[X] Close

தந்தையுமானவர்! -கனிமொழி, திமுக மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர்,  கருணாநிதியின்  மகள்


father-m-karunanithi-kanimozh-interview

  • சரவணன்
  • Posted: 25 Jul, 2018 11:34 am
  • அ+ அ-


தலைவருக்கும் மறைந்த மாறன் மாமாவுக்கும் நடைபெற்ற வாக்குவாதங்கள், சிறு மோதல்கள் கட்சி வட்டாரங்களில் பிரசித்தி பெற்றவை. எப்போதும் தனக்குச் சரி என்று பட்டதை எவ்வித வெளிப்பூச்சும் இல்லாமல் பேசக் கூடியவர் மாறன். சில நேரங்களில் இருவருக்கும் இடையிலான உரசல் கொஞ்சம் பெரிதாகி, அவர் கோபித்துக்கொண்டு போகும் அளவும் போய்விடும். என்றாலும், சில மணி நேரங்களில் அந்த ஊடல் சரியாகி இருவரும் சமாதானமாகிவிடுவார்கள்.


ஒருநாள் அப்படிப்பட்ட ஒரு விவாதத்தின் முடிவில், மாறன் கோபித்துக்கொண்டு விடுவிடு என்று மாடியிலிருந்து இறங்கி கீழே வந்தார். வெளியில் நின்றுகொண்டிருந்த என்னிடம்  “உங்க அப்பாகிட்ட சொல்லு... எல்லா நேரத்துலேயும் அரசியல்வாதியாவே இருக்கக் கூடாதுன்னு” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறிப் போய்விட்டர். தலைவர் என்னை அழைத்தார். “என்ன சொன்னான் உன் பெரிய அத்தான்?” என்றார். அவர் சொன்னதைத் தலைவரிடம் சொன்னபோது, அவர் முகத்தில் ஒரு புன்னகை ஓடியது. திரும்பிவிட்டார்.


அவர்களுக்குள் அன்று என்ன கருத்து மோதல் என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால், மாறன் மாமா சொன்ன வாக்கியம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. தலைவரை இன்னொரு கோணத்தில் பார்க்கவும் அதுவே உதவியது. தலைவர் ஒரு அரசியல்வாதியாக இல்லாது வாழ்ந்திருக்கக் கூடிய தருணங்கள் இருந்திருக்க முடியுமா? முடியவே முடியாது என்றே தோன்றுகிறது. அரசியல்வாதி எனும் சொல்லை ஒரு குறுகிய கோணத்தில் அணுகாமல், நாம் கொண்டுள்ள கருத்தியல்கள், அரசியல் சார்பு, நம்பும் வாழ்க்கை முறை, பின்பற்றும் நெறி ஆகியவற்றோடு விரித்துப் பார்த்தால், வீடு - பொதுவெளி இரண்டிலும் அவர் வாழ்க்கையில் எந்த வேறுபாட்டுக்குமே இடமிருந்ததில்லை. குடும்பம் தன்னுடைய அரசியல் கருத்தியல்களின் நீட்சியாக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதுபோலவே கட்சித் தோழர்களைத் தன் குடும்பத்தின் பகுதியாகவே வைத்திருந்தார். இன்று தனி இடம், தனிமை, தனிப்பட்ட சூழல் என்று பழகிவிட்ட நமக்கு, சில விஷயங்களை நினைத்துப் பார்க்க, ஜீரணிக்கக்கூட முடியாது. ஆனால், அவருக்குத் தனிப்பட்ட இடம் என்று ஒன்று தனியாக இருந்ததே இல்லை. வீட்டில் கட்சிக்காரர்கள் புழக்கடை வரை வருவது சாதாரண வழக்கம். இன்றளவும் அவரது படுக்கையறையில் அவரைச் சந்திப்பது என்பது கட்சித் தலைவர்களுக்கு வழக்கம்தான். வெளியூரிலிருந்து வரும் கட்சிக்காரர்கள் தலைவர் வீட்டில் தங்குவது என்பதோ, தலைவரோடு நாங்கள் வெளியூர் செல்லும்போது கட்சிக்காரர்களின் வீட்டில் தங்குவதோ மிக இயல்பானதாகவே இருந்திருக்கிறது. இரவு 10 மணிக்குப் படுக்கப் போகும்போது வெளியூரிலிருந்து கட்சிக்காரர்கள் வந்தாலும், “பாக்க வர நேரமாய்யா இது!” என்று லேசாகக் கடிந்துகொள்வாரே தவிர, சந்திக்காமல் திருப்பி அனுப்ப மாட்டார். அந்த நேரத்திலும் அவர்கள் சொல்வதற்கு முழுமையாகக் காது கொடுப்பார்.


