[X] Close

யூனிட் ரயில்... பயணிகள் கவனிக்கவும்!


unit-train

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Jul, 2018 14:38 pm
  • அ+ அ-

இனிது இனிது பயணம் இனிது என்பார்கள். ரயிலேறினாலோ பஸ் ஏறினாலோ ‘ஹேப்பி ஜேர்னி’ என்போம். ஆனால், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த விபத்து, அலட்சியப் பயணத்தால் ஏற்பட்ட பலி என்பதாகவும் பார்க்கப்படுகிறது. யூனிட் ரயில் பயணிகள், கொஞ்சம் கவனமாகவும் அக்கறையுடனும் இனியேனும் பயணம் செய்வார்களா என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆசையும்!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 10 மணி வரையும் பிறகு மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிவரையிலுமாக எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

ரயிலுக்குக் காத்திருக்கும் பெரும்பாலானோர், ‘ஏறின உடனேயே உக்கார சீட் கிடைச்சா நல்லாருக்குமே’ என்று நினைப்பவர்கள். அதேசமயம் பலரும் உட்கார இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூட, பாதைகளில் நின்றுகொண்டு அரட்டை அடித்தபடியோ, போனில் பேசியபடியோ, போனை நோண்டிக்கொண்டோ வருபவர்கள் இருக்கிறார்கள்.

இரவு 8 மணிக்கு மேல் ஓரளவு பெட்டிகள் பயணிகளின்றி காலியாக இருப்பதாலும் அந்த சமயத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்பதாலும் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் முதல் வகுப்பு பெட்டிகளிலும் ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

ஆனால், நடக்கிற விபத்துகளையெல்லாம் பார்க்கிற போது, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில்வே போலீசார் இருந்து, பயணிகள் ஏறுமிடத்தில் நின்றுகொண்டு பயணிப்பவர்களை அறிவுறுத்தி, உள்ளே அனுப்பினாலே பாதி விபத்துகளைத் தவிர்க்கலாம் என்கின்றனர் பயணிகள்.

பீச் ஸ்டேஷனில் இருந்துதான் யூனிட் ரயில்கள்  புறப்படுகின்றன. அப்படி அங்கேயே ஏறுகிறவர்கள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, திருமால்பூர் என்று நெடுந்தூரம் பயணிப்பவர்களாக இருந்தாலும், பாதையில் தொங்கிக்கொண்டு, காற்று வாங்கியபடி, கலாய்த்தபடி, பான்பராக் எச்சில் துப்பியபடி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இப்படி தொங்கிக் கொண்டு வருவதை சாகசமாகவும் பெருமையாகவும் நினைக்கிறவர்கள், வீட்டில் உள்ளவர்களை ஒருநிமிடம் நினைத்துப்பார்த்தாலே போதும். ஆனால், இவர்களின் அலட்சியம், அதையெல்லாம் சிந்திக்கவைக்காமல், மறக்கடித்துவிடுகிறது என்று  வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் பயணிகள். 

இன்னும் சிலர் இருக்கிறார்கள். பாதையில் தொங்கிக் கொண்டே வருவார்கள். ஒரு ஸ்டேஷன் வரும்போது இறங்கி, அடுத்த பெட்டிக்கு ஓடிச் சென்று ஏறுவார்கள். பிறகு அடுத்த ஸ்டேஷனில் நின்றதும் வேறொரு பெட்டி நோக்கி ஓடுவார்கள். இன்னும் சிலர் செய்வது காமெடி கலந்த வேதனை. ஸ்டேஷன் வந்ததும் தொங்கிக்கொண்டிருப்பவர்கள் இறங்குவார்கள். பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழிவிடுகிறார்களாமாம்!

ஏறிவிட்டபிறகு இவர்கள் உடனே ஏறவேண்டியதுதானே. ஆனால் செய்யமாட்டார்கள். விசில் சத்தம் கொடுக்கப்பட்டு, பச்சைக் கொடி அசைக்கப்பட்டு, வண்டியும் நகரத் தொடங்கும். அதுவரை ஸ்டைலாக பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருப்பார்கள். வண்டி வேகமெடுக்கும்போது, இவர்களின் நடையும் ஓட்டமாக வேகமெடுக்கும். அப்படியே ஓடிவந்து, பாய்ந்து பெட்டிக்குள் தங்களை திணித்துக்கொள்வார்கள். என்ன மாதிரியான விளையாட்டு இது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விளையாட்டு வினையாகிக் கொண்டுதான் இருக்கிறது. இதைப் பார்த்தாவது எவரேனும் விழிப்பு உணர்வுடன் நடந்துகொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை என்பதுதான் வேதனை என்கிறார் ரயில்வே போலீஸ் அன்பர் ஒருவர்.

எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதையில், யூனிட் ரயிலை இன்று இயக்கினார்கள். அதனால்தான் பரங்கிமலையில் விபத்தும் பலியுமாகிவிட்டன என்கிறார்கள். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தொங்கிக்கொண்டு வருவது அபாயகரமானது என்பதே மிக மிக முக்கியம். அதை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது என்று பயணிகள் பலரும் ஆதங்கப்படுகிறார்கள்; கோபப்படுகிறார்கள்.

‘டிராபிக் போலீஸ் சொன்னாத்தான் ஹெல்மெட் போடணும்’, ‘வீட்டார் சொன்னாத்தான் மெதுவா வண்டி ஓட்டணும்’, ‘ரயில்வே போலீஸ் அபராதம் முதலான நடவடிக்கையில் இறங்கினால்தான், ஒழுங்குக்கு வரணும்’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அலட்சியமாகப் பயணிப்பது, அவர்களுக்கு ஆபத்து இல்லை; நமக்கும் நமக்கு ஏற்படும் இழப்புகளாலோ நாமே இழப்பாகிப் போவதாலோ நம் குடும்பத்தின் நிலை என்ன என்பதை நாம்தான் உணரவேண்டும். உணர்ந்து,தெளிந்து, புரிந்து செயல்படவேண்டும்!

பயணம் இனிதாகட்டும்; பயணம் பாதுகாப்பாகட்டும்!  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close