதியப் பாகுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று நடத்தும் அரசியலை உணர்ந்திருப்பதால்தான் சமூக நீதிக்காக எவ்வளவு தூரம் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வளவோ காரியங்களைச் செய்திருந்தாலும், இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வெற்றி கண்டதைப் பெரிய சாதனையாக நாங்கள் நினைப்பதும் அதனால்தான்.


அரசியலில் சாதியின் ஆதிக்கத்தை ஒழிக்கவே முடியாதா?


சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல; மதத்தின் ஆதிக்கத்தையும் ஒழித்தாக வேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைமையைச் சீர்திருத்த வழி உண்டு.


உங்களிடம் உள்ள சமூக நீதி தொடர்பான இந்தப் பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா?


இன்றைக்கு ஊற்றப்படுகின்ற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகிற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


தேசியவாதத்தின் பெயரால், சுதந்திரத்துக்குப் பின் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தேசிய அரசில் கூட்டணி ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்த காலகட்டங்களிலெல்லாம் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு தேசிய அரசுகளின் எதிர்வினை என்ன?


மாநிலங்களின் உரிமைகள் நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே வருவதை உணர்ந்துதான் 40 ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கத்தை திமுக முன்வைத்தது. எப்போதுமே இது தொடர்பாக நாங்கள் பேசிவந்திருக்கிறோம். 1970 மார்ச் 21 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், “மாநிலங்களுக்கு ஏன் அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும்” என்று நான் பேசியதை தேசிய அளவில் அப்போது பல கட்சிகள் ஆதரித்துப் பேசின. நாட்டிலேயே முதன்முதலாக 1974-ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைத் தமிழகச் சட்ட மன்றத்தில்தான் நிறைவேற்றினோம். அப்போது தொடங்கி இப்போது வரை எங்கெல்லாம், எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் மாநிலங்களின் மேலதிக உரிமைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவே செய்கிறோம். தேசிய அரசுகளின் எதிர்வினைகள்தான் எல்லோருக்கும் தெரியுமே!


டெல்லி அரசியல் நோக்கி நீங்கள் நகர்வதற்கான வாய்ப்புகள் பல்வேறு காலகட்டங்களில் உருவாகியிருக்கின்றன. ஏன் டெல்லி நோக்கி நீங்கள் போகவே இல்லை?


என்னுடைய சிந்தனையும் செயலும் எப்போதும் ‘தமிழ் - தமிழர் - தமிழ்நாடு’ என்ற எல்லைக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கின்றன. இங்கேயே செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் ஆயிரமாயிரம் இருக்கும்போது, தேசிய அரசியல் எண்ணம் எப்படி வரும்?


தேசிய அரசியலில் ஒரு மாற்றுப் பாதையை திமுக முன்வைத்தாலும், டெல்லியில் 
ஒரு வலைப்பின்னலைத் திமுகவால் உருவாக்கவே முடியவில்லை. இன்றளவும் திமுகவின் பெரிய பலவீனங்களில் ஒன்றாகவே இது நீடிக்கிறது. இதை உணர்ந்திருக்கிறீர்களா?


உணர்ந்திருக்கிறோம். சரிசெய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறோம்.


உங்கள் அரசியல் வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைச் சொல்லலாமா?


நெருக்கடிகள் நிறைய இருந்தன என்றாலும், வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைக் குறிப்பிட முடியாது. அண்ணா மறைந்தபோது உருவானதுதான் பெரும் நெருக்கடி. அண்ணாவால் சில லட்சியங்களை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்ததைவிடவும் பெரிய நெருக்கடி ஏதும் இல்லை.


நெருக்கடிநிலை கற்றுக்கொடுத்த பெரிய பாடம் என்ன?


அண்ணா அடிக்கடி சொல்வார், “இடையறாத விழிப்புணர்வே, ஜனநாயகத்துக்கு நாம் தரும் விலை” என்று. அந்த உண்மையே, அனுபவரீதியாகக் கற்றுக்கொண்ட பெரிய பாடம்.


திமுகவின் அடையாளமாக அந்நாட்களில் அறியப்பட்ட போர்க் குணம் மிக்க உறுதியான எதிர் அரசியலை இன்று பார்க்க முடியவில்லை. இது தலைமுறை மாற்றத்தின் விளைவா அல்லது கால ஓட்டத்தின் சிதைவா?


திமுகவின் போர்க் குணம் குறைந்துவிடவில்லை; என்றைக்கும் அது குறையவும் குறையாது. இன்றைக்கும் ஜனநாயகத்துக்குப் பாதகமான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், திமுகவிடமிருந்து அந்தப் போர்க் குணத்தை நீங்கள் பார்க்கவே செய்வீர்கள்.


இந்த வயதிலும் அரசியலில் உங்களை உந்தித் தள்ளிக்கொண்டிருப்பது எது?


திராவிட இயக்கத்தை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் சக்திகள். அவற்றை எப்படி வேரோடு களையலாம் எனும் எண்ணமே ஒவ்வொரு நாளும் கண் விழிப்பதிலிருந்து என்னை உந்தித் தள்ளுகிறது!


கருணாநிதி – சிறுகுறிப்பு வரைக?

மானமிகு சுயமரியாதைக்காரன்!

   
 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close