குடும்ப விஷயங்களில் கட்சியின் முக்கிய தலைவர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுவது என்பதுதான் வழிமுறையாகவே இருந்திருக்கிறது. நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரி போகும்போது, தலைவரும் பேராசிரியரும் நாகநாதனும்தான் நான் என்ன படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். நான்  அரசியலுக்கு வர வேண்டும் என்ற தலைவரின் கருத்தை என்னிடம் வலியுறுத்திப் பேசி, என்னைச் சம்மதிக்கவைத்தவர் துரைமுருகன். கொஞ்சம் உடல் நலம் சரியில்லை என்றால், தலைவர் முதலில் தேடுவது ‘துரை எங்கே, பொன்முடி எங்கே, வேலு எங்கே? கூப்பிடு!’ என்றுதான்.


மாலையில் அறிவாலயத்திலிருந்து வீடு திரும்பும் தலைவர், இரவு 10 மணி வரை தன்னோடு வரும் கட்சிக்காரர்களோடு பேசிக்கொண்டிருப்பார். உடன் வரும் ஆட்களைப் பொறுத்துப் பேச்சின் கருப்பொருள் மாறும். சிலரோடு பழைய விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுவார், சிலரோடு கொள்கைரீதியான உரையாடல். சிலர் வந்தால் இலக்கியம், புத்தகங்கள். சிலரோடு வம்புப் பேச்சு. இதில் எப்போதும் அவர் பேச்சில் இழையோடும் நகைச்சுவை உணர்வு, அந்த நேரத்தை ஒரு கொண்டாட்டமாகவே மாற்றிவிடும். இந்த உரையாடலில் சீனியர், ஜூனியர், கட்சிக்காரர்கள், வெளியாட்கள், வீட்டில் இருப்பவர்கள் இப்படி எந்தப் பாகுபாடும் இருக்காது. யாரும் கருத்து சொல்லலாம். எல்லார் பேசுவதையும் அவர் ரசிப்பார். அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு ஜுகல்பந்தி. ‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் / மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்ற குறளை அவர் தாரக மந்திரமாகவே வைத்திருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றும். ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால், தன் ஓட்டுநரிடமிருந்து கட்சித் தலைவர்கள் வரை பலரிடமும் கருத்து கேட்டுதான் முடிவெடுப்பார்.


அவரால் மன்மோகன் சிங்கிடம் மதச்சார்பற்ற சக்திகளின் ஒன்றிணைவின் அவசியம் குறித்துப் பேசும் அதே ஈடுபாட்டுடன், என் மகனிடம் தோனியின் அபாரமான ஆட்டத் திறமை குறித்தும் பேச முடியும். வயதில் சிறியவர், கற்றவர், கல்லாதவர், ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்காமல் அவர்களின் கருத்துகளை, யோசனைகளை மதித்துக் கேட்கக்கூடிய எளிமை அவரிடம் எப்போதும் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி தன்னைக் காலத்தில் பொருத்திக்கொள்பவராக இருந்ததே அவருடைய வெற்றியின் ரகசியம் என்றுகூடச் சொல்லலாம்.


அவர் நான் எப்படிப் படிக்கிறேன், எந்த வகுப்பில் படிக்கிறேன் என்றெல்லாம் அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. ஆனால், எனக்குப் புத்தகம் படிப்பது பிடிக்கும் என்று தெரிந்த பிறகு அடிக்கடி, ‘என்ன படிக்கிறாய்?’ என்று கேட்பார். யாராவது அவருக்குப் புத்தகம் பரிசளித்தால், பல நேரங்களில் அதைப் படித்துவிட்டு என்னிடம் தருவார். பிறந்ததிலிருந்தே தலைவரைப் பரபரப்பான மனிதராக, ஒரு தலைவராகப் பார்த்திருந்த எனக்கு, அவருடைய ஆளுமையின் வீரியம், வீச்சு புரியப் பல வருடங்கள் ஆகின. அவரது அரசியலோடு எனக்கு ஏற்பட்ட முதல் புரிதல் நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் ஏற்பட்டது. தானே போலீஸாரை அழைத்து, பெற்ற மகனையே அவர்களிடம் ஒப்படைத்தார். தலைவரின் சொல்லுக்கு மறு சொல் பேசாமல் அண்ணன் ஸ்டாலினும் சிறைக்குச் சென்று பல துன்பங்களை அனுபவித்தார். மாமா, அத்தை, சித்தப்பா என்று சொந்தம் கொண்டாடிய பலர், அப்போது சிறையில் இருந்தார்கள் அல்லது எங்களிடமிருந்து விலகி இருந்தார்கள். எங்கள் வீடு இருந்த தெருவில் அப்போது ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் முள்வேலிதான் தடுப்பு, ஆனால், ஒருசிலரைத் தவிர எங்களோடு யாரும் அதிகம் பேச மாட்டார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து நான் பல முறை வீட்டுக்குச் செல்லாமல், என் அம்மாவையும் பாட்டியையும் விசாரித்துக்கொண்டிருந்த மத்திய அரசு அலுவலகங்களுக்குச் சென்று, அவர்கள் திரும்பும் வரை காத்திருந்து அவர்களோடு வீடு திரும்பியிருக்கிறேன். எங்கள் வீட்டுக்குப் பூ விற்றவரைக்கூட விசாரணை என்ற பெயரில் கூட்டிச்சென்று அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள். எத்தனையோ குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் தலைவரை வந்து சந்தித்துச் சென்ற அதே வீட்டில் வைத்துதான் அவரை நள்ளிரவில் கைதுசெய்து இழுத்துச் சென்ற நிகழ்வும் நடந்தேறியது.


வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றங்களையும் இறக்கங்களையும் பட்டாபிஷேகங்களையும் முள் கிரீடங்களையும் பார்த்த மனிதர் அவர். தலைவரிடம் எனக்கு ரொம்பப் பிடித்தது அவருடைய தளராத தன்னம்பிக்கை. அதேபோல், ‘என்னால்தான் எல்லாமும்!’ என்ற இறுமாப்பை ஒருநாளும் அவரிடம் பார்த்ததில்லை. அவருக்குள் ஒரு சிறிய கிராமத்திலிருந்து பட்டணம் வந்த சிறுவனிடமிருந்த அந்த ஆச்சரியம் என்றும் குறைந்ததில்லை. புதிய விஷயங்களை, மாறும் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் எப்போதும் தணிந்ததில்லை. அதனால்தான் அவரால் கடலைப் பொட்டலம் கட்டப் பயன்பட்ட காகிதத்தைக்கூடப் படிக்காமல் தூர எறிய முடிந்ததில்லை!

குடும்ப விஷயங்களில்கூட கட்சியின் முக்கிய தலைவர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுவது என்பதுதான் வழிமுறையாகவே இருந்திருக்கிறது! 

   
 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close